திருவாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குத் தண்டனை ஏன் ஒழிக்கப்பட்டது?

அக்டோபர் – 2,  காந்தியார் பிறந்தநாள். காந்தியார் ஜாதகப்படி அவர் 100 வயதையும் கடந்து வாழ்வார் என்று பிரபலமான ஜோதிடர்கள் கணித்தார்கள். ஆனால் அவர் 100 வயது கடப்பதற்கு முன்பே கோட்சே, நாராயண ஆப்தே இருவரும் காந்தியை மதவெறிக்காக சுட்டுக் கொன்றுவிட்டனர். இதற்காக இரண்டு பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இருவரும் சித்பவன் பார்ப்பனர்கள்.

நீதிமன்றத்தில் கோட்சே ஒரு வாக்குமூலத்தை தந்தார். தான் காந்தியை கொன்றதை அவர் நியாயப்படுத்தினார். அதற்கு கீதையை அவர் தனக்கு துணையாக அழைத்துக்கொண்டார். “கீதையில் கிருஷ்ணபரமாத்மா அதர்மத்தை அழிப்பதற்காக கொலை செய்வது பாவமல்ல என்று கூறியிருக்கிறார். அழிவது உடல் தானே தவிர ஆன்மா அல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார். அந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் காந்தியை கொலை செய்தேன்” என்றார். நீதிமன்றம் இதை ஏற்கவில்லை. இருவருக்கும் தூக்கு தண்டனையை விதித்தது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மெக்காலே என்ற அதிகாரி எந்த குற்றத்தை செய்த எந்த வர்ணத்தை சேர்ந்தவர் ஆனாலும் அவர்களுக்கு தண்டனை ஒரே மாதிரியாகத் தான் வழங்க வேண்டும் என்று கிரிமினல் சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக்கினார். அதற்கு முன்பு “இந்தியாவில் எந்த வர்ணத்தார் எந்த குற்றத்தை செய்தார் என்ற அடிப்படையில் தான் தண்டனைகள் மனு தர்மப்படி வழங்கப்பட்டு வந்தன.” அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது மெக்காலே தான். மெக்காலே சட்டம் வராமல் இருந்திருக்கும் என்று சொன்னால் கோட்சேவும், ஆப்தேவும் நிச்சயமாக தூக்கிலிடப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு மனுசாஸ்திரப்படி இரண்டு தலை முடிகள் மட்டுமே வெட்டப்பட்டு விடுவிக்கப்பட்டு இருப்பார்கள்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த சர். சி.பி. ராமசாமி அய்யர் மெக்காலே கொண்டுவந்த இந்த கிரிமினல் சட்டத்தை அமல்படுத்துவதற்கு மறுத்தார். தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசு அந்த சமஸ்தானத்திற்கு அழுத்தங்களைத் தந்தது. அதற்குப் பிறகு தான் எங்களுடைய சமஸ்தானத்தில் தூக்கு தண்டனையை ஒழித்துவிடுகிறேன் என்று சர்.சி.பி.ராமசாமி அய்யர் அறிவித்தார். அதற்கு காரணம் அனைவருக்கும் பொதுவான கிரிமினல் சட்டத்தை அமல்படுத்தினால் பிராமணர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டி வருமே என்பதற்காக தூக்கு தண்டனையையே ஒழிப்பதாக அறிவித்தார். இது தான் அந்த சமஸ்தானத்தில் தூக்கு தண்டனை ஒழிந்ததற்கான வரலாற்றுப் பின்னணி.

இந்த நிலையில் தான் காந்தியுடைய பிறந்தநாளை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தேர்ந்தெடுத்து ஊர்வலம் நடத்துவதற்கு தமிழ்நாட்டில் திட்டமிட்டார்கள். மக்கள் சக்தியும், மதச்சார்பற்ற சக்தியும் தன்னுடைய எதிர்ப்பின் காரணமாக முறியடித்துக் காட்டியிருக்கிறது.

பெரியார் முழக்கம் 06102022 இதழ்

You may also like...