சூர்யா திரைப்படம் பா.ம.க. மிரட்டலுக்கு பதிலடி

செஞ்சி பாலசரவணா திரையரங்கில் 9.3.2022 அன்று நடிகர் சூரியா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று பா.ம.கவினர் கடிதம் முலம் மிரட்டல் விடுத்தனர். கடிதத்தை திரையரங்க உரிமையாளர் காவல்துறைக்கு அனுப்பி உள்ளார் . மறுநாள் 10.03.2022 பா.ம.கவினர் திரைப் படம் திரையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையரங்கிற்கு ஒருநாள் பாதுகாப்பாக காவல்துறையினர் இருந்தனர். படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

பா.ம.கவினர் தொடர் மிரட்டலால் திரைப்படம் வெளியிடவில்லை. 11.03.2022 அன்று அம்பேத்கர் மக்கள் கட்சி மழைமேனிபாண்டியன், படம் பார்க்கச் சென்று கேட்டபோது நடந்த நிகழ்வுகளை சொல்லி படம் வெளியிட முடியாது என்றனர். அ.ம.கட்சியினர் வெளியிட சொல்லி கோசங்களை எழுப்பினர். நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு அ.ம.கட்சி மழை மேனி பாண்டியன் பேட்டியளித்தார்.

இந்த தகவலறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பெரியார் சாக்ரடீஸ் அரசியல் கட்சிகள் இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். கருத்து சுதந்திரம் சமூகநீதி கூட்டமைப்பில் தி.மு.க. துரைதிருநாவுக்கரசு, ம.தி.மு.க.துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மணி. திராவிடர் கழகம் கோபண்ணா, அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் மழைமேனிபாண்டியன் , வி.சி.க.மகிழ்வரசு, மனிதநேய மக்கள் கட்சி அலிகான், அஷ்ரப், சி.பி.எம்.  மாதவன். சகாதேவன், பொதுவுடமை செல்வராசு, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் ஆல்பர்ட், மக்கள் ஜனநாயகக் குடியரசு கட்சித் தோழர்கள் வையவன், சக்திவேல் , விஜய் மக்கள் இயக்கம்  குணாசரவணன் ஆகியோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கூட்டமைப்பில், 1. திரையரங்க உரிமையாளரை சந்தித்து திரைப்படத்தை வெளியிட வேண்டும்; 2. காவல்துறை மாவட்ட துணைக்கண்காணிப்பாளரைச் சந்தித்து பா.ம.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; 3. சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களைச் சந்தித்து தடை செய்யப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட வலியுறுத்த வேண்டும் என்றும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பு தோழர்கள் திரையரங்க உரிமையாளரையும் அமைச்சர் கே.எஸ். மஸ்தானைச் சந்தித்து திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கடிதம் வழங்கிய போது அமைச்சர் திரைப்படம் வெளியிட சொல்வதாக உறுதியளித்தார்.

 

பெரியார் முழக்கம் 17032022 இதழ்

You may also like...