வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்; ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் கூறுகிறது
தமிழ்நாட்டை திராவிட ஆட்சி சீர்குலைத்துவிட்டது என்று சில தமிழ்த் தேசிய அமைப்புகளும், கழகங்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று பாஜகவினரும் பேசி வருகின்றனர். இதற்கு பதிலடி தருகின்ற வகையில் ஒன்றிய ஆட்சியின் நிதி ஆயோக் என்ற அமைப்பு, இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பிலும், வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்று நிற்கிறது என்று அண்மையில் வெளியிட்ட மூன்றாவது அறிக்கையில் கூறி இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரையை நிதி ஆயோக் அமைப்பு தன்னுடைய அறிக்கையில் பதிவு செய்து இருக்கிறது. இன்றைய இந்து ஆங்கில நாளேட்டில் பிப்ரவரி 11,2022 இது குறித்து வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான கருத்துக்களை கீழே தருகிறோம்.
நிதி ஆயோக் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள்.
1) வறுமை ஒழிப்பில் கேரளா, ஆந்திரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாடு மூன்று புள்ளிகள் கூடுதலாக பெற்று முதலிடத்தில் நிற்கிறது. கேரளா 83, தமிழ்நாடு 86 புள்ளிகள்.
2) திட்டங்களை சிறப்பாக அமுல்படுத்தக்கூடிய மிகச்சிறந்த நிர்வாக கட்டமைப்புகள் மாவட்ட அளவில் தமிழ்நாட்டில் வலிமையாக இருப்பதே இதற்கு காரணம் என்று கேரள அரசின் முன்னால் தலைமைச் செயலாளரும், இப்போது கேரள நிதி ஆணையத்தின் தலைவராக இருப்பவரும் ஒன்றிய ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றியவருமான எஸ்.எம் விஜயானந்த் எழுதிய கட்டுரையில் கூறுகிறார்.
3) மாநில அரசின் திட்டங்கள் மட்டுமின்றி ஒன்றிய அரசின் திட்டங்களும் மிகத் திறமையாக தமிழ்நாட்டில் அமுலாக்கப்படுகின்றன. உள்ளூர் மட்டத்தில் தரவுகளை திரட்டும் தமிழ்நாட்டின் நிர்வாக கலாச்சாரம் இந்த வெற்றிக்கு மிகவும் உதவுகிறது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
4) மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத் திட்டம் தமிழ்நாட்டில் எப்படி செயல்படுகிறது என்று 12 மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் பி.ரகுபதி ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறார். கொரோனா காலத்தில் இத்திட்டம்தான் உணவு கிடைப்பதற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது என்று கூறுகிறார். இத்திட்டத்தில் பங்கு பெறுவோர் பெரும்பாலானோர் பெண்கள், இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தங்களது குடும்பத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர் என்றும் முதியவர்கள், உடல் நலம் குறைந்தோர், ஊனமுற்றோருக்கு கொரோனா காலத்தில் தனி கவனம் தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
5) கேரள முன்னால் தலைமைச் செயலாளர் விஜயானந்த் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களின் மிகச் சிறப்பான பங்களிப்பை சுட்டிக்காட்டுகிறார். வறுமைப் பிடியில் இருப்பவர்களை கண்டெடுப்பதிலும் அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதிலும் இந்த சுய உதவிக் குழுக்கள் மிகப் பெரும் பங்காற்றியிருக் கின்றன. அது பாராட்டத்தக்க பங்கு என்று அவர் பதிவு செய்து இருக்கிறார்.
6) தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பின்தங்கிய விளிம்பு நிலை மக்களை நோய்த் தொற்றுகளிலிருந்து காப்பாற்றி யதில் பெரும் பங்காற்றியிருக்கிறது என்று விஜயானந்த் சுட்டிக்காட்டுகிறார்.
7) தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டம் குறிப்பாக இலவச அரிசித் திட்டம் வறுமை ஒழிப்பில் மிகப் பெரும் பங்காற்றியதை தமிழ்நாட்டின் நிதித் துறைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற கே.சண்முகம் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.
பொருளாதாரத் துறையில் மட்டுமின்றி சமூக நலன் மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்றதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதோடு மாநில கல்வித் துறை பள்ளிக்குச் செல்லாத ஆயிரக்கணக்கான குழந்தைகளை, பள்ளிக்குக் கொண்டு வருவதில் மாவட்ட நிர்வாக அமைப்புகளோடு இணைந்து மகத்தான பங்களிப்பை வழங்கி இருக்கிறது. என்று கோடிட்டு காட்டுகிறார்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு, துப்புரவுத் துறைகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்றும் முன்னால் நிதித்துறை செயலாளர் கே. சண்முகம் கூறுகிறார்.
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிதி ஆயோக், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று அறிக்கை வெளியிடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவினரும், சில தமிழ்த்தேசிய அமைப்புகளும் திராவிட இயக்கத்தை எந்தத் தரவுகளும் இன்றி குற்றக் கூண்டிலே நிறுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள். மக்கள் சிந்திக்க வேண்டும்.
பெரியார் முழக்கம் 17022022 இதழ்