தலையங்கம் – பார்ப்பனியத்தின் சதி வலை
‘இந்து’க்களை ஒரே அணியாக தமிழகத்தில் திரட்ட முடியாத நிலையில் வெவ்வேறு ஜாதிக் குழுக்களை தங்கள் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்க்கும் முயற்சிகளில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. இந்து மத அடையாளங்களுக்குள் முடங்கிவிடாமல் தமிழகத்தில் பல்வேறு படி நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஜாதிக் குழுக்கள் அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தங்கள் உரிமைப் போரை முன்னெடுத்தன. இதுவே பெரியார் வலியுறுத்திய ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற கோட்பாடு. பார்ப்பன மேலாண்மைக்கும் ஆதிக்கத்துக்கும் அரணாக நின்ற ‘இந்து ஓர்மை’க்கு வேட்டு வைத்தது, இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெரியார் போராட்டத்தால் அரசியல் சட்டத்தில் நிகழ்ந்த முதல் திருத்தத்தின் வழியாக ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ சமூக கல்வி அடிப்படையிலான இடஒதுக்கீடாக மாறி அது தமிழ்நாட்டில் ஆட்சிகளைக் கடந்து தீவிரமாக செயலாக்கம் பெற்றது. உரிமை மறுக்கப்பட்ட ஜாதிக் குழுக்கள் முன்னேறத் தொடங்கின. உண்மையில் ‘தலைவிதி’, ஜாதி தர்மம்’ என்ற பார்ப்பனக் கோட்பாடுகளை உடைத்து நொறுக்கிக் கொண்டு உருவானதே இந்த முன்னேற்றம்! இந்த நிலையில், இந்த ஜாதிக் குழுக்களை மீண்டும் ‘இந்துத்துவ’ அரசியலுக்கு வலைவீசி இருக்கும் முயற்சிகள் தமிழகத்தில் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன.
பட்டியல் இனப் பிரிவிலுள்ள 7 ஜாதிக் குழுக்களை ‘தேவேந்திர குல வேளாளர்’ என்ற பெயரில் அறிவிக்க வேண்டும் என்று, இந்தப் பிரிவைச் சார்ந்த சிலர், மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் அமீத் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களுக்கான இடஒதுக்கீடுகளும் வேண்டாம் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்கு திரை மறைவில் திட்டங்களைத் தீட்டி, செயல் வடிவம் கொடுத்திருப்பவர், ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சார்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி எனும் பார்ப்பனர்.
இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முன்னேறியவர்கள் எவராக இருந்தாலும், அந்த உரிமை இனியும் தனக்கோ, தனது குடும்பத்துக்கோ வேண்டாம் என்று அறிவிக்க உரிமை உண்டு. சொல்லப் போனால், அது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு கிடைத்த உண்மையான வெற்றி என்றே கூற வேண்டும். ஆனால், ஒட்டுமொத்த ஜாதிக் குழுவுக்கும் இந்த உரிமை வேண்டாம் என்று முடிவெடுக்கும் உரிமையை இவர்களே எப்படி தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டார்கள்? சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான அதிகாரத்தைத் தீர்மானிக்கும் பார்ப்பனியத்தின் பண்புதானே இது? இனியும், நாங்கள் ‘பட்டியல் இனப் பிரிவில்’ இருக்க மாட்டோம் என்ற அறிவிப்பில், ‘அவர்கள் கீழ்ஜாதியினர்; அதைவிட நாங்கள் உயர் ஜாதிக்காரர்கள்” என்ற பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிப் பார்வைதானே அடங்கி யிருக்கிறது? ‘மேல்-கீழ்’ என்ற ஜாதிய கட்டமைப்பை மேலும் உறுதிப்படுததக்கூடிய செயல்தானே இது?
‘இட ஒதுக்கீடே வேண்டாம்’ என்று கூறியிருப்பதை வியந்து பாராட்டும் அமீத்ஷாவை கேட்க விரும்புகிறோம், அரியானாவில் அரசியலிலும் பொருளாதாரத்திலும் வலிமையான சக்திகளாகத் திகழும் ‘ஜாட்’ பிரிவினரை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, தேர்தல் ஆதாயத்துக்காக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின்பரிந்துரைக்கு எதிராக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. பின்னர், உச்சநீதிமன்றம் இதை ரத்து செய்தது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், இந்த வழக்கின் மேல்முறையீட்டில் ஜாட் பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற முந்தைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் கருத்தையே மோடி ஆட்சியும் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. இப்போது கேட்கிறோம்; ஜாட் சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்று வாதாடும் இதே பா.ஜ.க., தமிழ்நாட்டில், இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூறும் ஜாதிப் பிரிவினரை பாராட்டிப் புகழ்வது ஏன்? ஏன் இந்த இரட்டை வேடம்? அது மட்டுமல்ல, குருமூர்த்தி, பச்சையாகவே ஜாதி வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஜாதி இந்தியாவின் ‘சமூக மூலதனம்’ (ளுடிஉயைட உயயீவையட) என்கிறார். இந்து சாஸ்திர புராணங் களால் இழிவுக்கு உள்ளாக்கப்பட்ட ‘சூத்திரனும்’, ‘பஞ்சமனும்’ உழைத்து, பார்ப்பன உயர்ஜாதிக் கூட்டத்தின் சுரண்டலுக்கு உதவு வதால், குருமூர்த்திகளுக்கு இது ‘சமூக மூலதனம்’ ஆகத் தெரிகிறது. அது மட்டுமல்ல, “இன்று இந்தியா உயர்ந்து நிற்கிறது என்றால், அது ஜாதிகளால் தான். எனவே ஜாதி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஜாதியும் தன்னை உயர்ந்தவர் என்று நினைத்தால் நாட்டில் ஜாதி சண்டையே வராது” என்றும் குருமூர்த்தி, ‘தத்துவ விளக்கம்’ தந்திருக்கிறார். ஒரே கேள்வி; ஒவ்வொருவரும் தங்களை உயர்ந்த ஜாதி என்று நினைத்துக் கொண்டால், யாரைவிட உயர்ந்த ஜாதி என்ற கேள்வி அடுத்து வராதா? அப்படி ஒரு கேள்வி வரும்போது, உயர்ந்த ஜாதிகளாகக் கருதிக் கொண்டிருப்போருக் கிடையே யாரை விட யார் உயர்ந்தவர் என்ற மோதல் வெடிக்காதா? குருமூர்த்திகளிடம் இதற்கு என்ன பதில் இருக்கிறது என்று கேட்கிறோம்.
எல்லா ஏழைகளும் தங்களை வசதியானவர்கள் என்று நினைத்துக் கொண்டால், ஏழை பணக்காரன் பிரச்சினைகளே இல்லாது போய்விடும் என்று குருமூர்த்தியின் ‘தத்துவத்தை’ மேலும் நீட்டித்துப் பார்த்தால் மக்கள் வாய்விட்டு சிரிப்பார்கள்!
“ஒவ்வொரு ஜாதிக் குழுவும் தனித்தனியாக பிரிந்து நின்று, தங்கள் ‘பிறவி’ அடையாளத்தைக் காப்பாற்ற வேண்டும். ஜாதிக் குழுக்கள் கலந்து ஒரே சமுதாயமாக உருமாற்றம் பெற்றுவிடக் கூடாது” என்பதே குருமூர்த்திகளின் கவலை. அப்போதுதானே ‘பிறவி’ வழியாக ‘சமூக மூலதனம்’ தங்களுக்கு வழங்கி வரும் பாரம்பர்ய ஆதிக்கத்தையும் சுரண்டலையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்?
‘தேவேந்திரன்’ ஆரியர்களின் கடவுளாகப் போற்றப்படுகிறவன். அந்தப் பெயரை சூட்டிக் கொண்டு ‘இந்து’ அடையாளங்களுக்குள்ளே தங்களை மீண்டும் முடக்கிக் கொள்ள முன் வருவதும், பார்ப்பனிய வலைக்குள் மீண்டும் சிக்கிக் கொள்ள தாங்களாகவே துடித்துக் கொண்டிருப்பதும், போராடி பெற்ற சமூக உரிமைகளையும், சுயமரியாதையையும் அடகு வைக்கும் ஆபத்தான முயற்சி என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பெயர் மாற்றங்களாலேயே பெருமை கிடைத்து விடாது. அனைத்துப் பிரிவு மக்களையும் சமப்படுத்தும் ஒரு சமூக அமைப்பை நோக்கி முன்னேற வேண்டும்; அது ஜாதி அற்ற சமுதாயமாகவே இருக்க முடியும். ஜாதி பெருமைகளில் ‘சுகம்’ காணும் சமுதாயமாக இருக்க முடியாது!
பெரியார் முழக்கம் 13082015 இதழ்