உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு பட்டாசு வெடிப்பது மத சுதந்திரம் அல்ல!
பட்டாசுகளுக்கு முழுமையான தடைஇல்லை என்றாலும் ‘தீபாவளி’ நாளில் இரவு 8 மணியிலிருந்து 10 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.
6 மாதம் மற்றும் 14 மாத குழந்தைகள் சார்பில் அவர்களின் பெற்றோர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.இந்தப் பட்டாசு வெடிப்பால் உருவாகும் மாசு – அதனால் தங்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகளால் உயிர் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது. எனவே பட்டாசுகளுக்கே தடை போட வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த தொழிலாளர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற் சங்கமான ‘சி.அய்.டி.யு.’ சங்கம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். “காற்று மாசுபடுவதற்கும் அதன் மூலம் நோய் பரவுவதற்கும் பட்டாசு தயாரிப்பாளர்கள் காரணம் அல்ல; காற்று வீசும் திசை மற்றும் அப்போதைய தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக பட்டாசுக்கு தடை விதிக்கக் கூடாது; விற்பனையை ஒழுங்குப்படுத்தலாம்” என்று தொழிலாளர் சங்கம் சார்பில் வாதிடப்பட்டது.
பட்டாசு தயாரிப்பில் பெரும்பாலும் குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த குடும்பங்களே ஈடுபட்டு கடும் நோய் பாதிப்புக்கு உள்ளாகி, குறைந்த வயதிலேயே மரணத்தைத் தழுவும் அவலம் தான் சமூக எதார்த்தம். அதுவும் பட்டாசு தயாரிக்கும் முதலாளிகளிடம் முன்கூட்டியே வாங்கிய கடனுக்காக வட்டியுடன் சேர்த்து செலுத்துவதற்கு இவர்கள் இந்த நச்சுத் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். பல இலட்சம் குடும்பங்களுக்கு இந்தத் தொழில் வாழ்வாதாரம் என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையை நஞ்சாக்கிக் கொண்டு வாழும் வாழ்க்கை என்ற உண்மையை மறுத்துவிட முடியாது. இப்படி ஒரு ‘உயிரை மாய்க்கும்’ வேலையை ‘தொழிலாக’ அங்கீகரிப்பதே சரிதானா என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டியிருக்கிறது. கையால் மலம் எடுக்கும் மக்கள், அந்த இழி தொழிலை செய்யக் கூடாது என்று கூறினால், அவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்வி கேட்பதில் அர்த்தமும் இல்லை; மனிதமும் இல்லை. எனவே பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் மக்களை அதிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வதாரத்துக்கு மாற்றுத் திட்டங்களை உருவாக்குவதே சமூக நலனில் கவலை கொண்ட ஆட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் கடமையாக இருக்க முடியும்.
தொழிற்சங்கம் சார்பில் மற்றொரு வாதமும் முன் வைக்கப்பட்டது. தீபாவளி ஒரு மதத்தின் பண்டிகை; அந்த மதப் பண்டிகையில் பட்டாசுகளையும் வெடிப் பது அடிப்படையான மதக் கடமை; எனவே அந்த மதக் கடமையில் குறுக்கிடுவது மத அடிப்படை சுதந்திரத்தில் (சட்டத்தின் 25ஆவது பிரிவு) குறுக்கிடு வதாகும்” என்று மத சுதந்திரத்தோடு பட்டாசு வெடிப்பதை தொடர்புபடுத்தி வாதிட்டார்கள். நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷன் அமர்வு இந்த வாதத்தை நிராகரித்து விட்டது. “மத சுதந்திரத்திற்கான அரசியல் சட்டப் பிரிவு 25 – மனித உயிர் வாழ்க்கையை உறுதி செய்யும் சட்டப் பிரிவு 21க்குக் கட்டுப்பட்டதேயாகும். ஒரு குறிப்பிட்ட மதத்தின் ‘பழக்கம் – சடங்கு’ மக்களின் ஆரோக்கியம் – உயிர் வாழ்தலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமானால் – அத்தகைய சடங்கு – பழக்கங்களுக்கு (சுநடபைiடிரள ஞசயஉவiஉந) 25ஆவது பிரிவின் கீழ் உரிமை கோர முடியாது” என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒரு சமூகமாக – பட்டாசு வெடித்து விழா கொண்டாடுவோருக்கு தனியாக ஒரு இடத்தை மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்புகளுடன் ஒதுக்கித் தரலாம் என்றும், பட்டாசு ஒலி – பாதிப்பை ஏற்படுத்தாத அளவில் இருக்க வேண்டும். இதைக் கண்காணிக்கும் பொறுப்பை பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பான ‘பெசோ’ ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பட்டாசு தொழிலில் ஈடுபடுவோருக்கு பாதிப்புகள் நேர்ந்து விடக் கூடாது என்ற நோக்கத்தோடு சமரசமான இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், “இது தொடக்கமாக எடுத்துள்ள முடிவுதான். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க நீதிமன்றம் தயங்காது” என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
மதப் பண்டிகைகள் – புராணக் கதைகளின் அடிப்படையில் பார்ப்பனியத்தால் உருவாக்கப் பட்டவை. அதன் தத்துவங்கள் – ஆரியர்களை உயர்த்தி, திராவிடர்களை இழிவுபடுத்துவதற்கும் அந்த ‘இழிவை’ திராவிடர்கள் பெருமையாகக் கருதி – ஆரியத்துக்கு அடங்கிப் போக வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பண்டிகைகள் சமுதாயத்துக்கு உணர்த்துவதற்குமாகவே உருவாக்கப் பட்டவை.
தேவ-அசுரப் போராட்டங்கள்தான் இந்தப் பண்டிகைகளின் மய்யமான கருத்து. இந்தப் புராணப் புரட்டுகளை நீண்டகாலம் மக்களிடம் நிலைபெறச் செய்ய முடியாது என்பதால்தான் அதை கொண்டாட்டமாக மாற்ற பட்டாசு, புத்தாடை, இனிப்பு, எண்ணெய்க் குளியல் என்ற பொழுது போக்குகளை இணைத்தார்கள்.
தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நடிகைகள் பேட்டிகள், தள்ளுபடி விற்பனைகள் என்று பொழுது போக்குகளையும் வணிகத்தையும் மதத்தோடு இணைத்துக் கொண் டுள்ளன.
இந்த நிலையில் ‘மனித உயிர் வாழ்க்கை’க்கு அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைக்கு கட்டுப்பட்டதே ‘மத சுதந்திர உரிமை’ என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் இத் தீர்ப்பை வரவேற்கிறோம். இடதுசாரி, முற்போக்கு அமைப்புகளின் தொழிற்சங்கங்கள் பட்டாசு வணிகத்துக்காக வாதாடுவதில் அடங்கியுள்ள சமூக – பண்பாட்டு – மதவாத பிரச்னைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.
பெரியார் முழக்கம் 01112018 இதழ்