நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !
நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. அக்குழு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது.கருத்துக்கள் சென்று சேர கடைசி நாள் நாளை 22.06.2021
நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரிடம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் கீழ்காணும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : neetimpact2021@gmail.com
– திராவிடர் விடுதலைக் கழகம்,
21.06.2021
———————————————
நீட் தேர்வு ஏன் வேண்டாம்?
12 ஆண்டுகளாக பள்ளிகளில் பயின்று ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்துள்ள மாணவர்களின் எந்த ஒரு தேர்வும் மதிக்கப்படாமல் நீட் என்ற பெயரால் எழுதும் வடிகட்டும் ஒற்றை தேர்வை மட்டும் அளவீடாக கொண்டு முடிவு செய்வது நியாயமானதல்ல.
பள்ளிகளில் எழுதப்படும் கேள்விக்கான பதிலை Descriptive Answer என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எடுத்துக்காட்டாக இதயத்தைப் பற்றி கேட்கிற கேள்விக்கு இதயத்தின் படத்தை வரைந்து பாகங்களை குறித்து செயல்பாடுகளை விளக்குக என்பது கேள்வியாக இருக்கும்.அதற்கு சரியான விடை எழுத வேண்டுமென்றால் இதயத்தின் வடிவம் தெரிய வேண்டும். பாகங்களின் பெயர்கள் தெரிய வேண்டும்.அவற்றின் செயல்பாடுகள் தெரிய வேண்டும் அவற்றை தன் எழுத்தின் வழியாக விளக்க வேண்டும் என்பதுதான் அந்த டிஸ்கிரிப்டிவ் ஆன்சர் என்பது. ஆனால் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விமுறை Objective Answer எனப்படும் ஒரு விடையைச் சொல்லி அவற்றில் எது சரி என்று கேட்பது மட்டும்தான். ஒருவேளை தன் விருப்பத்திற்கு ஏதேனும் ஒரு விடைகளுக்கு பதில் தெரியாமலேயே போடுகிற Tick மார்க் கூட அவருக்கு மதிப்பெண்ணைத் பெற்றுத்தரும் என்ற ஆபத்து நீட் தேர்வு முறையில் இருக்கிறது.
இந்த ஒற்றைத் தேர்வு தான் நம் எதிர்கால கல்வி வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற பதட்டத்தோடு தேர்வை சந்திக்கும் மாணவர்களின் மனநிலை அவருடைய விடைத்தாள்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதுவரை நடந்து இருக்கிற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரங்களைப் பார்க்கிறபோது நகரத்து மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றவராகவும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாகவும் இருப்பதைக் காண்கிறோம்.மேலும் நீட் தேர்வில் இரண்டாம் முறை மூன்றாம் முறை முயற்சி செய்தவர்கள் தான் ஐம்பதுக்கு மேற்பட்ட விழுக்காட்டில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.முதல் முறையாக எழுதி தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கிறது.எனவே நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்றால் சில ஆண்டுகளை தேர்வு எழுதியே கழிக்கக் கூடிய வாய்ப்பும் மூன்றாண்டு பயிற்சிக்கு செலுத்தவேண்டிய கட்டணம் வைத்திருக்கிற பொருளாதார நிலையும் இருக்கிற மாணவர்கள் மட்டும்தான் நீட்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையும் கிராமப்புற ஏழை மாணவர்களை வஞ்சிப்பதாக இருக்கிறது.
இந்திய ஒன்றியம் முழுதும் நடத்தப்படுகிற அந்த தேர்வில் தமிழ்நாடு,கேரளா போன்ற பகுதிகளில் கண்டிப்புடனும் வட நாடுகளில் பல இடங்களில் எந்தவித மேற்பார்வையும் இல்லாமல் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு கூடத்திற்கு வெளியே இருந்து அதற்கான விடைகளை கொடுக்கிற புகைப்படங்களை கூட நாம் பார்த்திருக்கிறோம்.எனவே அந்தந்த மாநில நிலைக்கு தகுந்தார்போல் வெற்றி பெறுதலும் தோல்வி பெறுதலும் நடைபெறும் என்ற அவல நிலையும் இருக்கிறது.தமிழ்நாட்டிலிருந்து பலபேர் வடநாட்டில் தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து எழுதியதில் கைது நடவடிக்கைகளும் இப்போதும் அதன் தொடர்பான வழக்குகள் பல நிலுவையில் தமிழ்நாட்டில் இருக்கின்றன.
பல்வேறு விதமான பாடத்திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறையில் இருக்கிறது.சிபிஎஸ்சி என்கிற கல்விமுறை மாநிலம் விட்டு மாநிலம் பணிமாறுதலாகும் இந்திய ஒன்றிய அரசுப்பணியாளர்களின் குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதுமான ஒரே பாடத்திட்டம் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாநில பாடத் திட்டங்களில் பயின்றவர்களின் பாடதிட்டங்கள் வேறு . எனவே தங்களுக்கு எந்தவிதத்திலும் பரிச்சயமில்லாத ஒரு பாடத்திட்டத்தில் இரண்டொரு மாதங்களில் அதை பயின்று தேர்வு எழுதி அதில் பெறும் மதிப்பெண் தான் அவருடைய எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பது பேரவலம்.
தமிழ்நாட்டில் உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகள் கலைஞர் ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்டு அதற்கான சட்டம் இயற்றப்பட்டு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அது நடைமுறையிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிக்கு,
(பெயர்,)
(முகவரி,)
(அலைபேசி எண்)

You may also like...