‘ஆளுநர்’ – ‘பிரதமர்’ பதவி வேண்டுமா?
கிரிமினல் குற்றங்களில்கூட ‘மனுசாஸ்திரம்’ பதுங்கி இருக்குது சார், என்றார் ஒரு நண்பர். அது எப்படி என்று கேட்டேன். நண்பர் – ஒரு நீண்ட பட்டியலையே போட்டார்.
“சீனிவாச அய்யங்கார் – நடுவீதியில் கட்டிப் புரண்டு சண்டை; குப்புசாமி சாஸ்திரி – வீச்சரிவாள் தூக்கினார்; ராமச் சந்திர அய்யர் – சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினார்;
எம். பிச்சுமணி குருக்கள்-பிக்பாக்கெட் அடித்தார்” என்றெல்லாம் செய்திகளைப் படித்திருக்கிறீர்களா? என்றார். அப்படி ஒன்றும் அண்மையில் படித்ததாக நினைவில் இல்லையே. அவர்கள் ஒழுக்க சீலர்கள்; வேதம் படித்தவர் களாயிற்றே – என்றேன்.
உடலில் வலிமை தேவைப்படும் கிரிமினல் குற்றங்களுக்கு அவர்கள் வரமாட்டார்கள் சார். ஏன் உடல் உழைப்புக்கே வரமாட்டாங்க. சாலை போடுவது, மூட்டை தூக்குவது போன்ற உடல் உழைப்புக்கும் அவர்களுக்கு வெகுதூரம். உடல் நலுங்காமல், குலுங்காமல் மூளையை மட்டுமே பயன்படுத்தும் ‘கிரிமினல்’ கலை அவர்களுக்கு தெரியும்” என்றார்.
தெளிவாகப் புரியும்படி சொல்லுங்க சார், என்றேன்.
“அவர்கள் பங்கு மார்க்கெட்டுகளில் புகுந்து விளையாடு வார்கள்; நாட்டையே அதிர வைத்த ஹர்ஷத் மேத்தாவை நினை விருக்கிறதா? வங்கிகளில் பல்லாயிரம் கோடி சுருட்டுவார்கள்! அய்.சி.அய்.சி.அய். வங்கித் தலைவர் சந்தாகோச்சார் என்ற அம்மையாரை நினைவிருக்கிறதா? ‘தாலி கட்டிய கணவர்’ தீபக் கோச்சாருக்காக பதிபக்தியுடன் கோடிக்கணக்கில் மோசடி செய்து இப்போது நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கிறாரே, அவர் தான்! இவர்கள் சாலைகளில் மீசையை முறுக்கிக் கொண்டு திரிய மாட்டார்கள்; காவல் துறையிடம் பிடிபட மாட்டார்கள்.
ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருப்பார்கள்; மத்திய அரசுத் துறை செயலாளர்களாக இருப்பார்கள்; அதிகார மய்யங்களில் குவிந்து கிடப்பார்கள்; அமைச்சர்களுக்குத் தெரியாமலேயே தாக்கீதுகளை அனுப்புவார்கள்; பேரறிவாளனுக்கு தண்டனைக் குறைப்பு தர முடியாது என்று குடியரசுத் தலைவரே மறுத்து விட்டார் என்று குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்காமலேயே உச்சநீதிமன்றத்தில் பச்சைப் பொய்யைத் துணிந்து கூறுவார்கள்.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ‘மூளை’யே இவர்கள்தான் சார். வரி ஏய்ப்பு செய்ய வேண்டுமா? வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் வங்கிக்கு பட்டை நாமம் போட வேண்டுமா? எல்லாவற்றுக்கும் இவர்களிடம் திட்டம் இருக்கிறது.
இதோ பாருங்கள்! ‘தினமலர்’ (பிப்.24) நாளேட்டில் கடந்த வாரம் வந்த ஒரு செய்தி:
“பிரதமர் – கவர்னர் பெயரைப் பயன்படுத்தி 100 கோடி வரை சுருட்டிய கும்பல் கைது. பெங்களூரைச் சார்ந்த மகாதேவன் (அய்யர்), அவரது மகன் அங்கீட் (அய்யர்), ஓசூரைச் சார்ந்த ஓம் அய்யர் சென்னையில் வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்தனர்.
மத்திய அரசு டெண்டர் வாங்கித் தருவதாகக் கூறி, தூத்துக்குடி தொழிலதிபரிடம் ரூ.18 கோடி மோசடி; சி.பி.அய். இயக்குனர் போலவே பரிந்துரைக் கடிதம் தயாரித்து, சென்னை தொழிலதிபரிடம் ஒரு கோடி வசூல்; முக்கிய புள்ளிகளுக்கு பா.ஜ.க.வில் மாநிலங்களவை ‘சீட்’ வாங்கித் தருவதாக பல கோடி மோசடி; மூலிகை பெட்ரோல் தயாரித்த ராமர் பிள்ளைக்கு அனுமதி பெற்றுத் தருவதாக மோசடி” என்று புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
ஆளுநர் பதவி வேண்டுமா? அடுத்த பிரதமராக வேண்டுமா? சி.பி.அய். இயக்குனராக வேண்டுமா? உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியுமா? – எல்லாவற்றுக்கும் இவர்களைப் பிடித்தால் போதும். அவ்வளவு சக்தி வாய்ந்த கிரிமினல்கள்.
இப்போது சொல்லுங்கள் அடிதடி, குத்துவெட்டு, கிரிமினல்களுக்கு ஒரு கூட்டம்; நாட்டையே சூறையாடும் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு ஒரு கூட்டம்; இது மனுதர்மம் இல்லையா, சார்? என்றார் நண்பர்.
நான் வாய்விட்டு சிரித்தேன். ஏன் சிரிக்கிறீர்கள்? என்றார்.
“போச்சு; போச்சு; தர்மம் போச்சு; நியாயம் போச்சு; கண்டவனும் தலைவனாகி விட்டான்; ஊழல் பெருகிடுச்சு; ஆன்மிக பூமி நாசமாயிடுச்சு” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களே, அதை நினைத்தேன்; சிரித்தேன்” – என்று பதில் சொன்னேன்.
(குறிப்பு : ‘தினமலர்’ உள்ளிட்ட அனைத்து ஏடுகளிலும் இந்த செய்தி வந்திருக்கிறது. அந்த ஏடுகள் மோசடி பேர்வழிகளின் பெயரோடு ‘அய்யர்’ என்ற பட்டத்தையும் இணைத்தே வெளியிட்டன. ஆனால், ‘தினமலர்’ மட்டும் ஜாதிப் பெயரை நீக்கம் செய்து தனது ‘ஜாதி ஒழிப்பை’ மனுவாத கிரிமினல்களைக் காப்பாற்றப் பயன்படுத்தியிருக்கிறது. செய்தி வெளியிடுவதிலும் மனுசாஸ்திரம் இருக்குது, சார்!)
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 04032021 இதழ்