இளைய தலைமுறையினருக்கு இளைஞர்கள் வகுப்பு எடுத்த பெரியாரியல் பயிற்சி முகாம்

இளைய தலைமுறையினருக்கு பெரியாரியலை அறிமுகப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் மேட்டூரில் 2021, பிப். 6, 7 தேதிகளில் தாய்த் தமிழ்ப் பள்ளி அரங்கில் சிறப்புடன் நடந்தன. இரு நாள் பயிற்சி வகுப்பிலும் 50 மாணவிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் பயிற்சி வகுப்பை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் முக்கியமான இளமைக் காலத்தில் பதிய வைக்கும் சிந்தனைகள் மானுட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாகும். இன்றைய சமூகச் சூழல் இளைஞர்களைக் குழப்பக் கூடியதாகவும் பல நேரங்களில் சமூக விரோதிகளாக செயல்படவும் தூண்டுகின்றன. சிலர் ஜாதி சங்கங்களிலும் சிலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் மூழ்கி விடுகிறார்கள். நேர்மையான சமூகக் கவலையுள்ள சமூக மாற்றத்துக்கு பங்களிப்புகளை வழங்கக் கூடிய இளைஞர்களாக உருவாவதற்கு உரிய சிந்தனைகளை நாம் சிந்தனையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பெரியார் சிந்தனைகள் வாழ்க்கைக்கான இலட்சியத்தையும் மானுடப் பண்புகளையும் சுயமரியாதை உணர்வுகளையும் பகுத்தறிவையும் பெண்களை சமமாக ஏற்கும் சமத்துவ சிந்தனைகளையும் வலியுறுத்துகிறது. அது குறித்த சிந்தனைகளை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு இந்த பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் இந்த இரண்டு நாட்களும் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, பயிற்சி வகுப்பின் நெறிமுறைகளை எடுத்துரைத்தார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராஜ், ஜாதி ஒழிப்புப் பாடல் பாடி வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு மாணவர் கழகத்தைச் சார்ந்த இளைஞர்களே இந்தப் பயிற்சிகளை அளித்தது இம் முகாமின் சிறப்பு. முதல் நாள் ‘திராவிடத்தால் எழுந்தோம்’ என்ற தலைப்பில் திருச்செங்கோடு மனோஜ், ‘தனக்கென வாழாத் தலைவர் பெரியார்’ எனும் தலைப்பில் மேட்டூர் மதிவதனி, ‘கடவுளைப் பகுத்தறிவோம்’ எனும் தலைப்பில் திருப்பூர் சந்தோஷ் ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு கோவை விஷ்ணு, பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து திருப்பூர் இரண்யா ‘வீடு மட்டுமா பெண்கள் உலகம்?’ எனும் தலைப்பிலும், பொள்ளாச்சி சபரி ‘பரப்புரையின் தேவையும் அவசியமும்’ எனும் தலைப்பிலும் வகுப்புகளை எடுத்தனர். ‘காணொளி’த் திரைகளைப் பயன்படுத்தி வகுப்புகள் எடுக்கப்பட்டன. மாலையில் பயிற்சியாளர்கள் பங்கேற்ற அறிவுத் திறன் போட்டிகள், விளையாட்டுகள் நடைபெற்றன. ஆசிரியர் சிவகாமி ஒருங்கிணைத்தார்.

இரண்டாம் நாள் காலை சேலம் யாழினி, ‘இடஒதுக்கீடு-ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பிலும், திருப்பூர் சிவகாமி ‘புரட்சியாளர் அம்பேத்கர் பணிகள்’ எனும் தலைப்பிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்’மதவாதத்தின் ஆபத்துகள்’ எனும் தலைப்பிலும் வகுப்புகளை எடுத்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் ‘மந்திரமல்ல தந்திரமே’ எனும் தலைப்பில் மந்திரவாதிகள், சாமியார்கள் நிகழ்த்தும் ‘அற்புத மோசடி’களை செய்முறையாக நடத்திக் காட்டி, அறிவியல் விளக்கங்களோடு உரையாற்றினார். தொடர்ந்து பெரியாரின் தேவைகள் எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வகுப்பு எடுத்தார்.

நிறைவாக பங்கேற்பாளர்கள் பயிற்சியில் பெற்ற  அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பயிற்சி யாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழு வாக அனைவரும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

பெரியாரியல் குறித்து இதுவரை அறிய வாய்ப்பில்லாத இளைஞர்கள், மாணவர்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தங்களுக்கு நல்ல விளக்கங்கள் கிடைத்ததாக பயிற்சியாளர்கள் கூறினர்.

சேலம் மேற்கு மாவட்டக் கழகம் ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் பயிற்சி நிகழ்வுகளையும் ஆசிரியர் சிவகாமி ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு மாணவர் கழக சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேட்டூர் ஆர்.எஸ். நாகராஜ் நன்றி கூறினார். மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ்., கொளத்தூர், மேச்சேரி, காவலாண்டியூர், நங்கவள்ளி பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் பயிற்சிகளைப் பெற்றனர்.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 11022021 இதழ்

You may also like...