ஆன்மிகத்துக்கே வரியா!
“இதோ பாருங்க சூப்பர் ஸ்டார் இப்படியான வழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து எங்கள் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டி இருக்கும்” என்று முகத்தில் அடித்துக் கூறிவிட்டது உயர்நீதிமன்றம். (‘நான் அடிச்சா தாங்கமாட்ட வீடு போயி சேர மாட்ட’ என்ற பாடல் நினைவுக்கு வந்தால் அடியேன் அதற்கு பொறுப்பு அல்ல).
‘அப்படியெல்லாம் அபராதம் போட்டுராதீங்க; இதுக்கும் ஒரு கூடுதல் செலவா ? இதோ வழக்கு வாபஸ்’ என்று கூறிவிட்டார் சூப்பர்ஸ்டார். என்ன சார் நிலைமையைப் பாத்தீங்களா ? அரசியலில் ஒரு வாய்ஸ் கொடுத்தால் ‘அப்படியே அதிரும்’, இப்போ சுருதி இறங்கிப் போச்சே என்று கேட்கக் கூடாது. பாவம் அவர் நிலை அப்படி. மண்டபத்திற்கு அவர் சூட்டியது இராகவேந்திரா பெயர். அவர் மிகப் பெரிய மகான் ஆச்சே ! மகான் பெயரை தாங்கியிருக்கும் மண்டபம் இப்படி மாநகராட்சி நோட்டீசுக்கும் நீதிமன்ற எச்சரிக்கைக்கும் உள்ளாகி விட்டதே என்று மனம் புழுங்குகிறார்கள் ‘ஒரிஜினல்’ ஆன்மீகவாதிகள்.
நியாயம்தான்; ‘மகான் பெயர்களைச் சூட்டினால் வரியே கட்ட வேண்டாம்’ என்று ஆணையிடக்கூடிய ஆன்மீக அரசியல் இன்னும் இந்த பூமியில் வரவில்லையே ! ஆழ்வார்களுக்கும், நாயன்மார்களுக்குமான இந்த பூமியில் மகான் பெயரிலான மண்டபத்துக்கு வரி கட்ட வேண்டும், வாடகை தர வேண்டும் என்று இப்படி திராவிடக் கட்சிகள் கெடுத்து குட்டிச் சுவர்களாக்கி விட்டார்களே ! என்று ‘அதிரடி அர்ஜூன்கள்’ ஆன்மீகக் கச்சேரிகளை நடத்துகிறார்கள். அதன் மகிமை இப்போது தான் நம்மைப் போன்ற வரி கட்டுகிற அப்பாவிகளுக்குப் புரிகிறது.
உண்மையிலேயே சூப்பர் ஸ்டார் ஜாதகம் இப்போது கஷ்ட திசையில் இருக்கிறதாம். ‘வாடகை தரக்கூடாது, வரி கட்டக் கூடாது’ என்பதே அதற்குப் பரிகாரம் என்று ஆஸ்தான ஜோதிடர்கள் கூறிவிட்டார்கள் போலும்.
இதே மண்டபத்திலேகூட சூப்பர் ஸ்டார் தனது இரசிகர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அதற்கெல்லாம்கூட இரசிகர்களிடம் மண்டபத்திற்கு வாடகையாக ஒரு சல்லிக்காசு கூட வாங்கவில்லை. அவ்வளவு தாராள மனப்பான்மை. அரசியல் கட்சி அறிவிப்பு வரப்போகிறது என்று ஆவலோடு திரண்டார்கள் இரசிகர்கள். ‘மக்கள் புரட்சி வரட்டும்; பிறகு அரசியலுக்கு வருவேன்’ என்ற கிளைமாக்சோடு முடித்துக் கொண்டு விட்டார் சூப்பர் ஸ்டார். அதுமட்டுமா! உங்களுக்கெல்லாம் மட்டன் பிரியாணி போட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் இலட்சியம். ஆனால், இதுவரை அது நிறைவேறவில்லை. பரவாயில்லை போகும்போது ‘புகாரி’ ஓட்டலில் சொந்த செலவில் சாப்பிட்டுவிட்டுப் போங்கள் என்று பாசமுடன் ரசிகர்களை வழியனுப்பி வைத்து விட்டார்.
சொல்லப்போனால் இந்த மண்டபம் கூட அவருடைய சொத்து அல்ல! ‘இன்று முதல் அது மக்கள் சொத்து’ என்று 1993 ஆம் ஆண்டிலேயே அவர் அறிவித்து விட்டார். படையப்பா விழாவும், மண்டப தொடக்க விழாவும் நடந்தபோது அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பை நினைவுபடுத்துகிறார் அவரது இரசிகர். மக்கள் சொத்தாக அறிவிக்கப்பட்ட பிறகு, மாநகராட்சி எப்படி வரி கேட்கலாம்? அவரது குடும்பத்தினர் நடத்தும் ஒரு பள்ளிக்கூடத்துக்கூட (சென்னையிலேயே மிக அதிகமாக கட்டணம் வாங்கும் பள்ளிக்கூடமாம்) அவர் வாடகையெல்லாம் தருவது கிடையாது. கட்டிட உரிமையாளர் பள்ளிக்கூடத்திற்கே பூட்டுப் போட்டார்; அந்த ஆன்மீக வரலாறுகளையெல்லாம் தோண்டி எடுத்து நினைவுபடுத்தவும் கூடாது தான். ஆனாலும் வரி, வாடகைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் அல்லவா ஞானிகள்?
நம்முடைய சூப்பர் ஸ்டார் அத்தகைய மகா ஞானி அல்லவா! அதனால் தான் அனுபவங்கள் வழியாகவே படிப்பினைகள் கிடைக்கிறதென்று நீதிமன்றத்தின் பலமான அடிக்குப் பிறகு பவ்யமாக கருத்து கூறியிருக்கிறார். ‘அது என்ன படிப்பினைகளாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?’ எனக்குத் தெரிந்ததை நான் கூறி விடுகிறேன்.
“சொத்து என்று வந்துவிட்டால் வரி தான் கட்ட வேண்டும்;
பள்ளிக்கூடம் நடத்தினால் இடத்தின் உரிமையாளருக்கு வாடகை தந்தாக வேண்டும். இடத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது.
மாநகராட்சிக்கு மேல் முறையீடு செய்யாமல் அவசரப்பட்டு நீதிமன்றம் போக கூடாது.”
இப்படிப் பல பாடங்கள் சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்திருக்கலாம். இனி எதிர்காலத்திலும்கூட பல பாடங்கள் அவருக்காகக் காத்திருக்கின்றன. அதையும் அவரது ஆன்மிக நலன் கருதி சொல்லிவிட வேண்டும்.
“பாஜக என்ற மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிவிடக் கூடாது.
‘துக்ளக்’ குருமூர்த்தி சொல்லித் தருகிற பாடங்களை அப்படியே மேடையில் ஒப்பிக்கக் கூடாது.
‘அருவிகளும், குருவிகளும்’, ‘ரஜினி அரசியலுக்கு வந்தே தீருவார்; இது சத்தியம்’ என்று அவ்வப்போது தெருக்கூத்து கட்டியங்காரனைப்போல் அவரது முகவர்களாக வந்து பேசுவதற்கு அனுமதிக்கவே கூடாது.”
காலம் மிகவும் மாறிப் போய்க் கெடக்குது ஜி! இரசிகர்களுக்கும் வயசா யிடுச்சி. இதையெல்லாம் அவரது எதிர்காலத்துக்கான பாடங்களாக பரிவுடன் சமர்ப்பிக்கிறோம்.
இதைக் கற்றுத் தர நீதிமன்றங்களும் மக்கள் மன்றங்களுமே போதும். ‘இமயமலைக்குப் போய் தியானம் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை’ என்ற பாடத்தையும் இந்தப் பட்டியலில் அவர் சேர்த்துக் கொண்டால் அதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 22102020 இதழ்