இராமாயண நாடகம் – திருவாரூர் தங்கராசு – காட்சி 4

காட்சி – 4

இடம் – இராவணன் அந்தப்புரம்.

பாத்திரங்கள் : இராவணன், வண்டார்குழலி, மாரீசன், தண்டகாரண்யத்திலிருந்து வந்த அகம்பனன் என்ற ஒற்றன்.

அகம்பனன் : மன்னர் மன்ன!

இராவணன் : யார், அகம்பனனா! என்ன?

அகம் : மறத்தமிழ் பரம்பரைக்கு மாறா அவமானம்.

இராவ : என்ன! அகம் : ஆரியர்கள் அநீதி, அளவை மீறிவிட்டது அரசே!

மாரீசன் : விவரமாகச் சொல்.

அகம் : ஆரிய ராம லட்சுமணர்கள், அன்னை காமவல்லியை உருக்குலைந்து விட்டனர்.

இராவ : என்ன! (மீசை படபடவெனத் துடிக்கிறது. கண்களில் பொறி பறக்கிறது) தகர்க்கப்பட்டதா தமிழனின் தன்மானம் ! மாறாத அவமானம் !

மாரீசன் : பதறாதே இராவணா! அகம்பனா! சொல்…. பிறகு?

அகம் : அவமானம் தாங்காத அம்மையார், தற்கொலை செய்து கொண்டு விட்டார்கள்,

இராவ : (மிகுந்த சோகம்) என் குலக்கொடி மறைந்து விட்டாளா! தங்கையே, உனக்கு இந்த முடிவா கிட்ட வேண்டும். கொடியோனின் கரம் பட்டு நீ எவ்வாறு துடித்தாயோ!

அகம் : அம்மையாரைத் தனிமையில் சந்தித்த காமவெறியன் ராமன் கட்டாயப் படுத்தினானாம்; மறுத்ததற்காக மானபங்கப்படுத்தி விட்டார்கள் அம் மடையர்கள்.

இராவ : மாமா! இராமனை அரச குடும்பத்தவன் என்றீர்களே; சாதாரண அறிவு படைத்தவனைவிடக் கீழாகவல்லவா நடந்து கொண்டிருக்கிறான்? போரிலே புறமிட்ட ஆரியர்களின் பொன்னவிர் மங்கையர்கள் எத்தனை ஆயிரம் பேரை நாம் சிறை பிடித்தோம். நினைத்தால் அவர்களைச் சிதைத்திருக்கலாமே; சித்திரவதை செய்திருக்கலாமே; இல்லையே! சீரான வாழ்வு அளித்து அல்லவா காத்து வருகிறோம். சிந்தை கலங்கியவனும் செய்ய அஞ்சும் காரியத்தைச் செய்துவிட்டார்களே அக் கீழ்மக்கள். நாம் இப்போதே சென்று அந்தப் புல்லர்கள் இருவரையும் ஒழித்து விட்டால் என்ன?

மாரீசன் : ஒழித்து விடலாம்; அது உன்னால் முடியும். அதனால் இழந்துபோன நம் மானம் மீண்டும் வருமா?

இராவ : வராதுதான்! அதற்காக….

மாரீசன் : அவசரப்படாதே! தங்கையின் மானம் பறிக்கப்பட்டது கண்டு, தனயன் உன் உள்ளம் எவ்வாறு துடிக்கிறது?

இராவ : ஆண்மையற்ற கோழைகூடத் துடிப்பானே மாமா, இந்தத் துயரச் செய்தி கேட்டு…..

மாரீசன் : தங்கையே மனைவியாக இருந்தால்?

இராவ : மாமா…?

மாரீசன் : யோசித்துப் பார்…!

இராவ : மானமுள்ளவன் வாழவே மாட்டான்.

மாரீசன் : மானம் ! அது இருக்கிறதா அந்த ஆரியர்களுக்கு என்பதைக் காணவேண்டும் நாம்.

இராவ : அதற்கு என்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்?

மாரீசன் : அவன் மனைவி சீதையை நீ சிறைபிடித்து வர வேண்டும்…

இராவ : என்ன! அது நம் பெருமைக்கு இழுக்கல்லவா?

மாரீசன் : இல்லை! அரச தர்மத்திலே அது ஒன்று. காம வல்லியை பங்கப்படுத்திய அந்த ஆரியக் கயவர்களுக்கு நாம் யார் என்பது தெரியாமல் இருக்காது: தெரிந்தும் இந்த வேலையைச் செய்திருக்கும் போது, நம்மோடு சண்டையிட விரும்பித்தானே இருக்கவேண்டும். அதனால்தான் சொல்லுகிறேன். அவர்கள் தர்மப்படியே மாற்றானின் மந்தையை மடக்குவது. மங்கையர்களைக் கவர்வது, எதிரிகளுக்குத் தாங்கள் யார் என்பதை எடுத்துக் காட்ட, அவர்கள் முன்னோர்கள் வகுத்திருக்கும் உபாயங்கள்.

இராவ : என்ன இருந்தாலும் அந்த அடிமுட்டாள்கள் செய்த அக்கிரமத்திற்காக, ஓர் அபலையைப் பழி வாங்குவது முறையல்ல….

மாரீசன் : ஆராயாது பேசுகிறாய் இராவணா நீ! அவர்களை இப்போதே அழித்து விடலாம்! அதனால் அழிந்த உன் பெருமை மீண்டும் வருமா? ஆனால் நீ சீதையைச் சிறை செய்தால்; அதனால் அவர்களுக்கு – ஏன் ஆரிய வம்சத்திற்கே ஏற்பட இருக்கும் அவமானம் எவ்வளவு பெரிது தெரியுமா? அந்தக் கறை அந்த இனம் உள்ளளவும் அழியாது! மனைவியைப் பறிகொடுத்த பேடி என்ற பழிச்சொல் ராமன் அழிந்தாலும் அகலாது! காமவல்லிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குப் பதில், மனைவியை பறிகொடுத்து ராமன் கதற வேண்டியதுதானே நியாயம்? ஆரியர் நமக்கிழைத்த தீங்குக்கு ஒன்றுக்கு ஆயிரமாகப் பழி தீர்க்க வேண்டியதுதானே நம் கடமை – அப்போதுதானே அவர்களுக்கு அறிவு பிறக்கும்! திராவிடத்திலே – மலையிலே மோதிக் கொண்டால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்றும் புரியும். இராவணா கலங்காதே! இது ஒன்றுதான் சரியான உபாயம். சுலபமான வழி. இப்போதே புறப்பட்டுவா என்னோடு.

இராவ : ஆம்! தங்கள் அறிவுரை நியாயமானதுதான். (மனைவியைப் பார்த்து) வண்டார்குழலி, அரச விவகாரங்களை மேகநாதனுடன் கலந்து கவனித்துக்கொள். மாமா. நாம் இப்போதே புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

[இருவரும் புறப்பட்டு போகிறார்கள்.)

 

 

காட்சி – 4 (அ)

இடம் : தண்டகாரண்யம்.

பாத்திரங்கள் : இராவணன், மாரீசன்.

[இராவணனும் மாரீசனும் காட்டுப் பாதையில் வருகிறார்கள் இரதத்தில் அப்போது.)

மாரீசன் : இராவணா! மறுபடியும் சொல்கிறேன். நீ சீதையைக் கவர்வது. ராமனைக் கொன்றுவிட்டல்ல. பிரித்துவிட்டு….

இராவ : அப்படியானால் இதற்கு நான் வரவேண்டிய அவசியமில்லையே!

மாரீசன் : ராமனைப் பிரித்த பிறகு, சீதையை நமது சிற்றாள் ஒருவனே தூக்கி வந்து விடலாம்; அதனால் பெருமை நமக்கல்ல ஆரியர்களுக்குத்தான்.

இராவ : சீதையை நானே தூக்கி வரவேண்டும் என்கிறீர்களா?

மாரீசன் : ஆம்! ராமன்… ஆரியர் தலைவன். அரசனாக வேண்டியவன். ஆண்டவன் அவதாரம் என்றுகூட அறிவிலிகள் சொல்கிறார்கள். அவன் மனைவி சீதை. நீயோ தமிழர் தலைவன்; வரை பெயர்த்த மாவீரன்! நீ அவளைத் தூக்கி வருவதற்கும், நமது சேவகன் தூக்கி வருவதற்கும் உள்ள வேறுபாடு மிகப் பெரிது. தேங்காயை நாய் கவ்விச் செல்வதற்கும் மனிதன் உடைத்துத் தின்பதற்கும் உள்ள வேறுபாடு உண்டு அதிலே…..

இராவ : அப்படியானால் அவர்கள் இருவரையும் கொன்று விட்டே இந்த வேலையைச் செய்து விடுகிறேனே!.. அது இன்னும் பெருமைதானே மாமா?

மாரீசன் : பெருமைதான், ஆனால் சீதையின் பிரிவுக்காகச் சீரழிந்து நிற்க வேண்டிய ராம லட்சுமணர்களுக்கு நீயே உபகாரம் செய்தது போல் இருக்கும்.

இராவ : ஆம்! (சிந்திக்கிறான்.)

மாரீசன் : * தசக்குணா! (*வா.ரா.கி.கா. 1-ம் சருக்கம் 26-30) நான் சொல்கிறபடி செய். ராமன் ஒரு காம வெறியன், சிற்றின்பப் பிரியன், குடியன், சீதையின் மனம் கோணாமல் நடந்து கொள்வதே அவன் வேலை – அதனால் காமவல்லியின் அரண்மனையிலுள்ள மான்களில் அழகிய ஒன்றைப் பிடித்துப் போய், சீதையின் முன் விட்டு நான் ஆட்டம் காட்டுகிறேன்; அவள் ஆசைப்படுவாள் – ஆரியர்கள் பிடிக்க வருவார்கள். நான் அழைத்துப் போய் விடுகிறேன் அவர்களை வெகுதூரம், அறிந்து கொண்டாலும் நான் மடக்கிக் கொள்கிறேன், இடை நேரத்திலே நீ காரியத்தைச் சாதித்துவிடு….

இராவ : சரி மாமா தங்கள் அபிப்பிராயப்படியே செய்வோம்.

மாரீசன் :-சீதை ஆரியச் சிறுமி, அதோடு நீயும் அழகன்! என் தங்கைக்கு… ஏதும் குறைவராமல்…. என்ன…!

இராவ : இராவணனுக்கா? ஏகதாரவிரதனுக்கா இந்த அறிவுரை.

மாரீசன் : அல்ல இராவணா! சீதையின் இயல்பை விவரித்தேன்; எவ்வளவு பழகியதானாலும் – நாய் நாய் தானே! அரசனின் பத்தினி என்றாலும் ஆரியச் சிற்றிடைதானே அவள்! அதனால்தான் சொல்லுகிறேன். நீ கொஞ்சம் கவனமாகவே…..

இராவ : நல்லது மாமா

You may also like...