சேலம் மாநாட்டில் நடந்தது என்ன? : சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார், மூத்த வழக்கறிஞர் துரைசாமி

‘1971இல் சேலம் மாநாட்டில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான

செ. துரைசாமி, சென்னையில் தலைமைக் கழக அரங்கில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் விரிவாகப் பேசினார். நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.

சேலம் மாநாட்டையொட்டி இந்துக் கடவுள்களை புண்படுத்தி விட்டதாக மாநாட்டு வரவேற்புக் குழு உறுப் பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தந்தை பெரியார் ஆணையை யேற்று தோழர்கள் சார்பில் வாதாடியவர் வழக்கறிஞர் துரைசாமி. வழக்கு முதலில் சேலம் நீதிமன்றத்தி லும் பிறகு சென்னை பெருநகர நீதி மன்றத்திலும் நடந்தது. பிறகு சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடந்தது.

சேலம் – சென்னை பெருநகர நீதிமன்றங்களின் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ‘துக்ளக்’ சோ சாட்சிய மளித்தபோது அவரை குறுக்கு விசாரணை செய்தார், வழக்கறிஞர் துரைசாமி. பெரியாரை நோக்கி சேலம் ஊர்வலத்தில் செருப்பு வீசியதற்கு வருத்தமும் மன்னிப் பும் நீதிமன்றத்தில் சோ. ராமசாமி தெரிவித்ததை வழக்கறிஞர் பதிவு செய்தார்.

‘இராமன்’ படம் மீது திராவிடர் கழகத் தோழர்கள் செருப்பாலடிக்க நேர்ந்தது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கினார், வழக்கறிஞர் துரைசாமி. வால்மீகி இராமாயணத்திலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை சாட்சிக் கூண்டில் நின்ற சோ. ராமசாமியிடம் எடுத்துக் காட்டி அவரையே படிக்க வைத்தார். இராமன் பிறப்பு, அசுவமேத யாகம், புத்ரகாமேஷ்டி யாகம் பற்றி உள்ளிட்ட பல்வேறு செய்திகளை வால்மீகி இராமாயணத்திலிருந்து ‘துக்ளக்’ சோவே படித்ததையும், படித்தப் பிறகு தடுமாறி நிலைகுலைந்து நின்றதையும் வழக்கறிஞர் விரிவாக எடுத்துரைத்தார். இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்க வில்லை என்ற அடிப்படையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கறிஞர் துரைசாமி உரை குலுக்கை, கலகக்காரன், ஏன் மீடியா, ‘யுடியூப்’ காணொளியில் பதிவேற்றப்பட்டுள்ளது.

பெரியார் முழக்கம் 13022020 இதழ்

You may also like...