ராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்தால் சிறை

உ.பி. மாநிலத்தில் கோயில் ஒன்றில் ஒருவர் இராமன் வேடம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் என்பதற்காக பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் அவரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டது. ராமன் வேடம்போட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்ற ‘தன்மான’ப் பிரச்சினைக்காக இவர்கள் எதிர்க்கவில்லை. வேடம் போட்டவர் ஒரு முஸ்லிம். நாடக நடிகர். நடிப்புத் தொழில் இல்லாதபோது குடும்பத்தைக் காப்பாற்ற ‘ராமன்’ வேடம் போட்டு பிச்சை எடுப்பது அவரது வழக்கமாம். ஒரு இஸ்லாமியர் பிச்சை எடுப்பதற்குக்கூட ராமன் வேடம் போடக் கூடாது என்கிறது ‘பஜ்ரங்தள். “கடவுள் வேடம் போட்டு பிச்சை எடுக்கும் உரிமை இந்துக்களுக்கு மட்டுமே உண்டு; இது இந்து நாடு; எங்கள் நாடு” என்று பொங்குகிறார்கள்.

ஆனால், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் ‘இந்து’க்கள்தான் என்கிறார், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். அந்த ‘இந்துத்துவ’ கொள்கை எல்லாம் ‘பஜ்ரங்தள்’ கும்பலுக்கு தெரியாது. ‘முஸ்லிம் என்றால் அடி; உதை’ என்பதே இவர்களுக்கான ‘ஆன்மீகம்’. ‘இந்து ராஷ்டிரம்’ என்ற இராம இராஜ்யத்தில் பிச்சைக்காரர்களே இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் இவர்கள் கூற மாட்டார்கள். ஒரு இஸ்லாமியர் ராமர் வேடம் போட்டு பிச்சை எடுக்கக் கூடாது என்பதே இவர்களின் ‘இராமராஜ்ய’த்தின் இலட்சியம்.

– கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...