பாண்டேக்களே, பதில் உண்டா?
சங்கிகளின் கழிசடை கருத்துக்களை சுமந்து கொண்டு கூவிக் கூவி விற்பனை செய்யும் ரங்கராஜ் பாண்டே என்ற பேர் வழி, ‘ஆதன் தமிழ்’ என்ற ‘யு-டியூப்’புக்கு அளித்த பேட்டியில் மனுதர்மம் இப்போது எங்கே இருக்கிறது! அதை எல்லாம் தூக்கி வீசியாச்சு என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஒரு கேள்வி!
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணப் பிரிவுகளை மனு சாஸ்திரம் கூறுகிறது. ‘பிராமண’ என்ற வர்ணத்தை மட்டும் இப்போதும் மனுதர்ம அடிப்படையில் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மாக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு காயத்ரி மந்திரம் ஓதி, அதன் ‘கல்வெட்டு நினைவு சின்னம்’ போல் பூணூலை மாட்டிக் கொண்டு திரிவது ஏன்? மனுதர்மத்தை உயிருடன் வைத்திருப்பது தானே இதன் நோக்கம்?
வேத மந்திரம் ஓதுதல், சாஸ்திர சடங்குகளை நிகழ்த்துதல், திருமணம், கருமாதி மந்திரங்களை உச்சரித்தல், கர்ப்பகிரகம் வரை நுழைந்து அர்ச்சனை செய்தல், கும்பாபிஷேகம் செய்தல், சிற்பி வடித்த கல்லுக்குள் வேத மந்திரத்தை ஓதி ‘கடவுளாக்குதல்’ போன்ற “பகவான் சேவை”களை (இது காசு வாங்கிக் கொண்டு செய்யும் சேவை) வேதம் படித்த ஆண் பிராமணர்கள் மட்டுமே செய்வதற்கு தகுதி படைத்தவர்கள் என்ற “மனுதர்மக் கட்டளைகள்” இப்போதும் பின்பற்றப்படுகிறதா இல்லையா? இது ‘மனுதர்மம்’ அல்லவா? ரங்கராஜ் பாண்டேக்கள் இப்படி எல்லாம் பேசுவதே மனுதர்மத்தின் எதிரொலி தானே?
பெரியார் முழக்கம் 08102020 இதழ்