2019இல் கழகத்தின் களப் பணிகள்
2019ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆற்றிய களப்பணிகளை திரும்பிப் பார்க்கிறது. வழக்கமாக கழகத் தோழர்கள் நடத்தும் பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள், தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சிகள், தெருமுனைக் கூட்டங்களைத் தவிர, ஏனைய நிகழ்வுகள், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளி வந்த பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு சந்தாக்கள் சேர்க்கும் பணிகளில் பல மாவட்டங்களில் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட்டனர். செயல்படாத மாவட்டங்களும் உண்டு. கழகத்தின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் இதற்காக மாவட்டம் தோறும் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து சந்தா சேர்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்தினர். கழகத்துக்காக சொந்தமாக தலைமைக் கழகம் உருவானது – 2019ஆம் ஆண்டில். இது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மக்களவைக்கான தேர்தல் நடந்ததும் 2019ஆம் ஆண்டில்தான். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது. தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிகளைக் குவித்து, தமிழ்நாடு மதவாத சக்திகளை புறக்கணிக்கும் என்பதை உணர்த்தியது.
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களின் 2019ஆம் ஆண்டு களப் பணிகளின் ஒரு தொகுப்பு:
ஜனவரி : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் சேலத்தில் அவரது இல்லத்தில் சந்தித்து, 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் ஈழத் தமிழ் ஏதிலியர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும் மனு அளித்தனர் (ஜன. 14).
உயர்ஜாதி ஏழைகளுக்கு பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த 10 சதவீத தனி இடஒதுக்கீட்டைக் கண்டித்து கோவை, ஈரோடு, உடுமலை, சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நகரங்களில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத் திலும் பங்கேற்று தோழர்கள் கைதானார்கள் (ஜன. 27).
திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ‘நிமிர்வோம்’ இதழுக்காக திருப்பூர் தோழர்கள் தனி அரங்கு ஒன்றை எடுத்து கழக நூல்களை விற்பனை செய்தனர் (ஜன. 17 முதல்).
மயிலாடுதுறை கழகத் தோழர்கள் சட்டத்துக்குப் புறம்பான ஆக்கிரமிப்புக் கோயில்களின் பட்டியலைத் தயாரித்து காவல்துறை மாவட்ட ஆட்சி நிர்வாகத்திடம் வழங்கினர்.
பிப்ரவரி: உயர்ஜாதி இடஒதுக்கீட்டையும் பார்ப்பன இந்துத் துவாவையும் தனது கற்பனைத் திறனால் ஓவியங்களாக்கி இலயோலா கல்லூரியில் காட்சிப்படுத்திய ஓவியர் முகிலன் மிரட்டப்பட்டார். அவரது சில ஓவியங்கள் காட்சிப்படுத்த தடை செய்யப்பட்டது. அவருக்கு கழக சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது (பிப்.1)
‘வரலாற்றில் பார்ப்பன வன்முறைகள்’ என்ற கருத்தரங்கமும் கழக சார்பில் சென்னையில் நடத்தப்பட்டது (பிப்.20).
மார்ச்: ‘உலக மகளிர் உரிமை நாள்’ கூட்டத்தை ஈரோடு சித்தோடு பகுதியில் காவல்துறையின் தடையை மீறி தோழர்கள் நடத்தினார்கள் (மார்ச் 8).
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா, வடசென்னையில் கழக சார்பில் முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டது (மார்ச் 9).
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலுறவு வன்முறையைக் கண்டித்து கழக சார்பில் சென்னை (மார்ச் 15), பொள்ளாச்சி (மார்ச் 10), திருச்சி (மார்ச் 16), திருப்பூர் (மார்ச் 18), மேட்டூர் (மார்ச் 16) பகுதிகளில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடத்தக் கோரி சென்னையில் அய்.நா. துணை நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அலுவலகம் முன் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கேற்றது (மார்ச் 14).
திருப்பூரில் தலைமைக் குழு கூடி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவைத் தெரிவித்தது. தன்னுரிமை தன்னாட்சிக் கோரிக்கையை தமிழ்நாடு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது (மார்ச் 20).
கோவையில் ஃபாரூக் நினைவு நாளை மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்கமாக கழகம் நடத்தியது (மார்ச் 16). உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி பழங்குடி மக்களை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது என்று கள்ளக்குறிச்சி தோழர்கள் நடத்திய இயக்கத்தை பழங்குடி மக்கள் மகிழ்வுடன் வரவேற்றனர். ஈரோடு மரவபாளையத்தில் கழக சார்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு (மார்ச் 10) நடத்தப்பட்டது.
ஏப்ரல் : அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கழக செயல்வீரர் பத்ரிநாராயணன் நினைவு நாள் ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழாவாக சென்னை மாவட்டக் கழகம் நடத்திய நிகழ்ச்சி உணர்ச்சியும் உருக்கமுமாக என்றென்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாக அமைந்தது (ஏப். 30).
இராசிபுரம் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா நடந்தது (ஏப். 21).
மே : கொளத்தூர் அய்யம் புதூரில் மே 23, 24 தேதிகளில் கழக சார்பில் புதிய இளைஞர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
மே 25இல் மேட்டூரில் நாத்திகர் பேரணியும் அன்னை மணியம்மை யார் நூற்றாண்டு விழாவும் சிறப்புடன் நடந்தது. கொட்டும் மழையில் தோழர்கள் பேரணியாக வந்தனர்.
ஜூன் : மேட்டூர் நகரில் ஒரு நாள் கழகப் பயிற்சி முகாம் நடந்தது (ஜூன் 8).
திருப்பூர் இராயபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்துக்கு ‘துரோணாச்சாரி’ பெயர் சூட்டப்பட்டதற்கு கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. திருப்பூர் குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் வினாயகன் கோயில் கட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழக முயற்சியால் கோயில் அகற்றப்பட்டது.
கோவை சரவணம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின் ஜாதிவெறியைக் கண்டித்து கழகத் தோழர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஜூலை : மேட்டூரில் கழகத்தின் தலைமைக் குழு கூடியது (ஜூலை 13). கழகத்தின் பரப்புரைப் பயணங்கள், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டலுக்கு திட்டமிடப்பட்டன. ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கோவையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது (ஜூலை 23). நடுவண் ஆட்சியின் வர்ணாஸ்ரமக் கல்விக் கொள்கையை விளக்கி கல்வியாளர்களைக் கொண்டு கோவையில் கழகத்தினர் கருத்தரங்கம் நடத்தினார்கள் (ஜூலை 12).
காமராசர் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மாவட்டக் கழகம் மூன்று நாள் பரப்புரைப் பயணங்கள் நடத்தியது (ஜூலை 14, 15, 16) சென்னை மாவட்டக் கழகம் வி.பி.சிங், காமராசர் சாதனைகளை விளக்கும் பொதுக் கூட்டம் நடத்தியது (ஜூலை 21).
உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையில் மாவட்டக் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது (ஜூலை 29). மாட்டிறைச்சிக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்டதற்காக கோவை மாநகர கழகப் பொறுப்பாளர் நிர்மல் குமார், இந்து முன்னணியினர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டு 10 நாள் சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் விடுதலையானார்.
ஆகஸ்ட் 12 : பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு காலை முதல் இரவு வரை நடந்தது. மாநாட்டின் வெற்றிக்கு கழகத் தோழர்கள் உழைத்தனர்.
செப்டம்பர் : மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிடவும் புதிய வர்ணாஸ்ரமக் கல்விக் கொள்கையின் ஆபத்துகளை மக்களிடம் விளக்கவும் கழக சார்பில் பரப்புரைப் பயணம் தொடங்கியது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு, மயிலாடுதுறை, மேட்டூர், சென்னை என்று ஆறு முனைகளிலிருந்து பயணக் குழு செப். 17இல் தொடங்கியது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நிறைவு விழா மாநாடு செப். 20ஆம் தேதி எழுச்சியுடன் நடைபெற்றது. முதலில் இந்தப் பயணம் ஆகஸ்டு 26இல் தொடங்கி 30இல் நிறைவடையத் திட்டமிடப்பட்டு பயணமும் தொடங்கிவிட்டது. முதல்நாள் பயணம் முடிந்த நிலையில் காவல்துறை பரப்புரைக்கு தமிழகம் முழுதும் திடீரென அனுமதி மறுத்தது. அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்புக் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாகும் என்ற காரணம் கூறி காவல்துறை அனுமதி மறுத்தது. பயண ஏற்பாடுக்கான வாகனம், ஒலிபெருக்கி, விளம்பரம் என்று பெரும் பொருள் செலவுடன் பயணத்தைத் தொடங்கிய நிலையில் பொருள் இழப்புக்கிடையில் பயணத்தை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தோழர்கள் தள்ளப்பட்டார்கள். மீண்டும் செப்டம்பரில் திட்டமிட்டபடி தோழர்கள் பயணத்தை நடத்தி முடித்தார்கள்.
சென்னையில் விநாயகர் அரசியல் ஊர்வலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை பெரியார் கைத்தடி ஊர்வலங்களை நடத்தி வந்த சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இந்த ஆண்டு புத்தர் சிலைகளை ஏந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி கைதானார்கள் (செப்.8).
அக்டோபர் : பள்ளிப்பாளையம் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தையொட்டி காமராசர் நினைவு நாளான அக்.2ஆம் தேதி புதிய கல்விக் கொள்கை நகல் கிழிப்புப் போராட்டத்தை சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, கோவை, ஈரோடு, பழனி, சென்னை ஆகிய ஊர்களில் தோழர்கள் நடத்தி கைதானார்கள்.
நவம்பர் : இராசிபுரத்தில் கழக சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. பெரியார் இயக்கம் 1957 நவம்பர் 26இல் அறிவித்த அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதாகி சிறையிலும், விடுதலையான ஒரு மாதத்திலும் உயிர்நீத்த கழகப் போராளிகளை நினைவுகூர்ந்து திருச்சி, கோபி, கோவையில் பெரியார் சிலை முன் கழகத் தோழர்கள் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்றனர். திருப்பூரில் சட்ட எரிப்புப் போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூரும் பொதுக் கூட்டத்தை கழகம் நடத்தியது.
நவம்பர் 25 அன்று கழக சார்பில், அம்பத்தூர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த கொளத்தூர் புலியூரில் மாவீரர் நாளை கழகம் எழுச்சியுடன் நடத்தியது (நவம்பர் 26).
இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்து இப்போது அதிபராகியுள்ள கோத்தபய ராஜபக்சேவை மோடி ஆட்சி விருந்தினராக அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் இலங்கை தூதரகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
டிசம்பர் : மேட்டுப் பாளையத்தில் ஜாதிச் சுவர் இடிந்து, 17 தலித் மக்கள் உயிர்ப் பலியானதைக் கண்டித்து கழக சார்பில் சென்னையிலும் (டிசம்பர் 3), சேலத்திலும் (டிசம்பர் 4) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கழகத்தின் தலைமைக் குழு சென்னையில் தலைமைக் கழக அலுவலகத்தில் கூடி செயலவையில் முன் வைக்க வேண்டிய பிரச்சினைகளை விவாதித்தது. டிசம்பர் 28ஆம் தேதி கழக செயலவையை சென்னையில் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 26122019 இதழ்