நீலம் பண்பாட்டு மய்யம் நடத்திய அரசியலமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்
நீலம் பண்பாட்டு மய்யம் சார்பில் ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்ட நாள் கருத்தரங்கம்’ நவம்பர் 26ஆம் தேதி மாலை சென்னை சேத்துப்பட்டு உலக பல்கலைக் கழக சேவை மய்யத்தில் நடந்தது. ‘பிளாக் பாய்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயக்குனர் ரஞ்சித் அறிமுக உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரசியலமைப்பு நகலை அறிமுகம் செய்து, புரட்சியாளர் அம்பேத்கர் நிகழ்த்திய ஆழமான உரையை சுட்டிக் காட்டிப் பேசினார். அம்பேத்கர் மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு எழுதிய நூலில் வடநாடு பிற்போக்கானது; தென்னாடு முற்போக்கானது. இந்தி பேசும் மாநிலங்கள் தென்னகத்தை அடக்கியாளுவதற்கேற்ப மாநிலப் பிரிவினை நடத்தியிருக்கிறது. இந்தியாவுக்கு தென்னாட்டில் ஹைதராபாத்திலும் ஒரு தலைநகரம் உருவாக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ் கட்சி), சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), திருமுருகன் காந்தி (மே 17), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), ஜக்கையன் (ஆதி தமிழர் கட்சி), யாக்கன் (எழுத்தாளர்), வழக்கறிஞர் அஜிதா ஆகியோர் உரையாற்றினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் சிந்தனைகளை பல்வேறு கோணங்களில் வரலாற்றுப் பின்புலத்தோடு கருத்தாளர்கள் உரையாற்றினர்.
பெரியார் முழக்கம் 05122019 இதழ்