நீலச் சட்டைப் பேரணி : கழகம் தயாராகிறது

சேலம் – சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், 16.11.2019 அன்று சேலம் இளம்பிள்ளை நகர அமைப்பாளர் தனசேகர் இல்லத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்டத் தலைவர் கருப்பூர் சக்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில், நீலச் சட்டைப் பேரணிக்கு தோழர்கள் அதிகளவில் பங்கேற்பது, சேலத்தில் அலுவலகம் அமைப்பது, கிளைக் கழக பயிற்சி வகுப்புகள், மாணவர் பிரச்சினைக்கான துண்டறிக்கைகளை கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் கொடுப்பது போன்ற கருத்துக்கள் தோழர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இறுதியாக கழகத் தலைவர், தோழர்களிடத்தில் கழகச் செயல்பாடுகள் மற்றும் நீலச் சட்டைப் பேரணிக்கு அதிகளவில் பங்கேற்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

கலந்துரையாடலில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சேலம் மாநகரத் தலைவர், சேலம் சரவணன் (மூணாங்கரடு), கிழக்கு மாவட்டத் தலைவர்  சக்திவேல், சேலம் மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட துணைத் தலைவர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட அமைப்பாளர்கள் பாலு, முத்து மாணிக்கம் , சேலம் மாநகர செயலாளர் பரமேஷ் மேற்கண்ட புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் அறிவித்தார். அதன்பின், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முன்மொழியப்பட்டன.

  • சேலம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு தலைமை அலுவலகம் வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
  • பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக வருகின்ற 22.12.2019 கோவையில் நடைபெறவுள்ள நீலசட்டைப் பேரணிக்கு அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும்.
  • கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக தோழர்கள் கிளைக் கழகப் பயிற்சி வகுப்புகள், பள்ளி, கல்லூரிகள் முன்பு துண்டறிக்கை கொடுத்தும், தெருமுனை பிரச்சாரங்கள் மேற்கொள்வது.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக சேலம் மாநகரச் செயலாளர் பரமேஸ்குமார் நன்றி கூறினார்.

கோவையில் – 17.11.2019 ஞாயிறு அன்று காலை 11 மணி அளவில் கோவை வ.உ.சி. பூங்காவில் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டிசம்பர் இறுதிக்குள் 250  ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, 70 ‘நிமிர்வோம்’ சந்தாக்களை சேர்த்து  தொகையையும் சந்தா புத்தகத்தையும் தலைமையிடம் ஒப்படைப்பது எனவும்,

நவம்பர் 26 – ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தி சிறைச் சென்ற போராளிகளுக்கு வீரவணக்கம் மற்றும் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது எனவும், மற்றும் அதையொட்டி கோவை மாவட்டத்தில், அரசே தன் நிதியை ஒதுக்கி அமைத்துக் கொடுத்த இரட்டை சுடுகாடுகள் உள்ள ஊர்களின் பட்டியலை எடுத்து தலைமையின் ஆலோசனைப்படி போராட்டத்தை முன்னெடுப்பது எனவும்,  டிசம்பர் 2வது வாரத்தில் கோவை அன்னூரில் திராவிடர் விடுதலை கழகத்தின் கொடியேற்று விழா மற்றும் பெயர்ப் பலகை திறப்பு விழா நடத்துவது எனவும்,

டிசம்பர் 22 பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவையில் நடைபெறவுள்ள நீலச்சட்டை பேரணி மற்றும் ஜாதி ஒழிப்பு மாநாடு வெற்றிகரமாக நடத்திட களப்பணியாற்றுவது திவிகவுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதியை சேர்த்து கொடுத்திட உழைப்பது மற்றும் தோழர்கள் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. தோழர்கள் நேருதாசு, நிர்மல், வெங்கட், மருதாசலம், விஷ்ணு கலந்து கொண்டனர்.

சென்னையில் – திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல், 17.11.2019 அன்று மாலை 6 மணிக்கு தலைமைக் கழக அலுவலகத்தில், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தொடங்கி நடைபெற்றது. மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார்.

கோவையில் நீல சட்டைப் பேரணிக்கு அதிகளவில் கலந்து கொள்வது, அதற்கான ஏற்பாடுகள், சென்னையின் பல பகுதிகளில் இயக்கத்தைக் கட்டமைப்பது போன்றவை விவாதிக்கப்பட்டன. தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தனர். அதையடுத்து கழகப் பொதுச் செயலாளர் நீலச் சட்டைப் பேரணி குறித்தும், பேரணியில் அதிகளவில் கலந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் விவரித்து பேசினார். இறுதியாக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் நன்றி கூறினார்.

 

பெரியார் முழக்கம் 21112019 இதழ்

You may also like...