திருவள்ளுவர் – ‘இந்து’வா?

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலையை சிலர் அவமதித்துள்ளனர். திருவள்ளுவருக்கு ‘காவி அடையாளம்’ தந்து ஒரு பா.ஜ.க. பிரமுகர் முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து இந்த சிலை அவமதிப்பு நடந்திருக்கிறது.

திருவள்ளுவர் ஓர் இந்து என்றும், திருக்குறள் இந்து மத நூல் என்றும் பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வருகிறார்கள்.

திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; இறந்து போன சந்திரசேகரேந்திர சரசுவதி என்ற காஞ்சி மூத்த சங்கராச்சாரி என்ன கூறுகிறார்?

“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை  அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித் தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை… வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிரவாதிகள் விஷ்ணு சாமியே அல்ல, சிவன்தான் சாமி, விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.” (ஆதாரம்: ‘தெய்வத்தின் குரல்’)

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் ‘இந்து’ என்ற பெயர் சூட்டப்பட்டது; வள்ளுவர், எப்படி ‘இந்து’ வானார்? அவர் பிரிட்டிஷ் ஆட்சி நடக்கும்போதுதான் பிறந்தார் என்று கூறப் போகிறார்களா?

பெரியார் ஒருவரைத் தவிர அத்தனை தலைவர்களையும் ‘இந்து’வாக்கிவிட்டது ‘சங்பரிவார்’ பார்ப்பனியம்!

இப்போது திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை.

பெரியார் முழக்கம் 07112019 இதழ்

You may also like...