கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்
பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பில் இந்துத்துவ சின்னங்களை திட்டமிட்டு ஒளிரச் செய்யப்படுவதா?
அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரான இந்த இந்துத்துவ அடையாள திணிப்புகள் தமிழக அரசின் விழாக்களில் திட்டமிட்டு செய்யப்படுமானால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கை !
பெரியார் பல்கலைக் கழகத்தின் 19ஆவது பட்டமளிப்பு விழா 24.10 2019 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் பெரியாரின் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது தற்செயலாய் நடந்தது அல்ல. இந்துத்துவவாதிகளால் திட்டமிடப்பட்ட கடும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.
இந்நிகழ்வு நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் ஆளுயர பெரியார் சிலை உள்ளது. இந்த பெரியார் சிலையின் பின்புலத்தில் வண்ண விளக்குகளால் இந்துத்துவ குறியீட்டு சின்னங்களான திரிசூலம், விநாயகர் படம், ஓம் என்கிற சமஸ்கிருத எழுத்து ஆகியவை மாறி மாறி ஒளிரும்படி திட்டமிட்டே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்ட சாசனம் உறுதியாக அறிவித்துள்ள நிலையில் ஒரு அரசு விழாவில் அதுவும் கல்லூரியில் பார்ப்பன இந்துத்துவ அடையாள சின்னங்களை திட்டமிட்டே அதுவும் காலம் முழுவதும் சனாதன இந்துத்துவத்திற்கு எதிராக, பார்ப்பனர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்கள் என ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த அறிவாசான் பெரியாரின் சிலை பின்புலத்தில் இப்படி இந்துத்துவ அடையாள சின்னங்களை ஒளிரச் செய்வது மாபெரும் அயோக்கியத்தனமாகும்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல். இதன் பின்புலத்தில் இருப்பது பெரியார் பல்கலைக் கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பொ. குழந்தைவேலு எனும் இந்துத்துவாதிதான் முதல் காரணம்.
கல்லூரியில் இந்திய அரசியல் சட்டம் சொல்லும் மதசார்பற்ற தன்மையையும், அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் இந்த துணைவேந்தர் பொ. குழந்தைவேலு தன் கடமையில் தவறியதோடு மட்டுமல்லாமல் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் நடந்த குற்றத்தை செய்துள்ளார். இவர் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தராக நீடிக்கவும் தகுதியற்றவர் ஆவார்.
யார் இந்த துணைவேந்தர் பொ. குழந்தைவேலு?
பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா, இவர் இல்லாத போதும்கூட அறையை திறந்து அமர்ந்து பாஜக ஆட்களுடன் சட்ட விரோதமாக மணிக்கணக்கில் உரையாடும் அளவிற்கு இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவைதான் இந்த பொ. குழந்தைவேலு.
விவேகானந்தர் ரதம் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள் காவிகள் ரத ஊர்வலம் சென்றபோது தன் கல்லூரி மாணவர்களை அந்த இரதத்தை வரவேற்க கட்டாயம் வர வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய இந்துத்துவவாதிதான் இந்த
பொ. குழந்தைவேலு.
துணைவேந்தராக பதவியேற்ற பின் துணைவேந்தர் அறைக்குள் சட்டவிரோதமாக சரஸ்வதி படத்தையும், சட்டவிரோதமாக பல்கலைக்கழகத்தின் செலவிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை கல்லூரிக்குள் திணிப்பவர் தான் இந்த பொ. குழந்தைவேலு.
மு. ராம்குமார் எனும் ஆர்.எஸ்.எஸ் நபர் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் இணை விரிவுரையாளராக இருக்கிறார். இவர் தன் முகநூல் முழுவதும் இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை பரப்பி வருபவர் ஆவார். இவர் தான் 24.09.2019 அன்று துணைவேந்தர் இல்லாதபோதும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜாவை சட்டவிரோதமாக அமர வைத்து ஆலோசனைகளை செய்தார். அதில் எச். ராஜாவுடன் பா.ஜ.க.வினர் 19 பேர், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தமிழ்த் துறைத் தலைவர் பெரியசாமி, ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியும் ஆட்சிக் குழு உறுப்பினருமான குமாரசாமி ஆகியோர் ஆலோசனையில் கலந்து கொண்டவர்கள். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொ.குழந்தைவேலு ஆதரவுடன் இந்த சட்டவிரோத செயல்கள் இந்துத்துவ திணிப்புகள் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறு இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்ற தன்மை, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஆகியவற்றிற்கு எதிராகவும் சட்டவிரோதமாக நடந்து கொள்ளும் துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, புவியியல் துறையின் இணை விரிவுரை யாளர் மு.ராம்குமார் எனும் ஆர்.எஸ்.எஸ். நபர் ஆகியோர் தொடர்ந்து இந்த பொறுப்பு களில் நீடிக்கலாமா என்பதை நடுநிலையாளர்களின் சிந்தனைக்கே விடுகிறோம்.
இதில் மிகவும் வெட்கக்கேடான செய்தி இவ்வளவு சட்ட விரோத நிகழ்வுகள் நடக்கும் இடத்தில், பெரியார் சிலையை இந்துத்துவவாதிகள் அவமதிப்பதை பார்த்துக்கொண்டு அண்ணாவின் பெயரால் இயங்கும் அதிமுகவைச் சேர்ந்த தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இந்துத்துவவாதிகளுடன் இணைந்து கொண்டு தான் ஏற்றுக்கொண்ட பதவி பிரமாண வாக்குறுதியை மீறினார் என்பதாகும். இவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியரைப் போலவே நீளமான நெற்றி குறியீட்டில் இருப்பதும் மத சார்பற்ற தன்மைக்கு எதிரானது, வெட்கக் கேடானது.
தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசு அலுவலகங்களில் மத சம்பந்தமான படங்களோ, வழிபாடுகளோ நடத்தக்கூடாது என அரசாணை வெளிட்டார் என்பதும் அது இப்போதும் நடைமுறையில் இருக்கிறது என்பதும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்களுக்கு தெரியுமா ? என்று கேட்கிறோம். தமிழக அரசின் அரசாணைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள ஒரு அமைச்சரே இந்த அரசாணைக்கு எதிரான செயல்களுக்கு துணைப் போவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தேவைப்பட்டால் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசாணையை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்களுக்கு அனுப்பி வைக்கவும் தயாராக உள்ளோம். அமைச்சர் அவர்கள் அதனை படித்து தெளிய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்
சேலம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொ. குழந்தைவேலு, புவியியல் துறையின் இணை விரிவுரையாளர் ஆர்.எஸ்.எஸ். நபர் மு. ராம்குமார் கும்பலின் இந்த சட்டவிரோத செயல்களை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இவர்களின் இந்த அடாவடிப் போக்குக்கு எதிராக பல்கலைக் கழகத்தின் மாணவர் அமைப்புகள், ஒத்த கருத்துள்ள மதசார்பற்ற முற்போக்கு சக்திகளை இணைத்துக் கொண்டு கடும் போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரிக்கிறோம்.
ஏற்கனவே இருந்த துணைவேந்தர் சேதுராமலிங்கம் என்பவர் வாஸ்துபடி துணைவேந்தர் அறையை மாற்றி அமைத்தபோதும், யாகங்கள் வளர்த்த போதும் அதனைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தினோம். பல்கலைக் கழகத்தின் எதிரிலேயே என் தலைமையில் மூத்த பெரியார் தொண்டர் திருவாரூர் தங்கராசு கலந்து கொண்ட “யாக மோசடி விளக்கப் பொதுக்கூட்டம்” நடத்தினோம் என்பதை நினைவூட்டுகிறோம். இந்த சேதுராமலிங்கம், மருமகளை கொடுமைப்படுத்திய வழக்கில் சிறையில் இருந்த குற்றவாளியும் ஆவார்.
விவேகானந்தர் இரத யாத்திரையில் இப்போதைய துணைவேந்தர் பொ. குழந்தைவேலு மாணவர்களை கலந்து கொள்ள கட்டாயப்படுத்தி சுற்றறிக்கை அனுப்பியதை கண்டித்தும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கடும் போராட்டங்களை முன்னெடுத்தோம் என்பதையும் நினைவூட்டுகிறோம்.
தமிழக அரசு உடனடியாக பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரின் இப்போக்கில் தலையிட்டு தடுத்து நிறுத்தி இந்த குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், அரசு விழாக்களில் இதுபோன்ற திட்டமிட்ட இந்துத்துவ திணிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
*கொளத்தூர் மணி
தலைவர்
பெரியார் முழக்கம் 31102019 இதழ்