இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்

ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று பா.ஜ.க.வினர் பேசுவது உண்மைகளைத் திரிப்பதாகும்.

ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டைப் பிரதி பலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.

மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து வெறியரான  மூஞ்சே என்ற பார்ப்பனர்தான் அவருக்கு உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். ஞானத் தந்தைகளாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் திலகரும், சிவாஜியும்தான். 1910ஆம் ஆண்டிலிருந்து 1915ஆம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற இவர் தங்கிய விடுதி அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங் களாக செயல்பட்டன. பல வன்முறை இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர் களும் அங்கு வருவது உண்டு.

இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும். ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வமானதும், சி.பி.பிஷிகார் என்பவரால் எழுதப்பட்டதுமான நூல் (பக் 13) கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

“கல்கத்தாவுக்குச் சென்றவுடன் ஹெட்கேவர் ‘அனுசிஹிலன் சமிதி’ என்ற அமைப்பின் நெருக்கமான உறுப்பினராக சேர்ந்துக் கொள்ளப் பட்டார். ஆபத்துக்கள் நிறைந்த பல முக்கியமான இரகசிய வேலைகள் அவருக்குத் தரப்பட்டது. புரட்சியாளர் களுக்கு பயங்கரமான ஆயுதங்களை இரகசியமாக கொண்டு சென்றார்”  என்று கல்கத்தா போன உடனேயே இவர் புரட்சிக்காரராக மாறிவிட்டதுபோல், ஒரு தோற்றத்தைத் தந்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் அது வேறாக இருக்கிறது!

ஜே.ஏ. குர்ரன் (து.ஹ.ஊரசசயn) எழுதிய “ஆடைவையவே

ழiனேரளைஅ in ஐனேயைn ஞடிடவைiஉள” நூலில் (பக்கம் 13இல்) உண்மையை உடைத்துக் காட்டுகிறார்!

“கல்கத்தாவுக்கு ஹெட்கேவர் போனவுடன், புரட்சி இயக்கங்கள் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், அவர் சிறைக்குச் சென்றதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிரிட்டிஷார் அவரை போலீஸ் காவலில் வைத்திருந்தார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது” – என்று ஹெட்கேவரின் ‘புரட்சி வாழ்க்கை’யின் புரட்டுகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறார்.

ஆபத்து தரக்கூடிய பல இரகசிய வேலைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர, எந்த வேலையைச் செய்தார்? எங்கே தூது போனார்? எந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு போனார்? என்பதற்கான விளக்கங்கள் எதையுமே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!

கல்கத்தாவிலே சிறைச்சாலையிலே அடைக்கப் பட்டார் என்று அப்பட்டமான ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் கூச்சப்பட வில்லை’ ஹெட்கேவர் வாழ்க்கை வரலாறும் ஆர்.எஸ்.எஸ்.வரலாறும் ஒன்றே என்கிறார்கள். இந்த ‘சத்தியகீர்த்திகள்’. ஆனால், இந்த ‘உத்தமப் புத்திரர்’களின் கதைகள் பொய்மை மூட்டைகளாக விளங்குகின்றன.

கல்கத்தாவில், மருத்துவ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஹெட்கேவர் நாக்பூர் திரும்புகிறார்! அப்போது முதலாம் உலக மகாயுத்தம் துவங்கி விட்டது. யுத்தத்தில் இங்கிலாந்தும் சம்பந்தப்படு கிறது! அந்த யுத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டிலே ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

முதலாம் உலக மகா யுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டு பார்ப்பனர்கள்! காரணம், ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்துவிடும் என்று நம்பி, அந்த ஆட்சியிலே தங்கள் செல்வாக்கைப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!

ஜெர்மன் – பாசிச இயக்கத் தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ்.!

“இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர்தான் குரு. காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம், சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள். காந்தியாரை ஒரு தலைவராகவே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

1965ஆம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்.”

நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது –  மதுலிமாயி அவர்கள். ‘சண்டே’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி யாகும். (10.6.1979 சண்டே இதழ்) இந்தப் பின்னணியில் முதலாவது உலக மகாயுத்தத்தைப் பயன்படுத்தி, உள்நாட்டில் ஆயுதப் புரட்சி நடத்திட, இவர் போட்ட திட்டத்தின் நோக்கம் என்ன?

ஹெட்கேவர், தனது இந்தத் திட்டம் பற்றி, இவரின் ஞானகுரு திலகரிடம் எடுத்துச் சொன்னபோது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று புறக்கணித்துத் தள்ளிவிட்டார்; இதற்கு எந்த முக்கியத்துவமும் திலகர் கொடுக்கவில்லை. திலகர் ஆதரவு இல்லை என்றவுடன், ஹெட்கேவரின் வீரமும் குறைந்தது. (இந்தக் கருத்துக்களை ‘பிஷிகார்’ தமது ‘சங்நிர்மதா’ நூல் பக்கம் 13-ல் விளக்குகிறார்.)

“நாக்பூருக்கு திரும்பிய ஹெட்கேவர், இந்து மகாசபையில் தான் சேர்ந்து விட்டதாகவும், அந்த அமைப்புக்குத் தேவையான நூல்கள், வெளியீடு களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரே தனது நண்பர்களிடம் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றத் துக்கான எண்ண ஓட்டங்கள் இந்தக் காலத்தில்தான் அவருக்கு உருவானது.”

“அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபையிலும் ஒரே நேரத்தில், வேலை செய்கிறார்! ‘ராஷ்டிரிய உத்சவ மண்டல்’ என்ற அமைப்பிலும் தீவிரமாகப் பங்கெடுத்தார்.

‘அக்ஹதா’ என்ற மாணவர் அமைப்பிலும், பொதுக் கூட்டங்கள், மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கொண்டார்” என்ற தகவல்களை பிஷிகார் தமது நூலில் குறிப்பிடுகிறார். இவர் அப்போது தீவிரமாகப் பங்கெடுத்த ‘ராஷ்டிரிய உத்சவ மண்டல்’ என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பாகும்.

இந்த வகுப்பு வெறிக் கும்பல் மகாராஷ்டிர மாநிலத் தில் பிவாண்டி என்ற இடத்தில் மிகப் பெரிய வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தி, விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அமைப்பு.

ஒரே நேரத்தில் இந்து மகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து இரட்டை உறுப்பினராக பணியாற்றும்முறை அப்போது இருந்தது! பின்னர் அது ஒரு பிரச்சனையாக வெடித்துக் கிளம்பியபோதுதான் 1934ஆம் ஆண்டு அதில் இந்திய காங்கிரஸ் ‘இரட்டை உறுப்பினர்’ முறையை தீர்மானம் நிறைவேற்றி தடை போட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

‘மூத்த தலைவர்கள் பலருடன் ஹெட்கேவர் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவர்கூட இவரின் ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு ஆதரவு தரத் தயாராக இல்லை’ என்று எழுதுகிறார் ‘பிஷிகார்’ தனது நூலில் (பக்-27)

இந்து மத வெறியர்களில் ஒருவராக இருந்த டாக்டர் ‘மூஞ்சே’யோடுதான் இவர் மிகவும் நெருக்கமாக இருக் கிறார். தனது திட்டங்களுக்கு ஆதரவில்லாத நிலையில் 1920ஆம் ஆண்டு நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டுக்குச் செல்கிறார். காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்று இவர் அறிவித்துக் கொண்டாலும் 1921ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறார்.

இதற்கான காரணம் என்ன என்பதை பிஷிகார் தனது நூலில் விளக்குகிறார்.

“பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து ஆயிரக்கணக் கானவர்கள் சிறைச்சாலைக்குப் போகும் நேரத்தில் நீ மட்டும் மறைந்துக் கொண்டிருக்கிறாயே… இது வெட்கக்கேடு அல்லவா? என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதே என்ற காரணத்தால்தான் காந்தியாரின் இயக்கத்தில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்டார்” என்று ‘பிஷிகார்’ தமது நூலில் பக்கம் 30இல் குறிப்பிடுகிறார்.

ஹெட்கேவர் மிகப் பெரிய தேசபக்தர் என்றும், காந்தியாரோடு சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத் தவர் என்றும் ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகள் அவரது பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.  அதையே காரணம் காட்டி, காந்தியார் கொலைக்கும் தங்கள் அமைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று வாதாடுகின்றனர். இந்த வாதத்திலே நேர்மை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் காந்தியார் இயக்கத்தின் எத்தகைய சூழ்நிலையில் அவர் பங்கேற்றார் என்பதை நாம் விளக்கியிருக்கிறோம்!   இதற்கு ஆதாரமாக இன்னொரு வாக்குமூலத்தை யும் இங்கே தருகிறோம்.

மராட்டிய மாநிலத்தின் முதல் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தவர் ஜி.எம். ஹட்டர். அவர் ‘ஆர்.எஸ்.எஸ்.சும் நேதாஜியும்’ என்ற தலைப்பில் 7.10.79 ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ இதழில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்…

“ஹெட்கேவர் காந்தியார் இயக்கத்தில் இருந்தார் என்பதும், சிறைக்குச் சென்றார் என்பதும் உண்மைதான். ஆனால், அதை வைத்துக் கொண்டு மக்கள் கிளர்ச்சியை விரும்பினார் என்று சொல்லிவிட முடியாது. காந்தி யாரின் திட்டத்தை ஆதரித்தார் என்றும் சொல்லிவிட முடியாது.  மற்ற தேச பக்தர்களைப் போல் தனக்கும் மக்கள் இயக்கத்தில் நம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்வதற்கும், தானும் சிறைக்குப் போக அஞ்ச மாட் டேன் என்பதை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குமே அப்போது அவர் காந்தியார் இயக்கத்தில் பங்கேற்றார்” – என்று உறுதியாகக் குறிப்பிடுகிறார். கூறுபவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிலேயே முக்கிய புள்ளி.

தானும் தேசபக்தர்தான் என்று நாட்டு மக்களிடம் காட்டிக் கொள்வதற்காக, காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்ற ஹெட்கேவர் 1922ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளி வருகிறார். வெளியே வந்தவுடன் காந்தியாரைப் பற்றி கடுமையான எதிர்ப்புப் பிரச்சாரத்தில் இறங்குகிறார். முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் போகிறார் காந்தியார் என்ற வகுப்புவாதப் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அதைத் தொடர்ந்து 1923ஆம் ஆண்டு நாக்பூரில், ஒரு பதட்டத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள்.

நாக்பூரிலே மசூதியின் முன் ஊர்வலம் நடத்திட வேண்டும்; முஸ்லிம்கள் எதிர்ப்பார்கள்… அதை பயன்படுத்திக் கொண்டு, முஸ்லீம்களுக்கு எதிராக ஒரு கலவரத்தையே நடத்திக் காட்டவேண்டும் என்று திட்டமிட்டார் ஹெட்கேவர்!

இந்தப் பிரச்சனையில் சமாதான உடன்படிக்கை எதையும் ஏற்கக்கூடாது; இந்துக்களின் உரிமையை நிலை நாட்டிக் காட்டவேண்டும் என்று சவால் விட்டு, வேலைகளை ஆரம்பித்தார். டாக்டர் மூஞ்சே (ஆர்.எஸ்.எஸ்.சை தொடங்கியவர் களில் ஒருவர்), ஹெட்கேவர் இருவருமே முன்னின்று இதை நடத்தினார்கள். ஒலிபெருக்கிகள் முழங்க முஸ்லீம்களை இழிவு படுத்திக் கோஷம் போட்டுக் கொண்டு, அவர்களை வன்முறைக்கு அழைக்கும் ஊர்வலம் மசூதி வழியாக சென்றது; ஆனால், இந்த மதவெறிக் கும்பலின் ஆசையில் மண் விழுந்துவிட்டது.

முஸ்லீம்கள் எவரும் ஆத்திரப்படாமல் அமைதி காத்தனர். ஊர்வலம் அமைதியாக சென்றுவிட்டது. ஆனால், இதை மிகப் பெரிய முதல் வெற்றி என்று அவர்கள் பறை சாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்! இந்த சம்பவம் நடந்தது 1923ஆம் ஆண்டு!

அதே ஆண்டு, உடல் பயிற்சி அமைப்பு ஒன்றை துவக்குகிறார் ஹெட்கேவர்! அதற்குப் பெயர் ‘மஹாராஷ்டிரா வியாயம் ஷாலா’. அத்துடன் தொண்டர் படை ஒன்றையும் ஏற்படுத்துகிறார். அதற்குப் பெயர் ‘ராஷ்டிரியம் சேவக் மண்டல்’. இவைகள் எல்லாம் 1925ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான முன்னோடி நிகழ்ச்சிகள்.

முஸ்லீம்களை கலவரத்துக்கு அழைக்கிறார்; உடற்பயிற்சி அமைப்பை உருவாக்குகிறார்; தொண்டர் படை அமைக்கிறார். அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.சை உருவாக்குகிறார் என்பதிலிருந்தே, வன்முறைக் கலவரத்தை திட்டமிட்டு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த அமைப்பு உருவெடுத்தது என்பது விளங்குகிறது அல்லவா? ஹெட்கேவரைப் பொறுத்தவரை அவர் மூளை பலம் என்பதைவிட, உடல் பலத்திலேதான் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

குத்து விளையாட்டுகளும் குஸ்தியும் தெரிந்த – இந்த உடல்கட்டு மிக்க மனிதர். ஒரு சிந்தனையாளராக விளங்கினார் என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது; ஆனால், ஆர்.எஸ்.எஸ் வெளியீடுகள் எல்லாம் இல்லாத பெருமைச் சுமைகளை எல்லாம் இந்த மனிதரின் தலைமீது தூக்கி வைத்து, இவரை ஒரு மிகப் பெரிய சிந்தனையாளராக சித்தரித்துக் காட்டுகின்றன. ஆனால், அவைகள் உண்மைக் கலப்பில்லாத பொய்கள்; புனையப் பட்ட புனைந்துரைகள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களைக் கொண்டு நம்மால் விளக்க முடியும்!

‘ஹெட்கேவர், அந்தக் காலத்தில் குறிப்பிடத்தகுந்த புரட்சியாளர்களில் ஒருவர். கல்கத்தாவில் மாணவராக இருந்தபோதே புரட்சிகர அமைப்புகளில் பங்கு கொண்டவர். அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தீவிரமான உறுப்பினர்’  – என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூறுகிறார்கள். (நாக்பூர் நீதிமன்றத்தில் தேவரஸ், ராஜேந்திரசிங் ஆகியோர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 8ஆவது பாராவைத்தான் மேலே எடுத்துக் காட்டியிருக்கிறோம்.)

கல்கத்தாவில் எந்தப் புரட்சி இயக்கத்தில், என்ன பங்கேற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் சொல்லப்பட வில்லை. இவர் காங்கிரஸ் கட்சியிலேயே தீவிரமாகப் பங்கு கொண்டவர் என்ற வாதத்திலும் நேர்மை இல்லை; நாணயம் இல்லை.

இவருக்கு ‘குரு’வாக இருந்து, இவரை உயர்த்தி விட்டவர் டாக்டர் மூஞ்சே! ஆனால், ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளில் ஹெட்கேவருக்கு, இவர் மெய்ப் பாதுகாவலராக இருந்தார் என்று எழுதுகிறார்கள்!  இவருக்கு ‘இந்து ராஷ்டிரம்’ என்ற தத்துவத்தை எடுத்துச் சொன்ன ‘வீர சவர்க்கார்’ பற்றி இவர்கள் வெளியீடுகளில் எந்தக் குறிப்பும் தரப்படவில்லை. பாய்பரமனானந்த் என்பவர்தான் வட இந்தியாவில், குறிப்பாக சிந்த், பஞ்சாப், டில்லி பகுதிகளில் இந்த ஆர்.எஸ்.எஸ்.சை வளர்த்தவர். ஆனால், எல்லா இடங்களிலும் ‘குருஜீ’யின் செல்வாக்கால்தான் வளர்ந்தது என்பதைக் காட்டுவதற்காக, இவரின் பெயரையே இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.

ஹெட்கேவர் நூலகங்களில் படித்தார்; சிந்தித்தார் என்பதற்கு ஆதாரங்களே இல்லை; வைதீகப் பார்ப்பனர் பரம்பரையில் வந்த அவருக்கு, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித் தனத்தை வன்முறை மூலம் பரப்பிட வேண்டும் என்ற துடிப்பு இருந்திருக்கிறதே தவிர சிந்தனை வளம் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த ஒரு தாழ்வு மனப்பான்மை அவர்களையே உறுத்திக் கொண்டிருக் கிறது! எனவே அதன் வெளிப்பாடுகளை – அவர்கள் நூல் முழுதும் பார்க்க முடிகிறது.

ஆதாரம்: ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம் நூல்

இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட ஹெட்கேவரை சுதந்திரப் போராட்ட தியாகி என்றும் ஆர்.எஸ்.எஸ். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தது என்றும் பா.ஜ.க.வின் ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

 

பெரியார் முழக்கம் 31102019 இதழ்

You may also like...