பார்ப்பன தேசிய பத்திரிகைகளால் இருட்டடிக்கப்பட்டார் வ.உ.சி.
வரலாற்றுச் சான்றுகளுடன் கொளத்தூர் மணி உரை (3)
05.09.2020 அன்று தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைத்த வ.உ.சி. பிறந்த நாள் இணைய வழி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.
1929 இல் செங்கல்பட்டு முதலாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார், வணங்கபடுவதற்கும், வணங்கு பவனுக்கும் இடையில் இடைத்தரகர்களோ, வட மொழியோ தேவையில்லை என்று ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். அதை ஏற்றுக் கொண்டுதான் வ.உ.சியும் இலஞ்சம் வாங்காத நீதிபதியிடம் தரகர் வேண்டாமே என்று பேசுகிறார். அதனால் தான் சைவர்கள் வ.உ.சி யையும் ஒதுக்கினார்கள். சைவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா அவர்களும் கிளர்ந்தெழுந்து வ.உ.சி யை எதிர்க்கிறார்கள். அதில், முத்தையாப் பிள்ளை என்ற ஒருவர், “பிடிவாதத்தால் கப்பல் விடப் போய் அதனால் கிடைக்கும் தண்டனையினால் பாடம் கற்காதவர், சர்வ வல்லமை மிக்க பிரிட்டிஷாரின் கட்டளையையே மதிக்காதவர், அதேபோலத்தான் கடவுள் கட்டளையானாலும் எதிர்க்க வேண்டும் என்று பேசுகிறார். அதற்கான துன்பத்தை அவர் அனுபவிப்பார்” என்று அவர் எழுதுகிறார். மேலும், “இவர்கள் சுதேசிக் கலகத்தின்போது தூத்துக்குடியில் தனக்குத் தோன்றிய யுக்தியே சாலச் சிறந்ததெனக்கூறி ஆரவாஞ்செய்து, அதனால் தானடைந்த பயனையும் மறந்து, உலகத்துள் ஒரு பகுதியிலும் அரசரையும் அவர் கட்டளையையும் மதியாமையால், சில நாள் மிகக் கடுந்துன்பம் அனுபவித்தவாறுபோல, சர்வலோக நாயகராகியக் கடவுளையும், அவர் கட்டளையையும் மதிக்கவில்லையாயின் நீண்டநாள் ஆற்றொணாத் துன்பத்தை அனுபவித்து வருந்துவார் என்பதையும் மறந்தமை வருந்தத்தக்கது”
இப்படி, தான் பிறந்த ஜாதியை எதிர்க்கிறார்; அதனால் அவர்களால் சாடப்படுகிறார். சுயஜாதி எதிர்ப்பிலிருந்து தானே ஒரு சமத்துவம் விரும்பும் போராளி எழுந்துவர முடியும்! வ.உ.சி. கண்ணனூர் சிறையில் இருந்த போது மெய்யறம் என்ற நூலினை எழுதுகிறார். திருக்குறளை ஒட்டி, ஏழு சீருக்குப் பதிலாக நான்கு சீரில், ஒரு வரியில் எழுதுகிறார். அதில் எவ்வளவு பக்குவப்பட்டவராக இருந்திருக்கிறார் என்பதை அறிய முடியும். அதில் வள்ளுவரின் வாழ்க்கைத் துணைநலம் போல உயிர்த்துணை கொளல் என்ற ஓர் அதிகாரம் வைத்துள்ளார். அவ்வதிகாரத்தில் நான்காவது பாடல், துணை இழந்தாரை மணப்பது புண்ணியம் விதவை மறுமணத்தைப் பற்றி அதிகம் பேசப்படாத காலத்தில் மெய்யறத்தில் ஒரு குறளாகவே அதை எழுதுகிறார்.
அடுத்து, விரும்பாதவரை விரும்புதல் பாவம் என்றும் எழுதுகிறார். அடுத்த அதிகாரத் தலைப்பு உயிர்த்துணை ஆளுதல் அதில் ‘இருவருள் அறிவிற் பெரியவர் ஆள்க’ என்றொரு குறள். குடும்பத்தில் உள்ளவர்களில் யார் அறிவானவரோ அவர்கள் குடும்பத் தலைவராக இருக்கட்டும் என்கிறார். அவ்வதிகாரத்திலேயே ‘ஆண்பால் உயர்வெனல் வீண் பேச்சென்க’ என்பது மற்றொரு குறள். ‘ஓதலின் அந்தணர்க்கு ஒழுக்கம் நன்றென்ப’ மந்திரம் ஓதுவது மட்டும் ஒழுக்கம் அல்ல; ஒழுக்கமாக இருப்பதுதான் உண்மை ஒழுக்கம் என்கிறார்.
விலைமகளிரைப் பற்றியும் எழுதுகிறார். ’பரத்தையை விலக்கல்’ என்பது அதிகாரத் தலைப்பு. அவ்வதிகாரத்தைத் தொடர்ந்து, ‘பரத்தனை விலக்கல்’ என்றொரு அதிகாரம் வைத்துள்ளார். அதில் ’பரத்தை யினுமிகக் கொடியவன் பரத்தன்’ என்பதொரு குறள். அடுத்து அந்த அறிவிலியால்தான் ஒரு பெண் பரத்தை ஆகிறாள் என்ற பொருளில் ‘பொதுமகள் ஆதல் அம்முழுமகனாலே’ என்ற குறளால் ஆண்களுக்குக் கற்பு வேண்டாமா என இன்றைய நாட்களில் எழுப்பும் கேள்வியை அன்றே எழுப்பியுள்ளார் வ.உ.சி. அடுத்து துறவறத்தைப் பற்றிப் பேசுகிறார். ‘துணை அழத் துறந்து மெய் இணைதல் அன்பிலா அறம்’ என்றுகூறி குடும்பத்தைக் கைவிட்டுவிட்டு மெய்யுணர துறவு என்பதை முன்னரே ஒருகுறளில் சாடியுள்ளார். ‘துறவென இவ்வகத் துறவையே மொழிப’ மனதளவில் துறப்பதே உண்மைத் துறவாகும். ‘புறத்துறவெல்லாம் பொய்த்துறவாமே’ …. காவி ஆடை, சடை வளர்த்தல் என்பதெல்லாம் உண்மையான துறவாகாது என்கிறார். அகத்துறவைத் தான் உண்மையான துறவு என்கிறார். ‘தமரையே அளியார் பிறரை அளிப்பரோ’ தம்மைச் சார்ந்துள்ள உறவினர்களை காப்பாற் றாமல் துறவறம் போய் மற்ற உயிர்களையெல்லாம் காப்பாற்றவா போகிறார்கள் என்று வினவுகிறார். மெய்யறத்தில் தன்னை எவ்வளவு முற்போக்காக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதைக் காணமுடியும். கண்ணனூர் சிறையில்தான் மெய்யறத்தை வ.உ.சி எழுதுகிறார்.
ஓய்ந்து போனவராக அவர் எப்போதும் இல்லை என்பது தான் அவருடைய தொடர் பணிகள் நமக்குக் காட்டுகிறது. நமக்கெல்லாம் ஒரு வருத்தம் உண்டு. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வடவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. 1936 நவம்பரில் வ.உ.சி இறந்த பின் பெரியார் ‘சிதம்பரம் சிதைவு’ என்ற தலைப்பில் அக்கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு இரங்கல் செய்தி எழுதுகிறார்:
“தோழர் வி.ஓ சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி உலாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகிவிட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும். மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும் எப்படி எனில் கூனோ, குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக் காரனோ ஒருவன் புருஷனாய் அமைந்து விட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும் பின் தூங்கி முன்னெழுபவள்போலவும் இருப்பது தான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல் அரசன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அரசனை விஷ்ணுவாய் கருதி ஆட்சியை வேதக் கோட்பாடாக வும் கருதி வாழ வேண்டும் என்று இந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானமாகவும், மகா இழி வாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில், தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து துச்சமாய் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களின் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம்.
அதன் பலன் எப்படியோ, ஆனாலும் அவராலேயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுய நலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது. தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப் பாரேயானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோயில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர்கள் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை. அதுவும் சைவப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது. சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லா தாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம். அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிற படியால் ஓர் அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப் பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில் பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஓர் அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீரவேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டிய தில்லை. ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஓர் உதாரணமாகக் கொண்டு மற்ற தேசபக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக. (22.11.1936 ‘குடிஅரசு’)
காந்தியிடம் வேதியம்பிள்ளை என்பவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வ.உ.சி. அவர்களுக்கு
ரூ. 5000 பணம் கொடுத்து அனுப்புகிறார். ரூ.5000 என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை. காந்தி அந்த நிதியை கொடுக்காமல் விட்டுவிடுகிறார். வ.உ.சி. கடிதம் எழுதிக் கேட்டும் கணக்குப் பார்க்கவேண்டும் என்று சொல்லி,சொல்லி காலம் கடத்துகிறார். எட்டு வருடம் கழித்து ஆமாம் கொடுத்தனுப்பினார் என்று எழுதுகிறார். வட்டியும் முதலுமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார். வ.உ.சி.யோ வட்டி வேண்டாம் கொடுத்து அனுப்பியதை மட்டும் கொடுங்கள் என்று வாங்கிக் கொள்கிறார். ரூ.5000 மறக்கக் கூடிய தொகை அல்ல. வ.உ.சி.யும் அறியப்படாத மனிதருமில்லை. அதைத் தொடர்ந்து மற்றொரு கட்டுரையும் பெரியார் எழுதுகிறார், ஹிந்து, மெயில், மித்திரன், ஜெயபாரதி, தினமணி இடம் கொள்ளுமா? பிறப்புக்கும் பேருக்கும் அடிமையான பித்தலாட்ட தேசம் இதுதானே?
ஏ -பி வகுப்பு சிறையில்லாத முப்பதாண்டுகட்கு முன்பு சிறை புகுந்து, வக்கீல் தொழிலிழந்து, தியாகம் பல புரிந்து, கஷ்டநஷ்டங்கள் அடைந்து, கடைசி வரையில் ஏழையாகவே வாழ்ந்து, சென்ற 18ஆம் தேதியன்று, 65ஆவது வயதில் உயிர் துறந்த வ.உ. சிதம்பரம் பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால், ஹிந்து, சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும், மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகை களிலும் வேறு விஷயங்களுக்கு இடமிருக்குமா? இது வரையில் இந்நாட்டில் இறந்த வடநாட்டு படேல் களாயிருந்தாலும் சரி தென்னாட்டுப் படேல்களா யிருந்தாலும் சரி – சிதம்பரம் பிள்ளை தியாகத்துக்கு ஒப்பாகுமா?
ஜெயிலிருக்கும் திக்கே தெரியாத கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியோரின் சேவையும் தியாகமும் பிள்ளை அவர்களின் தியாகம் முன்பு உறை போடவும் கூடுமா? ரவுலட் சட்டத்தில் கையொப்பமிட்ட சர். சி.வி.குமாரசாமி சாஸ்திரிக்கும், பார்ப்பனரல்லாதாரிடமே பத்து லட்சக் கணக்கில் கொள்ளையடித்து, எல்லா சொத்தையும் பார்ப்பனருக்கே உதவ வேண்டுமென்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்து போன டாக்டர் ரங்காச்சாரிக்கும் கொடுத்த இடத்தில் 100இல் ஒரு பங்குகூட, தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கத்துக்கு, ஹிந்து முதலிய தேசிய பத்திரிகைகள் கொடுக்க வில்லையென்றால் இந்த வகுப்புவாதமே உருவெடுத்த சண்டாள பத்திரிகைகள் தேசியம் பேசி, பாமர மக்கள் தலையில் எத்தனை காலம் மிளகாய் அரைக்க உத்தேசித்திருக்கின்றனவோ தெரியவில்லையே?
போதாக்குறைக்கு சிதம்பரம் பிள்ளை காங்கிரஸ் என்று சொல்லியே உயிர் துறந்தாராம்! சி. ராஜ கோபாலாச்சாரி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சியை கண்டித்தும், காங்கிரசை விட தேசமே பெரிதென்று கர்ஜித்த சிங்கமா, அக்ரஹாரப் புலிகள் அதிகாரம் செலுத்தும் காங்கிரசைப் பற்றி மகா கவலை கொண்டு இறந்திருப்பார்? ஒரு வேளை காங்கிரசின் பேரால் பாமர மக்கள் தலை மேல் கல் விழப் போகிறதே என்று வேண்டுமானால் கவலைப் பட்டிருக்கலாம். தாலி அறுப்பு, ஜவஹர் கூட்டத்தில் யானையை விட்டது, ருக்மணி லட்சுமிபதியை சுந்தரராவ் குத்தப் போனது – போன்ற தேர்தல் அபாண்டங்களோடுதான், சிதம்பரம் காங்கிரஸ் காங்கிரஸ் என்று உயிர்விட்டார் என்ற அபாண்டத்தையும் சேர்க்க வேண்டும். சிதம்பரம் பிள்ளை விஷயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப் பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா? (29.11.1936, குடிஅரசு)
வ.உ.சி சிறைபட்டு வெளியே வந்து மளிகை கடை வைத்தார், மண்ணென்னெய் வியாபாரம் செய்தார் அந்நிலையில் இருந்த காலத்திலும் அவர் தொழிலாளர் போராட்டத்தை கைவிட்டதாக இல்லை. பல வரலாறுகளை எழுத மாட்டார்கள். விடுதலைப் போராட்டம் 1806இல் வேலூரில் நடந்திருக்கலாம்; ஆனால் அதை எழுத மாட்டார்கள். 1857 போராட்டத்தைத் தான் எழுதுவார்கள். அப்படித்தான் முதலில் கப்பல் விட்டதாக குஜராத்திக்காரர் ஒருவரைத்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். முதலில் கப்பலோட்டியது தமிழன் கணக்கில் இல்லை. வ.உ.சி கப்பல் வாங்க சென்றபோது அவருடைய மகன் உலகநாதன் இறந்ததாக தந்தியினை அவர் வரப்பெறுகிறார். அதற்கு அவர் கொடுத்த பதில் என்னவென்றால், ‘ஆண்டவன் சித்தம்’. அவ்வளவு தான் அவர் கொடுத்த பதில் தந்தி.
அதேபோல ஒரு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட முதல் வேலை நிறுத்தம் இவருக்காக செய்யப்பட்ட வேலை நிறுத்தம் தான். அதற்கு முன்னர் ஊதிய உயர்வு ஆகிய உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டம். இரண்டாவதாக நடைபெற்றது இவருக்காக நடந்த போராட்டம். 6, 7 நாட்கள் அந்த போராட்டம் நடைபெறுகிறது. முடி திருத்துபவர்கள் மட்டுமல்ல, சலவைத் தொழிலாளர்கள் தங்களிடம் கொடுத்த துணிகளை துவைக்கவும் இல்லை. திருப்பிக் கொடுக்கவும் இல்லை. போராட்டம் முடியும் வரை. ஆங்கிலேயர்கள், தூத்துக்குடியில் இருப்பது தங்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் என்பதால் இரவில் கப்பல்களுக்கு சென்று படுத்துக் கொண்டார்கள். அப்படிப்பட்ட எழுச்சியை உருவாக்கியவராக திகழ்ந்தார். ஒரு மாவட்டமே திரண்டு அந்த போராட்டத்தில் கலந்து கொண்டது என்றளவிற்கு மக்கள் ஆதரவு பெற்றவராக, மக்கள் ஆதரவை திரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் வெற்றி கண்டவராக … அப்படி, வெற்றி அளித்த தலைவர் கைது செய்யபட்ட போது மீண்டும் ஒரு வார காலத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டம் மக்கள் செய்கிற அளவிற்கான தலைவராக இருந்த அந்த தலைவரைப் பற்றி அவருடைய பல்வேறு சிறப்புகளில், எப்போதும் மக்களுடைய வளர்ச்சிக்கு, மக்களுடைய மேம்பாட்டிற்காக வாழ்ந்த ஒரு மாமனிதரைப் பற்றி, இந்த நாளில் ஆசிரியர் வேலையை விட்டு ஓடியவர் பிறந்த நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடும் இந்த நாளில், வ.உ.சி போன்ற மாமனிதரை நினைவு கூறுவதற்கு வாய்ப்பளித்த தமிழக மக்கள் முன்னணித் தோழர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறி நிறைவு செய்கிறேன். (நிறைவு)
பெரியார் முழக்கம் 22102020 இதழ்