ஓம் ‘ரபேல்’ நமஹ!
பிரான்ஸ் துறைமுக நகரான போர்டோவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொண்டாராம். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் விஜயதசமி. முதல் ரபேல் போர் விமானத்தை ராஜ்நாத் சிங் எப்படி பெற்றுக் கொண்டார்?
விமான டயரின் கீழ் எலுமிச்சை வைத்து, விமானத்தின் மீது தேங்காய், பூ உள்ளிட்ட பூஜைக்குரிய பொருள்களை வைத்தாராம். இந்தி மொழியில் ‘ஓம்’ என்று விமானத்தில் எழுதி பூஜை செய்திருக்கிறார்.
“உள்ளே இருக்கிற 250 ‘ஸ்பேர்பார்ட்ஸ்’ல ஓடாத லாரி, இந்த எலுமிச்சம் பழத்திலேயடா, ஓடப் போவுது?” என்று நடிகர் விவேக் ஒரு படத்தில் கேட்பார். பிரான்ஸ் தேசத்தில் விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் இந்தக் காட்சியைப் பார்த்து திக்குமுக்காடியிருப்பார்கள். தேங்காய், பூ, எலுமிச்சை எல்லாம் ரபேல் போர் விமானத்தைவிட சக்தி வாய்ந்ததா? இது என்ன புதிய கதை என்று எள்ளி நகையாடியிருப்பார்கள்.
சரசுவதி பூஜையின்போது குழந்தைகள் பாட நூல்களை வைத்து பூஜை செய்யச் சொல்லுவார்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு கல்வி ஆர்வம் பெருகி, ‘சரசுவதி’ நாக்கில் தாண்டவமாடுவாள் என்பது, பக்தியாளர்கள் நம்பிக்கை. சரசுவதி பூஜை நடக்கும் நாட்டில் ‘சரசுவதி’ கிராமத்து மக்களிடம் போய் விடக்கூடாது என்பதற்காக ‘நீட்’டை கொண்டு வந்து விட்டனர். 3ஆம் வகுப்பு 5ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு வைத்து ‘சரசுவதி’ கடாட்சம் குழந்தைகளுக்கு கிடைத்து விடாமல் தடுக்கிறார்கள். உண்மை யிலேயே இந்துக் கடவுளான ‘சரசுவதி’யை அவமதிப்பவர்கள், இவர்கள்தான்!
அதேபோல தங்கள் தொழில் நன்றாக வளர்ந்து வருவாய் பெருக வேண்டும் என்ற நம்பிக்கையோடு நம்பிக்கையாளர்கள் தொழிற்சாலைகளுக்கும் தொழில் கருவிகளுக்கும் ஆயுத பூஜை போடுகிறார்கள். தொழில் துறை வளர்ந்து விடக் கூடாது என்று ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையில் இறங்கி ஆயுத பூஜை போட்டாலும் தொழில் வளர்ச்சியடையாது என்று செயல்படுவது பா.ஜ.க. ஆட்சி தான்.
ரபேல் போர் விமானத்துக்கு ஏன் ராஜ்நாத் ஆயுத பூஜை போடுகிறார்? இந்தியாவில் போர் நடவடிக்கைகள் ஏராளம் நடந்து போர் விமானங்களின் குண்டு வீச்சுகள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவா என்று ஒரு கருப்புச் சட்டைக்காரர் கேட்டார். கேள்வி நியாயமானதுதான். அவரது கேள்விக்கு நம்மிடம் பதில் ஏதுமில்லை.
பூஜை, சடங்குகள் நடத்தி நல்ல நேரம் பார்த்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய ‘சந்திராயன் -21’ ஏன் நிலவைச் சென்று அடையவில்லை என்றும் பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவியல் அடிப்படையிலான கேள்விகளைக் கேட்டால், ‘தேச விரோத சட்டம்’ பாய்ந்து குதறிவிடக் கூடும்!
வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. தஞ்சையை செங்கமலதாசன் என்பவன் ஆட்சி செய்த காலத்தில் அரசரை எதிர்த்து வெங்காஜி என்பவன் படை திரட்டி நாட்டைக் கைப்பற்ற வந்தான். போர் என்றால் நடுங்கும் செங்கமலதாசன், ‘பிராமணர்’களின் ஆலோசனையை கேட்டான். அவர்கள் ஒரு அதிரடித் திட்டத்தைத் தந்தார்கள். “அரசே நம் நாட்டின் எல்லைப் பகுதியில் கடவுள் திருமாலுக்கு விருப்பமான துளசி செடிகளை மலை போல குவித்து வைத்துவிட்டால் போரைத் தடுக்கலாம்” என்று கூறினார்கள். இஸ்லாமிய மன்னனின் படைத் தளபதி வெங்காஜி, வைதீக மதத்தைச் சார்ந்த வைணவன். அவன் இஸ்லாமிய அரசனின் படைத் தளபதியாக இருந்தாலும், துளசிச் செடிகளைத் தாண்டி உள்ளே வரமாட்டான், திரும்பி விடுவான் என்பதே பார்ப்பனர்கள் தந்த ஆலோசனை. அப்படியே துளசி செடிகள் மலைபோல எல்லைகளில் குவிக்கப்பட்டன. ஆனால் வெங்காஜி படையில் வந்த குதிரைகளுக்கு துளசி செடி தீனியானது; குதிரைகள் மேய்ந்து தள்ளின. வெங்காஜியின் படை போர் நடத்தாமல் வாளை உருவாமலே தஞ்சையைக் கைப்பற்றி விட்டது. இது வரலாறு.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ‘பாரத’ தேசத்துக்காக வாங்கிய ‘ரபேல் விமானம்’கூட அதற்குள் எலுமிச்சை உள்ளிட்ட பூஜை பொருள்களோடு ‘ஓம்’ என்ற சக்தியுள்ள நாமத்தையும் ஏவியதால் “தெய்வீக சக்தி” முன் போர் நடத்தும் தேவை இல்லாமலேயே வெற்றி அடைந்து விடும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பியிருப்பார் போலிருக்கிறது.
இனி இந்தியா மீது எந்த நாடாவது ஆக்கிரமிக்க நினைத்தால் அவ்வளவுதான்.
எலுமிச்சை, பூ-வுடன் ஓம் சக்தியும் சேர்த்து விரட்டி அடித்து விடலாம்.
ஆக, இந்து தேசத்தை உருவாக்க போர் வேண்டும்; போரில் வெற்றி பெற ரபேல் விமானமோ, நீர் மூழ்கிக் கப்பலோ மட்டும் போதாது. பூஜையும் சடங்கும் வேண்டும். தேவைப்பட்டால் ‘பூணூல்’ சக்தியையும் ‘காயத்திரி’ ஓதிசெலுத்தி விடலாம். பூணூல் சக்தி அணுகுண்டையும் வீழ்த்தி விடும்.
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 17102019 இதழ்