தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைக் குறி வைத்து தனிப் பயிற்சிகள் தொடக்கம் தமிழகத்தில் காலூன்ற ‘சங்கிகள்’ தீவிரம்

தமிழ்நாட்டை ‘காவி’ மண்ணாக்கிட பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தீவிரத் திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கி விட்டனர். கட்சி மேலிடமும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வலைவீச பெருமளவு பணத்தை வாரி இறைக்கத் தயாராகி விட்டது. இது குறித்தும் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஓர் தொகுப்பு:

தமிழகத்தில் வலிமை பெற ஆர்.எஸ்.எஸ். தயாராகிறது

சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி எனும் பகுதியில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரியில் வட தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 300 இளைஞர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது. அதேபோல் தென் தமிழகத்திலும் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட அமைப்புகளில் ஆர்வம் காட்டி செயல்படும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களைத் திரட்டி, இந்தப் பயிற்சிகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் தரமான உணவோடு 3 பேர் பயிற்சி அளிக்கிறார்கள். முதற்கட்டமாக ஆன்மீகம், யோகா, இந்து, இந்துத்துவம், தேசியம் என்று மென்மையாக மூளைச் சலவை நடக்கிறது. ‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய தேசத்தை இஸ்லாமியர்களிடமிருந்து மீட்டெடுக்க நமக்கு நாமே தலைவர்களாகி களமிறங்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் நாம் அடிமைகள் அல்ல; நமக்கு யாரும் தலைவர்களும் இல்லை” என்று வகுப்புகளில் வலியுறுத்தப்படுவதோடு, ‘ஜாதியாகப் பிளவுபடாமல் இந்துக்களாக ஒன்று சேருவோம்’ என்றும் வகுப்புகளில் பேசப்படுகிறது.

அதாவது, இஸ்லாமியர், கிறிஸ்துவர்களை வீழ்த்தி, பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவ ஜாதிகளை மறந்து ஒன்றுபட அழைக்கிறார்கள். ஜாதிப் பிளவு வேண்டாம் என்று பேசப்படுகிறதே தவிர, ஜாதியே வேண்டாம் என்று பேசப்படுவது இல்லை. ஆர்.எஸ்.எஸ். வட தமிழகத் தலைவர் ஒருவர், மற்றும் கொச்சின் வன்னியராஜா, குரு சுப்பிரமணியம் ஆகியோர் முகாமை முன்னின்று ஏற்பாடு செய்துள்ள தோடு, அவர்கள் முகாமுக்கு  அவ்வப்போது வந்து தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்களாம். இரவுநேரங்களில் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் மாணவர்களைத் தனித்தனியாக சந்தித்துப் பேசி, அவர்கள் தேவைகள், எதிர்பார்ப்புகளை அறிந்து பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்கிறார்கள். தேவையான அரசு உதவிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி தந்து வருகிறார்களாம்.

பார்ப்பனர்கள் தயாராகிறார்கள்

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள், ஆச்சாரிகள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி வருகிறார்கள். பார்ப்பன சங்கராச்சாரி, சாமியார்கள் ‘இந்து ஆச்சாரிய சபா’ என்ற அமைப்பை வடமாநிலங்களில் நடத்தி வருகிறார்கள். அதன் தமிழ்நாடு மாநில அமைப்பை ஜூன் 7ஆம் தேதி திருச்சியில் தொடங்கி இருக்கிறார்கள். சபாவின் தேசிய செயலாளராக இருக்கும் விஜயேந்திர புரி என்பவர் தனது தொடக்க உரையில் தமிழ்நாட்டில் இந்துக்களை ஒரே குடையில் அணி திரட்டுவதே முதன்மையான இலக்கு என்று கூறியுள்ளார். இந்து கலாச்சாரம் பாரம்பர்ய கல்வி, பசு பாதுகாப்பு, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வுஇயக்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பின்னர் தேசிய செயலாளர் விஜயேந்திர புரி மற்றும் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் சாரதா சாமிகள் என்பவரும் செய்தியாளர்களிடம் கூறினர். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் செயல் திட்டத்தில் இப்போது ‘இயற்கை விவசாயமும்’ இணைந்திருக் கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

பெரியார் முழக்கம் 13062019 இதழ்

You may also like...