மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்
தீர்மானம் எண் : 1
தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் !
தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வந்துவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டு பண்பாட்டில் மூழ்கச் செய்து விடும்.
இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக இருப்பதைத் தமிழக அரசு உணர வேண்டும் என்றும் மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
தீர்மானம் எண் : 2.
மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் !
தமிழ்நாட்டில் நடுவண் அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அகில இந்திய அடிப்படையில் நடத்தாமல் மாநில அளவிலான தேர்வாக நடத்த வேண்டும் என்பதோடு, வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கையை நடுவண் அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் குஜராத் மாநிலத்திலேயே இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டதைத் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 2017 ஆம் ஆண்டு நடந்த பணியாளர்த் தேர்வில் 116 வேலைவாய்ப்புகளில் 16 மட்டுமே அம்மாநிலத்தோருக்கு வேலை கிடைத்த நிலையில், குஜராத்தியர் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநில அரசும் தன்னை இணைத்துக் கொண்டது
அதுமட்டுமின்றி குஜராத்தில் 85 விழுக்காடு வேலை வாய்ப்புகளை குஜராத்தியருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் 1995 முதல் குஜராத்தில் நடைமுறையில் இருப்பதையும், அந்த கொள்கையின் அடிப்படையிலேயே குஜராத் அரசு வழக்காடியது என்பதையும் இம்மாநாடு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
தீர்மானம் எண் : 3
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் கிடைக்க வழிவகுக்கும் 26.11.2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் !
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்காக செயல்படவேண்டிய தமிழக அரசு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) விதிகளைக் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் கொண்டுவந்த திருத்தத்தின் காரணமாக, வெளி மாநிலத்தவர் தமிழக அரசுப் பணிவாய்ப்புகளைப் பறிப்பதற்கு தமிழக அரசால் கதவு திறந்து விடப்படுள்ளது.
இதன் காரணமாக கடந்த 2019, மே மாத இறுதியில் நடத்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்களில் 39ஐப் பிற மாநிலத்தவர்கள் பெற்றுவிட்டனர்.
அதுபோலவே கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் பதவிகளிலும் இதுவே நடந்தது. மின்னணு தொடர்பியல் துறைக்கான விரிவுரையாளர்களுக்கான 36 பதவிகளில் 31ஐயும், இயந்திரப் பொறியியல் துறைக்கான விரிவுரையாளர் பணிகள் 67இல் 46 பணிகளையும் வெளிமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வெளிமாநிலத்தவர்கள் கிடைக்க வழிவகுக்கும் 26-11-2016இல் திருத்தப்பட்ட விதிகளை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் : 4.
ஒற்றைப் பண்பாடாக பார்ப்பனியத்தால் திணிக்கப்படும் சமஸ்கிருத புரோகிதத்தைப் புறம் தள்ள வேண்டும் !
ஒரே நாடு – ஒரே வரி – ஒரே தேர்வு – ஒரே கல்வி – ஒரே குடும்ப அட்டை – ஒரே பண்பாடு என்பதன் தொடர்ச்சியாக ஒரே மொழி என்ற நோக்கத்தோடு நடுவண் ஆட்சி இந்தியை ஒற்றை அடையாளமாக திணிப்பதை இந்தி எதிர்ப்பில் களம் பல கண்ட தமிழ்நாடு ஒன்றுபட்டு எதிர்த்து வருகிறது.
அதுபோலவே இறை நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகள், அவர்கள் நடத்தும் வழிபாடுகளில் ஒற்றைப் பண்பாடாக பார்ப்பனியத்தால் திணிக்கப்படும் சமஸ்கிருத புரோகிதத்தைப் புறம் தள்ள வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களையும், சமுதாய புரட்சிக்கு உழைத்த தலைவர்களின் பெயர்களையும் சூட்டி தங்களின் சுயமரியாதை அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் : 5.
புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விளக்கி புதிய கல்வித் திட்ட நகல்களைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டம் !
ஆரியர்களின் வேத காலத்திலிருந்தே பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திர பஞ்சம மக்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்பட்டு வந்துள்ளன. உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை கல்வி உரிமை – அவர்களுக்குத் தடையின்றி கிடைக்கவும், உயர் கல்வியை நோக்கி முன்னேறிச் செல்வதற்கான இலகுவான சூழலை உருவாக்கித்தரும் நோக்கத்தோடு சமூகநீதி அடிப்படையிலான கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். அதை முழுமையாக சிதைத்து வெகு மக்களிடம் கல்வி சென்று அடைந்து விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் தடைகளை எழுப்பும் புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த நடுவண் அரசு துடிக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் நோக்க உரையிலேயே இது வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. “சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எல்லோருக்கும் கல்வி – சமமான கல்வி வழங்குவதிலேயேதான் நாம் முயற்சித்தோமே தவிர, அதை விட முக்கியமான ‘தரமான கல்வி’ பற்றி கவலைப்படவே இல்லை என்று அறிக்கையின் நோக்கவுரைக் கவலைப்படுகிறது.
(In the decades since independence we have been preoccupied largely with issues of access and equity and have unfortunately dropped the Baton with regard to quality of Education) என்று வெளிப்படையாகவே பார்ப்பனிய மனு சாஸ்திரத்தை பச்சையாக வெளிப்படுத்தி இருக்கிறது.
14 வயது உள்ள அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை உறுதி செய்யும் கல்வி உரிமைச் சட்டம் மனு சாஸ்திரத்திற்கு எதிராக வந்துவிட்ட நிலையில், அதன் நோக்கத்தைs சிதைக்க புதிய கல்விக் கொள்கை பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதன் வழியாக வடிகட்டுதல், உயர்கல்விக்கான வழிகளைத் தடுத்து நிறுத்துதல், வேதப் பெருமைகளை கல்வித்திட்டத்தில் இணைத்தல் என பல்வேறு பார்ப்பனிய நச்சுக் கருத்துக்களை செயல்படுத்த வலியுறுத்துகிறது. மீண்டும் வேதகாலத்திற்கு இழுத்துச்செல்லும் இந்த ஆபத்தான கல்விக் கொள்கையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு அடித்தளமிட்ட கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் நினைவு நாளான எதிர்வரும் அக்டோபர் இரண்டாம் நாள், புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விளக்கி புதிய கல்வித் திட்ட நகல்களைக் கிழித்தெறியும் ஆர்ப்பாட்டத்தை – இளைஞர்கள், மாணவர்களைத் திரட்டி நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
_____________________________________________
திராவிடர் விடுதலைக் கழகத்தின் மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !20.09.2019 – பள்ளிபாளையம்.