அம்பேத்கர் தந்த எச்சரிக்கை!

சமூக சமத்துவம் மறுக்கப்பட்டால்,

ஜனநாயகக் கட்டமைப்பையே

மக்கள் தகர்த்து விடுவார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்ட அவை 9.12.1946 அன்று முதன்முதலாகக் கூடியது. 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்டம் அரச மைப்புச் சட்ட அவையால் இறுதி செய்யப் பட்டது. 26.11.1949 அன்று நிறைவேற்றப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாள்கள் – அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட எடுத்துக் கொண்ட காலம் ஆகும். 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்ட அவையின் விவாதங்கள் முடிந்தபின், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இறுதியாக உரை நிகழ்த்தினார். அப்போது, எதிர்காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப் படுத்துவது குறித்த தன் கவலையையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தினார். 1994இல் மகாராட்டிரா மாநில அரசு ஆங்கிலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதன்மையான கர்த்தா டாக்டர் அம்பேத்கர் என்ற தலைப்பில், அம்பேத்கர் எழுத்துகளும் பேச்சுகளும் நூல் வரிசையில் 13ஆவது தொகுதியாக வெளியிடப்பட்ட நூலில் உள்ள அம்பேத்கர் உரையில் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டுக் கீழே தரப்பட்டுள்ளது.

நான் அரசமைப்புச்  சட்ட அவைக்கு வந்ததன் நோக்கம் பட்டியல் குல வகுப்பினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தவிர வேறொன்றுமில்லை. இதற்கு மேலும் பொறுப்புகளை ஏற்குமாறு பணிக்கப்படுவேன் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. அதனால், வரைவுக் குழுவின் உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டபோது மிகவும் வியப்படைந்தேன். வரைவுக் குழுவின் தலைவராக ஆக்கப்பட்டபோது மேலும் வியப்படைந்தேன்.

1950 சனவரி 26 அன்று இந்தியா ஒரு சனநாயக நாடாக இருக்கும். அதாவது மக்களால் மக்களுக்காக மக்களே நடத்துகின்ற அரசு இருக்கும். இக்கருத்து என் சிந்தனையில் சுழன்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் சனநாயக அரசமைப்புச் சட்டத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? இந்திய நாடு இதைப் பேணிப் பாதுகாக்குமா? அல்லது அதை மீண்டும் இழந்துவிடுமா?

வடிவமைப்பு என்ற நிலையில் மட்டு மல்லாமல், உண்மையான தன்மையில் சனநாயகத்தைப் பேண வேண்டுமானால் நாம் என்ன செய்யவேண்டும்? முதலாவதாக நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறே னென்றால், நம்முடைய சமுதாய, பொருளாதாரக் குறிக்கோள்களை அடை வதற்காக அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். குருதி சிந்தும் புரட்சிகரமான வழி முறையைக் கைவிட வேண்டும். மேலும் இதன் பொருள் என்ன வெனில், சட்ட மறுப்பு, ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம் ஆகியவற்றையும் கைவிட வேண்டும். சமூக, பொருளாதாரக் குறிக் கோள்களை அடைவதற்கு அரசமைப்புச் சட்ட வழி முறைகளால் முடியாத நிலையில் அரசமைப்புச் சட்ட நெறி முறைக்கு முரணான வழிமுறைகளை மேற்கொள்வதில் நியாயம் இருக்கிறது. அதேசமயம் சட்டப்படியான வழி முறைகள் உள்ளபோது, சட்டத்துக்கு எதிரான முறைகளை மேற்கொள்வது நெறிமுறையானது அல்ல. சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகள் அராஜகவாதத்திற்கு அடிகோலும். ஆகவே இவ்வழிமுறைகளை எவ்வளவு விரைவில் கைவிடுகின்றோமோ, அந்த அளவிற்கு நமக்குக்  நல்லது.

இரண்டாவது, ஜான் ஸ்டூவர்ட் மில் சனநாயகவாதிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை நாம் பின்பற்றுவதாகும். உங்களுடைய உரிமைகளை எந்தவொரு பெரிய மனிதனின் பாதங்களின் முன் வைக்காதீர்கள்; உங்களுடைய சமூக அமைப்புகளைச் சீர்குலைக்கக்கூடிய அதிகாரங்களை எந்தப் பெரிய மனிதனிடமும் அளிக்காதீர்கள் என்பதே ஜான் ஸ்டூவர்டின் எச்சரிக்கையாகும். வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்த உயர்ந்த மனிதர்களிடம் நன்றியுடன் இருப்பதில் தவறு இல்லை. ஆனால் நன்றி உணர்வை வெளிப்படுத்துவதற்கு வரம்புகள் உள்ளன. இது குறித்து அய்ரிஷ் நாட்டின் தேசாபிமானியான டேனியல் ஓ கன்னல் எந்தவொரு மனிதனும் தன் சுயமரியாதையை இழந்து நன்றி பாராட்ட மாட்டான்; எந்தவொரு பெண்ணும் நன்றி உணர்ச்சிக்காகத் தன் கற்பை இழக்கமாட்டாள்; எந்தவொரு நாடும் சுதந்தரத்தை இழந்து நன்றி பாராட்ட முன்வராது என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

இந்த எச்சரிக்கை வேறு எந்தவொரு நாட்டையும் விட இந்தியாவுக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. ஏனெனில் பக்தி அல்லது பக்தி மார்க்கம், அல்லது தலைவர் வழிபாடு என்பது அரசியலில் செல்வாக்குச் செலுத்துகிறது. உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இருப்பதைவிட ஒப்பிட முடியாத அளவில் இந்தியாவில் தலைவர் வழிபாடு அல்லது பக்தி அரசியலில் ஆதிக்கம் செய்கிறது. மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் விடுதலைக்கான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தலைவர் வழிபாடு என்பது உறுதியாக இழிவுக்கே

இட்டுச் செல்லும்; இறுதியில் சர்வாதிகாரமாக மாறும்.

மூன்றாவது செய்தி என்னவெனில், வெறும் அரசியல் சனநாயகத்துடன் மனநிறைவு அடைந்துவிடக்கூடாது. நம்முடைய அரசியல் சனநாயகத்தைச் சமூக சனநாயகமாக உயர்த்த வேண்டும். சமூக சனநாயகம் என்றால் என்ன? அது ஒரு வாழ்க்கை நெறி. அதில் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் அகியவை குறிக்கோளாக ஏற்கப்பட்டிருக்கும்.

சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் தனித்தனியான கோட்பாடுகள் எனக் கருதக்கூடாது. அவை ஒன்றோடொன்று ஒத்திசைந்தே இயங்கக்கூடியவை. ஒன்றி லிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்ப்பது சனநாயகத் தின் முதன்மையான நோக்கத்தையே சிதைப்ப தாகும். சமத்து வத்திலிருந்து சுதந்தரத்தைப் பிரிக்க முடியாது; அதேபோன்று சுதந்தரத்தி லிருந்து சமத்துவத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாதபோது, சுதந்தரம் என்பது சிறுகூட்டத்தால் பெரும் எண்ணிக்கையினர் மீது மேலாதிக்கம் செய்ய வழிகோலும். சுதந்தரம் இல்லாத சமத்துவம் தனிமனிதரின் உள்ளார்ந்த முன் முயற்சியை அழிக்கும். சகோதரத்துவம் இல்லாத சுதந்தரமும் சமத்துவமும் இயல்பான சமூக வளர்ச் சிக்கு வழிசமைக்கா. இந்நிலையை உருவாக்கிட அதிகாரம் கொண்ட கண்காணிப்பாளர் தேவைப்படுகிறார்.

இந்திய சமூகத்தில் இரண்டு கூறுகள் அடியோடு இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு நாம் இதை அணுகுவோம். ஒன்று சமத்துவம் இல்லை என்பதாகும். சமூகத்தளத்தில், இந்தியாவில் சமத்துவமற்ற படிநிலைக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ள சமுதாயத்தைக் கொண்டுள்ளோம். இதனால் சிலருக்கு உயர்வும் மற்றவர்களுக்கு இழிவும் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதாரத் தளத்தில், பெரும்பான்மையானவர்கள் கொடிய வறுமையில் வாட, மிகச் சிலரோ செல்வச் செழிப்பில் கொழிக்கின்றனர்.

1950 சனவரி 26 அன்று இத்தகைய முரண்பாடுகள் கொண்ட வாழ்வில் நாம் நுழைகிறோம். அரசியலில் சமத்து வம் பெற்றிருப்போம். சமுதாய, பொருளாதார வாழ்வில் நம்மிடையே சமத்துவம் இருக்காது. அரசியலில் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு; ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு என்கிற கொள்கையை ஏற்று இருப்போம். சமுதாய மற்றும் பொரு ளாதார வாழ்வில், நம்முடைய சமுதாய, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக ஒவ்வொரு மனிதனும் ஒரே மதிப்பு உடையவன் தான் என்கிற கொள்கையை ஏற்க மறுப்பவர் களாகவே இருப்போம். இத்தகைய முரண்பாடுகள் கொண்ட வாழ்நிலையை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கவிடப் போகிறோம்? இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சமுதாயத் சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத் தையும் மறுக்கப் போகிறோம்?

இன்னும் நீண்டகாலத்துக்கு இவற்றை மறுப்பது என்பது நம்முடைய அரசியல் சனநாயகத்திற்கே ஆபத்தானதாக முடியும். எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரை வில் இந்த முரண்பாடுகளைக் களைய வேண்டும். இல்லா விட்டால் இந்தச் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அரசமைப்புச் சட்ட அவை அரும்பாடுபட்டு உருவாக்கி யுள்ள அரசியல் சனநாயகக் கட்டமைப்பையே தகர்த்தெறி வார்கள். (னுச. க்ஷயயௌயாநb ஹஅநனெமயச றுசவைiபேள யனே ளுயீநநஉhநள, ஏடிட.13. னுச. ஹஅநெனமயச கூhந ஞசinஉiயீயட ஹசஉhவைநஉவ டிக கூhந ஊடிளேவவைரவiடிn டிக ஐனேயை,1208, 1214, 1215, 1216.

தமிழாக்கம் : க.முகிலன்

நிமிர்வோம் ஏப்ரல் 2018 இதழ்

You may also like...