பெரியார் எதிர்த்த ‘ஆண்மை’யும் ‘கேட்டர் பில்லர்’ நாயகியும்
“உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி.” – பெரியார்
கேட்டர் பில்லர் ’ என்னும் ஜப்பானியத் திரைப்படம் பார்த்தேன். கோஜி வாகாமத்ஸு இயக்கி 2010-ல் வெளியான படம் அது. சீன-ஜப்பான் போரில் பங்கேற்ற ஜப்பானிய ராணுவ வீரன் ‘குரோகாவா’வை மையமாகக் கொண்டு படம் சுழல்கிறது. முதல் காட்சியில் சீனக் கிராமத்துக்குள் புகுந்த ஜப்பானிய ராணுவம் அந்தக் கிராமத்தை அழித்துத் துவம்சம் செய்கிறது. தப்பியோடும் சீன மக்களைக் கடமை உணர்வுடன் குரோகாவா சுட்டுக் கொல்கிறான். அலறித் துடிக்கத் துடிக்கச் சீனப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்கிறான். சொத்துக்களைச் சூறையாடுகிறான். அடுத்த காட்சியில் போர் முடிந்து, குரோகாவா ‘பேராண்மை மிக்க போர் நாயகன்’ என்னும் தேசிய விருதைப் பெறுகிறான்.
மூன்று தேசிய மெடல்கள் நெஞ்சில் அசைந்தாடச் சொந்த கிராமத்துக்குத் திரும்புகிறான். ஆனால், போரில் இரு கால்கள், இரு கைகளை இழந்து கேட்கும், பேசும் ஆற்றலையும் இழந்து கொண்டுவரப்படுகிறான். ஊரே எல்லையில் நின்று அவனை வரவேற்கிறது. மனைவி அவனது கோலத்தைப் பார்த்துக் கதறினாலும், அவனைப் பாதுகாக்கும் கடமையை ஏற்று அவனை அழைத்துச் செல்கிறாள். தொடக்கத்தில் பரிவுடன் அவனைக் கவனிக்கிறாள். ஆனாலும், அவளுக்குப் போருக்கு முந்தைய பழைய வாழ்க்கை நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. அவனது முரட்டுத்தனமான பாலியல் ஆவேசத்தில் மூச்சுத் திணறிய இரவுகள் அவள் நினைவில் புரள்கின்றன.
அவளது உணர்வுகளைச் சற்றும் மதியாத அவனது அலட்சியம் அவள் நெஞ்சில் முள்ளாய் நிற்கிறது. இப்போது அவனுக்குக் கையும் இல்லை காலும் இல்லை. ஆனால், தின்ன ஒரு வாய் இருக்கிறது. பாலுறவு கொள்ளும் இச்சை மிச்சம் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு தினசரி அவளை இம்சிக்கிறான். அவளிடம் அதைக் கோருவது அவனது ‘உரிமை’ எனக் கருதுகிறான். அவன் அதே ஆணாகவேதான் இப்போதும் இருக்கிறான். அவனுக்குச் சமைத்துப்போடவும் அவனது பாலியல் தேவைக்குத் தன் உடலைத் தரவும் மனைவி என்ற ‘கடமை’ அவளை நிர்ப்பந்திக்கிறது. அவன் முன்னர் செய்த கொடுமைகளுக்குப் பழிதீர்க்கும் உணர்வு அவளுக்கு மேலோங்குகிறது. கருணைக்கும் பழிதீர்க்கும் உணர்வுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் அவளது உளவியல் தான் கதையின் மையம்.
இந்தப் படத்தைப் பார்த்தபோது முதலில் எனக்குக் குற்றவுணர்வு ஏற்பட்டது. ஆண்மை என நாம் நம்பும் எல்லாவற்றையும் இந்தப் படம் கலைத்துப்போட்டது. ஆண்மை, பெண்மை என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள். சமூகமும் அதில் நிலவும் பண்பாடும் கட்டமைத்த கற்பிதங்கள். பெண்மை என்ற வரையறைக்குள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நளினம், அழகு, சேவை மனப்பான்மை, தன்னல மறுப்பு, தாய்மை எனப் பல குணங்களை இணைக்கிறார்கள். பல நேரம் இந்த இணைப்புகளே முன்னின்று இதுதான் பெண்மை என்று நம்பவைக்கின்றன. அதேபோல ஆண்மை என்ற கற்பிதத்தைக் கட்டமைக்கும் பல இணைப்புகள் உண்டு. வீரம், ஆளுமை (பெண்ணை ஆளுதல் முக்கியம்), அதிகாரம் செலுத்துதல், சாதி-மதம் காத்தல், தேசியப் பெருமிதம் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. பெண்ணுக்கு ஒரு குழந்தையைக் ‘கொடுப்பது’ ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றென உலகமே நம்புகிறது. அதற்கு வாய்ப்பில்லாத மனிதனை ஆண்மையற்றவன் என விளிப்பது வழக்கமாக இருக்கிறது.
நிலவுடைமை கோலோச்சிய நாட்களில் ஆண்டைகளால் பாலியல் பண்டங்களாக நடத்தப்பட்ட பண்ணையடிமைகளின் வீட்டுப் பெண்கள் பற்றிய கண்ணீர்க் கதைகள் ஏராளம். ஆண்மை அங்கே சாதியுடன் கைகோக்கிறது. இதன் உச்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் டி.சங்கரலிங்கபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என்று அந்த ஊர் உயர்சாதியினர் ஊர்க்கட்டுப்பாடு விதித்திருந்த செய்தி கேட்டுத் தமிழகமே அதிர்ந்தது. உயர்சாதி வீடுகளில் வளரும் பெண் நாய்களுடன் ‘கீழ்ச்சாதி’ வீட்டு ஆண் நாய்கள் உறவு கொண்டால் சாதித் ‘தூய்மை’ கெட்டுப் போகுமே!
மதவாத ஆண்மை
இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துப் பெண்களை இஸ்லாமியர்களும் இஸ்லாமியப் பெண்களை இந்துக்களும் பாலியல் வல்லுறவு செய்து தங்கள் மத ஆதிக்கத்தைப் பெண்ணின் உடல் மீது கொடியேற்றினார்கள். பெண்களின் பிறப் புறுப்பில் பிறைச் சந்திரனையும் திரிசூலத்தையும் சூடு போட்டு வரைந்தார்கள். பெண்களின் மார்பகங்களை அறுத்தெறிந்தார்கள். அங்கே ஆண்மை மதவெறியாக வடிவெடுத்தது.
போர் என்று வந்துவிட்டால் எதிரி நாட்டுப் பெண்களை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்வது தேசியக் கடமை ஆகிவிடுவதை வரலாறு பதிவுசெய்கிறது. செர்பியாவிலும் குரோஷியாவிலும் இந்தியா பாகிஸ்தானிலும் தேசப் பெருமை காக்க அல்லது எதிரி தேசத்தை இழிவுபடுத்த ஆண்மை திமிறி எழுந்ததையும் கண்டோம். இலங்கை ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான தமிழ்ப் பெண்களின் கதறல் ஒலி இன்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கவில்லையா? இங்கெல்லாம் ஆண்மை, தேசியத்தை முகமூடியாக அணிந்துவந்தது.
ஆனந்த் பட்வர்தனின் புகழ்பெற்ற ஆவணப்படமான ‘ஃபாதர் சன் அண்ட் ஹோலி வார்’ (தந்தை மகன் மற்றும் புனிதப்போர்) பதிவுசெய்த காட்சிகளில் மதப் பகைமை வளர்ப்போடு ஆண்மை தூண்டப்படுவதும் இணைந்து வளர்வது விளக்கப்பட்டிக்கும். இந்துப் பெண்கள் 16 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சாமியார்கள் வீர உரை ஆற்றும் காட்சிகள் அந்தப் படத்தில் பலமுறை வந்துகொண்டே இருக்கும்.
அழிக்கப்பட வேண்டிய ஆண்மை தத்துவம்
“சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் ‘ஆண்மை’க்கே உரியதாக்கப்பட்டுவிட்டது ஏன்? ‘ஆண்மை’க்குத்தான் அவை உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று தொடங்கும் தந்தை பெரியார், “ஆண்மை உலகில் உள்ளவரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்மை விடுதலையில்லை என்பது உறுதி” என்று தொடர்கிறார். பெரியாரின் இந்த வாசகத்தோடு ‘கேட்டர்பில்லர்’ படத்தின் நாயகியின் மனதில் எழும் பழிதீர்க்கும் உணர்வை இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. குற்றவுணர்வு தாளாமல் அந்தப் படத்தின் நாயகனான ராணுவவீரன் தற்கொலை செய்துகொள்வதோடு படம் முடிவடையும். ஆனால், பெண் விடுதலையை ஆண்மை அழிப்பு என்ற ஒன்றோடு மட்டும் நிறுத்திப் பேசுவது சரியா, அது போதுமானதா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
தாய்மை எனப்படும் உணர்வு பெண்ணுக்கே உரியதா? தாய்மை உணர்வு கொண்ட ஆண்கள் இந்த உலகத்தில் இருந்ததில்லையா? இப்போதும் இருக்க வில்லையா? தாயுருவில் வந்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துத் தாயுமானவன் எனச் சிவபெருமான் பெயர் பெறவில்லையா?
-இது ஒரு புறம்.
பெண்மை முழுமை பெறுவது தாய்மை யில் தான். பெண் பிறப்பே பிள்ளை பெற்றுப் போடத்தான். கல்யாணம் என்பதே ஆண் – பெண் இணைந்து மனிதகுல மறுஉற்பத்தி செய் யத்தான். இதுதான் இயற்கை.-இது ஒரு புறம்.
‘கல்யாணம் ஆதியிலிருந்து சந்ததியை விருத்தி செய்ய ஏற்பட்ட ஒரு புராதன நடத்தையாகும்’ என்று தொடங்கும் பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர், ‘வெறும் சம்போகத்துக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம் வாழ்க்கையின் கால வித்தியாசத்தால்தான் ஏற்பட்டுள்ளது. உயிர்கள் உயர உயர அவ்வுயிர்களில் ஆணும் பெண்ணும் சம்போகம் முடிந்த பிறகும், சில காலம் கூடி வாழ நேரிட்டது. அது எதற்கெனில், சம்போகத்தின் முக்கிய பயனாகிய சிசுக்களைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. ஏனெனில், உயர்தர உயிர்களுக்கு உண்டாகும் சிசுக்கள், பிறந்தவுடன் சீவிக்க எழாமல் சில காலம் அவைகளை ஈன்ற ஆண்,பெண் சவரட்சணையில் இருந்து தீர வேண்டி வந்தது. இத்யாதி காரணங்களால் உயர்தர உயிர்களில் ஆணும் பெண்ணும் கூடிய உடன் பிரிந்து போகாமல், சிசுக்கள் வயது வரும்வரை கூடிவாழ வேண்டிவந்தது’ என்று திருமணத்தின் ஆதி வேர்களை அறிவியல் பார்வையுடன் விளக்கிச் செல்கிறார். (சிங்கார வேலர் சிந்தனைக் களஞ்சியம்-தொகுதி-2)
‘சிசுக்கள் வயது வரும்வரை’ என்கிற கால அளவு ‘கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, பறந்து போயிடுத்து’ என்பதாகப் பிற உயிரினங்களைப் போல சட்டென மனித குலத்தில் நடக்கவில்லை. தத்தி நடந்து, பின் ஓடும் பருவம் வந்தாலும் சமூகம் என்கிற அமைப்பில், பொருளாதாரம் உள்ளிட்ட தளங்களில் குழந்தைகள் காலூன்றி நிற்கிற வயது வரும்வரை தாய், தகப்பனின் காப்பாற்றுதல் (சவரட்சணை) தேவை என்றாகிக் கல்யாணம் குடும்பம் என்னும் நிறுவனமாக பின்னர் நிலைபெற்றுவிட்டது.
அதில் குற்றமில்லை. ஆனால், இந்தக் காப்பாற்றும் கடமைதான் தாய்மை என்பதாக விளக்கம் பெற்று, அது பெண்ணுக்கே உரிய ஒன்றாக மாறி, இன்று பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றாக மாறிவிட்டது. அதனால் தான், பெண்கள் விடுதலை பெற வேண்டு மானால் குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள், கருப்பையை அறுத்தெறியுங்கள் என்று தந்தை பெரியார் ஆவேசமாக அறிவுரை வழங்கினார்.
அசலான அடிமை சாசனங்கள்
இன்று மேலை நாடுகளில் பெண்ணிய வாதிகள் தாய்மை என்பதை உன்னதமான மானுட உணர்வு என்று சொல்வதை மறுத்து, அது ‘ஆண்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனம்’ என்கிறார்கள். ‘அந்த நிறுவனத்தில் சிக்குண்டதால் நாங்கள் சுயஅடையாளத்தை இழந்தோம். தாய்மையி லிருந்து விடுதலை பெற்றால் மட்டுமே, நாங்கள் மனுஷியாக அடையாளம் பெறுவோம். இந்தத் தந்தைமைச் சமூகத்தில் பெண் என்றாலே கருப்பைதான். ஆணின் குழந்தையைச் சுமக்கும் ஓர் உடல்தான்’ என்பது அவர்களின் விளக்கம்.
நம் ஊர்களில் சின்னஞ்சிறு பெண் குழந்தையைக்கூட “தாயீ..” என்றழைக்கும் பழக்கம் இருப்பதை இந்தக் கோணத்தில் பார்த்தால் அவமான உணர்ச்சி மேலிடுகிறது.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் பெண்ணிய இயக்க முன்னோடியுமான சிமோன் தி பூவா தன்னுடைய ‘தி செகண்ட் செக்ஸ்’ நூலில் “பெண்ணின் துரதிருஷ்டமே அவளுடைய உடல் மனித குல மறுஉற்பத்திக் கேற்றபடி வடிவமைக்கப்பட்டிருப்பதுதான்” என்று குறிப்பிட்டார். ஆகவே, ஒரு பெண் திருமணம், குழந்தைப்பேறு என்னும் சதிவலை களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க வேண்டும். அப்படியே பெற்றுக்கொள்ள வேண்டுமானால் எப்படிப் பெறுவது, எப்படி வளர்ப்பது, எது எதெல்லாம் யாருடைய வேலை என்பனவற்றையெல்லாம் பற்றிப் பேசிக் கறாரான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகே பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இன்றைய நிலையில் குழந்தைப் பேறும் குழந்தை வளர்ப்பும் அசலான அடிமை சாசனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிரண்டு காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ரயிலுக்குக் காத்திருந்தபோது ஒரு இளம் தாய் (உழைப்பாளிப் பெண் போன்ற தோற்றம்) அழும் தன் குழந்தையைச் சமாதானம் செய்யப் போராடிக் கொண்டிருந்தாள். அது நெடுநே ரமாகத் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள். அழுகை நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் “சனியனே…” என்று கத்தி குழந்தையைத் தன்னிடமிருந்து பிய்த்து அப்படியே நட்டுக்கக் கீழே போட்டுவிட்டாள். எதிர்பாராமல் தரையில் விழுந்த அதிர்ச்சியில் குழந்தை ஒரு நிமிடம் திகைத்து, மீண்டும் முன்னைவிடப் பெருங்குரல் எடுத்துக் கத்த ஆரம்பித்துவிட்டது. தூரத்தில் பீடி குடித்துக்கொண்டிருந்த கணவன் பதறிப்போய் ஓடிவந்து குழந்தையைத் தூக்கி இடக்கையில் பிடித்துக்கொண்டு வலக்கையால் அப்பெண்ணைச் சப்புச் சப்பென்று நாலு அரை விட்டான். அவள் அழுதுகொண்டே குழந்தையை வாங்கி அணைத்துக்கொண்டாள். அழுகை இப்போது நின்றுபோயிருந்தது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு ஒத்தாசையாக இருக்கவென்று சாப்பாட்டுக்கு வழியில்லாத வயதான மூதாட்டிகளைக் கூட்டி வந்து விடுவார்கள். அநேகமாக அம் மூதாட்டிகள் தவறாமல் சொல்லும் ஒரு சொல வடை உண்டு. ‘பிள்ளை தூக்கிப் பிழைக்கிறதை விடப் பிச்சை எடுத்துப் பிழைச்சிடலாம்’.
ஓர் இளம் தம்பதி தங்கள் 2 வயதுக் குழந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்வது, சிறுநீர் கழிக்கத் தூக்கிச் செல்வது போன்ற அனைத்தையும் கணவன் செய்தான். ஆனால், குழந்தைக்குச் சோறு ஊட்டுவது, பால் ஆற்றிப் பக்குவம் பார்த்துக் கொடுப்பதை எல்லாம் அந்தப் பெண்ணே செய்தாள். ‘நீங்க சோறு ஊட்ட மாட்டிங்களா?’ என்று கேட்டேன். ‘அதுக்கு ரொம்பப் பொறுமை வேண்டியிருக்கு தோழர்… என்னாலே பத்து நிமிசத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியலே. கோபம் வந்துடுது. ஒரு உருண்டை சோத்தை ஊட்டுவதற்கு ஒருமணி நேரம் பின்னாடியே அலைய வேண்டியிருக்கு’ என்றார்.
தாய்மையைப் பொதுவாக்குவோம்
மேலே சொன்ன காட்சிகளையும் தாய்மையை வெறுக்கும் பெண்ணியவாதிகளின் கோபத்தையும் இணைத்துப் பார்த்தாலே புரியும். கூடுதல் விளக்கம் எதுவும் தேவையில்லை.
குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்றுப்போடுவது, தாய்ப்பால் ஊட்டுவது ஆகிய இந்த இரண்டு வேலைகளைத் தவிர, குழந்தை வளர்ப்பின் மற்ற அத்தனை வேலைகளையும் கணவன் தன் வேலையாக மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். சமையல், வீட்டு வேலைகளில் சரிபாதியை ஆண் ஏற்க வேண்டும். இவையெல்லாம் கற்றுக்கொள்ள முடியாத தொழில்நுட்பங்கள் ஒன்றும் இல்லையே. அப்போதுதான் கல்யாணம் என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
“தாய்மை நிலை என்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்.”
கட்டுரையாளர் – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர் சங்கத் தலைவர் – ‘தமிழ் இந்து’
நிமிர்வோம் டிசம்பர் 2017 இதழ்