காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா?

370ஆவது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி வந்தது மோடி ஆட்சி. பார்ப்பன தேசிய ஊடகங்களும் மக்களின் எதிர்ப்பை மூடி மறைத்து வந்தன. பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், காஷ்மீரில் மக்களின் போராட்டத்தை ஒளி பரப்பின. அலைபேசி, இணைய தொடர்புகள் முடக்கப்பட்டன. பிறகு இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறி தொடர்புகள் தரப்பட்ட நிலையில், மீண்டும் ஒரே நாளில் மீண்டும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன.

இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இராணுவம், துணை இராணுவப் பிரிவுகளைச் சார்ந்த 9.5 இலட்சம் படையினர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளதாக ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏட்டின் ஸ்ரீநகர் செய்தியாளர் எழுதுகிறார். அங்குலம் அங்குலமாக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றும் கடைகள் மூடப்பட்டு விட்டன என்றும் அந்த செய்தியாளர் கூறுகிறார். ஏராளமான மருந்து மாத்திரைகளோடு 100 மருத்துவர்கள் இராணுவத்துக்கு மருத்துவ உதவி வழங்க விமானம் வழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தி கூறுகிறது.

370 ஆவது பிரிவு நீக்கம் செய்த பிறகு 30,000 கூடுதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ‘போர்க் காலம்’ போன்ற சூழல் நிலவுகிறது என்றும் ‘டெக்கான் கிரானிக்கல்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளத்தாக்கு முழுதும் கல்லெறி சம்பவங்கள் நிகழ்வதாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ‘இந்து’ நாளேடுகள் தவிர்க்கவியலாத நிலையில் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சர்வதேச பிரச்சினையாகிறது காஷ்மீர்!

ஜம்மு, காஷ்மீர் மாநில சிறப்புரிமையை தன்னிச்சையாக நீக்கம் செய்த நடுவண் ஆட்சி, இப்போது சர்வதேசப் பிரச்சினையாக அதை மாற்றிவிட்டது. இது குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை நடுவண் ஆட்சியும் பார்ப்பன தேசிய ஊடகங்களும் திட்டமிட்டு பரப்பி வருகின்றன.

இப் பிரச்சினையை அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு சீனா வழியாக பாகிஸ்தான் கொண்டு சென்றது. இதில்   பாகிஸ்தான் முயற்சி தோல்வி அடைந்து விட்டதாகவும், இந்தியா இராஜ தந்திரத்தோடு, பாகிஸ்தான் சதியை முறியடித்து விட்டது என்றும், நடுவண் அரசும் பார்ப்பன ஊடகங்களும் கருத்துகளை உருவாக்கி வருகின்றன. இது குறித்து ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளேடு (ஆக.18) ஒரு தலையங்கம் தீட்டி யுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய கருத்துகள்:

பாகிஸ்தான் திட்டத்தை இந்தியா தோற் கடித்துவிட்டதா இல்லையா என்பதைவிட மற்றொரு முக்கிய அம்சத்தைப் பார்க்க வேண்டும். காஷ்மீர் பிரச்சினையை 50 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது முக்கிய மானது. 1972ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் உருவான பிறகு காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாகாமல் இந்தியா கடும் முயற்சிகளை மேற்கொண்டு தடுத்து வந்தது. இப்போது அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விவாதத்துக்கு வந்து விட்டது. இது முதல் பின்னடைவு.

இரண்டாவதாக சிம்லா ஒப்பந்தப்படி காஷ்மீர் தொடர்பான அனைத்துப் பிரச் சினைகளையும் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இராணுவ அழுத்தங் களைப் பயன்படுத்தக் கூடாது என்று 1999இல் இரு நாடுகளும் லாகூரில் பிரகடனமாக அறிவித்தன. இராணுவ நடவடிக்கைகள் கூடாது என்ற பிரகடனம், கடந்த பல ஆண்டுகளில் தோல்வி அடைந்து விட்டது. அவ்வப்போது இராணுவ மோதல்கள் நடந்தே வருகின்றன. ‘இரு நாடுகள் மட்டுமே தங்களுக்குள் பேசித் தீர்க்க வேண்டும்’ என்ற மற்றொரு பிரகடனம் இப்போது எந்த நிலைக்குப் போயிருக்கிறது? அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில் விவாதித்து, இரு நாடுகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தலையிட்டு அறிவுறுத்தும் நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டது. இது இரண்டாவது பின்னடைவு.

ஆகஸ்டு 5ஆம் தேதி, 370ஆவது பிரிவை நீக்கம் செய்த, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றார். அய்.நா. தலையிட முடியாது என்பதுதான் இதன் அர்த்தம். பிரச்சினையை இரகசியமாக விவாதித்த அய்.நா. பாதுகாப்புக் கவுன்சில், தனது கருத்தை பத்திரிகை செய்தியாக வெளி யிடவில்லை. பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற்ற 5 நாடுகளிடையே இதில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதே இதற்குக் காரணம். இது மூன்றாவது பின்னடைவு.

கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க அதிபர் டிரம்புடன், தொலைபேசியில் பேசினார். அது குறித்து அமெரிக்க அரசுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘பாகிஸ்தானும் இந்தியாவும் காஷ்மீரில் பதட்டத்தைக் குறைக்க’ பேச்சு வார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டார்” என்று கூறப் பட்டுள்ளது. ஆக, ‘காஷ்மீரில் பதட்ட நிலை’ உருவாகிவிட்டது என்ற உண்மையை டிரம்ப் அறிக்கை பதிவு செய்திருக்கிறது.

“காஷ்மீரில் உருவாகியுள்ள பதட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று 370ஆவது பிரிவு நீக்கத்துக்கு முன் எந்த நாடாவது கூறியிருக்கு மானால் இந்தியா ஆவேசத்துடன் ‘அது எங்களுக்கு தெரியும்’ என்று ஆவேசமாக சிலிர்த்து எழுந்திருக்கும். ஆனால், அமெரிக்கா கூறும்போது இப்போது  இந்தியா அமைதி காக்கிறது. (அமைதியாகத்தான் வேண்டும். பிரச்சினை சர்வதேச மயமாகி விட்டது) ஆப்கானிஸ்தான் அரசுடன் தாலிபான் தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் செய்துள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றி முடிக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி தேவைப் படுகிறது. இந்தப் பின்னணியில் பாகிஸ்தான் கருத்தை காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட முடியாது. அது மட்டுமின்றி, இப்போது 370ஆவது பிரிவு நீக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணங்களை முக்கிய நாடுகளுடன் நடுவண் அரசே விளக்கி வருவதன் வழியாக, இப்பிரச் சினையை சர்வதேசப் பிரச்சினையாக்குவதற்கு நடுவண் அரசே உதவி வருகிறது” என்று எழுதியுள்ளது ‘டெக்கான் கிரானிக்கல்’.   ட

பெரியார் முழக்கம் 22082019 இதழ்

You may also like...