கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர்.

  • அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி வாசல் மீது தாக்குதல் அதிகாலை நடந்தும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை இல்லை, இருசக்கர வாகனத்தில் சென்று கடைகளை அடைக்கச் சொன்ன இந்து முன்னணியினரை விரட்டவோ, கைது செய்யவோ இல்லை.
  • சசிக்குமார் உடல் வைக்கப்பட்ட அரசுமருத்துவமனை பகுதியில் அனைத்து பகுதிகள் மற்றும் வெளி மாவட்ட ஆட்கள் வருவதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 3000 பேர் திரளஅனுமதித்தது, அரசு மருத்துவமனையிலிருந்து இஸ்லாமிய குடியிருப்புகளான கோட்டை மேடுபகுதிக்கு தாக்குதல் நடத்த ஊர்வலமாகச் செல்வோம் என புறப்பட்டபோது தடுக்காமல் வின்சென்ட் ரோடு வரை சென்று கல்வீச்சு தாக்குதல் கடுமையாக நடந்த பின்னர் இந்து முன்னணியினரை தடுத்தனர். இச்சம்பவத்தை யொட்டி கோட்டைமேடு பகுதியில் பெரிய அளவு கலவரம் நடைபெறக் கூடிய சூழல் ஏற்பட்டது.
  • அரசு மருத்துவமனையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள மதுக்கரையிலிருந்து 150 இருசக்கர வாகனங்களில் இந்து முன்னணியினர் கொடிகளுடன் வந்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஆத்துபாலம் டோல்கேட் அருகில் நின்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு கோசம் போட்டனர். போலீஸ் ஆத்துப்பாலம் வரை இந்து முன்னணியினரை தடுக்காமல் காவல்துறை அனுமதித்தது.
  • மாநகர காவல் உளவுத்துறை பத்திரிகையாளர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் களிடம் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் அவர்கள் M-கள் என்ற முறையில் பிரச்சாரம் செய்ததாகவும் வாட்ஸ் ஆப்பில் M என செய்தி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. (‘எம்’ என்று முஸ்லிம்களை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்கள்)
  • இறுதி ஊர்வலம் தடை என்று சொல்லி விட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக 10 கி.மீ தூரம் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தனர்.
  • அலைபேசிக் கடை ஒன்றில் புகுந்து கலவரக்காரர்கள் அலைபேசிகளை அள்ளிச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பெரியார் முழக்கம் 29092016 இதழ்

You may also like...