வேட்டி இந்து பண்பாடா? – செ.கார்கி
சிலர் இன்று வேட்டி என்பது இந்து பண்பாடு அது தமிழரின் பண்பாடு கிடையாது என சொல்லும் போக்கு உள்ளது. அது தவறான வாதமாகும்.
வரலாற்று வளர்ச்சி என்பது சுழல் ஏணி வரிசையில் முன்னோக்கி போவது. இருக்கும் ஒரு வளர்ச்சி கட்டத்தில் இருந்து இன்னும் கூடுதலான ஒரு வளர்ச்சிக் கட்டத்திற்கு செல்வதுதான் வளர்ச்சி. அப்படித்தான் சமூகம் மாறிவந்துள்ளது. எந்தச் சமூகமும் இருக்கும் நிலையில் இருந்து திடீரென சுழலேணியில் கீழ்மட்டத்தில் வந்து விழுந்துவிடாது. இந்த அடிப்படியில் இருந்துதான் நாம் வரலாற்றையும் மாறிவரும் மனிதர்களின் பண்பாடுகளையும் மதிப்பிட வேண்டும். உலகின் எல்லா சமூகங்களும் அநாகரிக நிலையில் இருந்துதான் நாகரிக நிலையை எட்டி இருக்கின்றன. எந்தச் சமூகம் அர்த்தமற்ற பழமையை கொண்டாடு கின்றதோ அந்தச் சமூகம் அறிவியல், பண்பாடு, என அனைத்திலும் தேங்கிவிடும். ஆனால் அப்படி தேங்கிப்போன சமூகங்களை இன்று உலகில் காண்பது அரிது. முதலாளித்துவத்தின் அபாரமான வளர்ச்சியானது தனது கரங்களை இந்தப் புவிப்பரப்பு எங்கும் பரப்பி சமூகத்தின் மோன நிலையை உடைத்தெறிந்து இருக்கின்றது.
அப்படித்தான் தமிழ்ச்சமூகமும் பல்வேறு மாற்றங்களை அடைந்து வந்துள்ளது. தமிழனின் ஆதி மொழி, ஆடை, உணவு, நாகரிகம் என அனைத்துமே பெரும் மாற்றத்தை இன்று அடைந்திருக்கின்றது. தமிழன் பண்பாட்டு தளத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முகம் கொடுத்தே வந்துள்ளான். சனாதன சிந்தனைகளான சாதி, மதம் போன்றவை என்னதான் அவனைக் கட்டுப் படுத்தினாலும் பிழைக்க வேண்டும் என்றால் உலகம் மாறுவதற்கு ஏற்ப மாறித்தான் ஆகவேண்டும் என்ற வாழ்வியல் நெருக்கடி அவனை மாற்றிக்கொண்டே தான் வந்திருக் கின்றது. கடல் கடந்து போகக்கூடாது என்று தர்ம சாஸ்திரம் செய்தவர்களே பணத்திற் காகவும் பதவிக்காகவும் தர்மசாஸ்திரத்திரத்தை மீறி கடல்கடந்து போனார்கள். அதனால் சனாதனம் கூட மாற்றத்தை சந்தித்தே வந்துள்ளதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இன்று தமிழர்கள் பேண்ட், ஜீன்ஸ், பெர்முடா, கைலி, லெகின்ஸ், டிசர்ட், டாப்ஸ் என பல வகையான ஆடைகளை பயன்படுத்து கின்றார்கள். ஆனால் பழந்தமிழ் மக்கள் தம்முடைய சந்ததிகள் இதுபோன்ற நாகரிக ஆடைகளை அணிவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். பண்டையத் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் பூவையும், தழையையும் கோத்து அதை ஆடையாக அணிவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். ”கொண்டைக் கூழைக் தண்தழைக் கடைசியர்”(புறம்-61), “அளிய தாமே சிறுவெள்ளாம்பல்!, இளையம் ஆகத் தழையாயினவே” (புறம்-248),”அணித்தழை நுடங்க ஓடி”(புறம்340), “ஆம்பூந் தொடலை அணித்தழை அல்குல்” (புறம்-341) போன்ற வரிகள் மூலம் இதை தெரிந்துகொள்ள முடிகின்றது.
மேலும் கம்பளி, பஞ்சு, பட்டு, ஒருவகை மலையெலியின் மயிர் போன்றவற்றாலும் நெய்யப்பட்ட ஆடைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. “உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;(புறம்-189) என்ற பாடல் அரசனுக்கும், வேடனுக்கும் உண்ணப்படும் பொருள் ஒரு நாழித் தானியமே. உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே என இடித்துரைக்கின்றது. வேட்டி அணியும் வழக்கம் அன்றே இருந்தது என்பதையும், அது அரசனுக்கும், விலங்குகளை வேட்டையாடி பிழைக்கும் வேடனுக்கும் சமமாகவே இருந்திருக்கின்றது என்பதும் இதன் மூலம் தெரிகின்றது. பொதுவாக தமிழ்ச் சமூகம் என்றில்லாமல் அனைத்து இடங்களிலும் இதுதான் இயல்பான போக்காக இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலர் இன்று வேட்டி என்பது இந்து பண்பாடு அது தமிழரின் பண்பாடு கிடையாது என சொல்லும் போக்கு உள்ளது. அது தவறான வாதமாகும். தமிழ் பேசும் மக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்தார்கள் என்பதையும், சிந்து சமவெளி நாகரிகமே திராவிட நாகரிகம் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பதாலும், ஒரு நிலத்தில் தோன்றிய பண்பாடு அத்தோடு புவியியல் ரீதியாக இணைந்த மற்ற பகுதிகளுக்கும் பரவுவது தவிர்க்க முடியாதது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்த காட்டுமிராண்டி கூட்டத்திடம் மானத்தை மறைக்க ஆடை கட்டும் வழக்கம் இருந்ததா என்பதே பெரிய கேள்விக்குறி தான். அதனால் வேட்டியை இந்து பண்பாடு என்று சொல்லி அதைப் பார்ப்பனி யத்துக்கு தாரை வார்ப்பது அபத்தமானதாகும்.
அதே போல பெண்கள் இடையில் புடவையை அணியும் வழக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் தங்களுடைய மார்பகத்தை ஆடையால் மறைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாக தகவல் இல்லை. சந்தனத்தால் தொய்யில் எழுதியும், மலர்களை அணிந்துமே பெண்கள் தங்கள் மார்பை மறைத்துள்ளனர். “ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென்முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று என்றான்” (முல்லைக் கலி 11; 15-17) என்ற வரிகள் மூலம் இதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. பெண் மக்கள் இடையில் மேகலை அணிந்து அதன்மேல் பூந்துகில் சுற்றிக்கொள்வார்கள். பாடினிகள் தன் உடம்பின் பெரும் பகுதியை வெளியில் காட்டிக்கொண்டனர். பூப்போட்ட வெண்ணிறப் புடவைகளையும் பெண்கள் அணிந்துள்ளனர். மதுரைக்காஞ்சியில் பூவேலை செய்யப்பட்ட புடவைகள் மதுரை அங்காடிகளில் விற்பனை செய்யப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இன்று பெண்கள் அணியும் இரவிக்கை என்பது தெலுங்கு மக்களின் உறவால் தமிழர்களுக்கு கிடைத்ததாகும். இரவிக்கை என்ற சொல் கூட தெலுங்கு மொழியில் இருந்து வந்ததாகும்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் நாடார், நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக வைகுண்ட சுவாமிகள் காலத்தில் கிறிஸ்தவ போதகர்களின் வழிகாட்டுதலின் படி கிறிஸ்தவ நாடார்களினால் தோள்சீலைப் போராட்டம் துவக்கப்பட்டது. வைகுண்ட சுவாமிகளின் மறைவிற்குப் பின் கிறிஸ்தவ நாடார்கள் மற்றும் இந்து நாடார்கள் இருவரும் இணைந்து போராடினர். 37 ஆண்டுகள் இந்தப் போராட்டம் நடைபெற்றது. 1859ல் நாடார் பெண்களுக்கு தோள்சீலை அணிகின்ற உரிமையை திருவிதாங்கூர் அரசு வழங்கியது. தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாக 1865ல் இதர அடித்தட்டு சாதி பெண்களுக்கும் அந்த உரிமை கிடைத்தது.
ஆனால் இன்று பெண்கள் ரவிக்கைக்கும், புடவைக்கும் பெரும்பாலும் விடை கொடுத்து விட்டார்கள். வீட்டில் இருக்கும் போது நைட்டியும், நைட் சூட்டும் வெளியில் போகும் போது பெரும்பாலும் சுடிதாரும், டாப்ஸ் லெகின்சும், ஜீன்சும் அணிந்து செல்கின்றார்கள். படிக்காத, பழமையிலிருந்து விடுபட முடியாதவர்கள் மட்டுமே ரவிக்கை புடவையை பயன்படுத்துகின்றார்கள். இன்று ஆண்கள் பயன்படுத்தும் ஆடையான அரைக்கால் அல்லது முழுக்கால் ஆடைகள் தமிழ்நாட்டில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அறியப் படாதவையாகும். ஆங்கிலேயரும், நவாபுப் படையினர் எனப்படும் வடநாட்டு முசுலிம் களும் வந்த பின்னரே உடம்பின் மேற்பகுதிக்கு தைத்து சட்டை அணியும் வழக்கம் வந்தது. கிறிஸ்துவின் சமகாலத்தில் இங்கு வந்த ரோமானியர்களின் (யவனர்கள்) மேற்சட்டை யினை மெய்ப்பை என்று தமிழர்கள் குறிப்பிட் டுள்ளனர். மேலும் பதினெட்டாம் நூற்றாண் டின் இறுதிவரை துணி தைக்கும் தொழிலாளியைப் பற்றிய எந்தக் குறிப்பும் தமிழ் இலக்கியத்தில் காணப்படவில்லை. ஆனால் தமிழர்கள் ஆடை நெய்ததற்கான குறிப்புகள் பல, சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றது.சிந்து சமவெளி மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்தவற்றைக் கொண்டும் இதை உறுதி படுத்துகின்றனர்.
இவ்வாறு காலத்திற்கு ஏற்றார்போல தமிழர்கள் தம்முடைய உடைகளை மாற்றிக் கொண்டே வந்திருக்கின்றனர் என்பது புலப்படும். ஆனால் எல்லா காலங்களிலும் உடைகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது அது உணவு, உடை, இருப்பிடம் என எல்லா இடங்களிலும் வெளிப்படுகின்றது. ஆனால் இந்த வேறுபாட்டைக் களையவேண்டும் என்றும் யாரும் குரல்கொடுத்ததாக தெரியவில்லை. நமக்குத்தெரிந்து ஆடை வேறுபாடுகளைக் களைந்து அனைவருக்கும் பொது ஆடைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று முதல் முதலில் குரல் கொடுத்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. 1930லேயே பெரியார் இதைப் பேசியது சமூக சமத்துவத்தைப் பற்றிய பெரியாரின் புரிதலை காட்டுகின்றது. பெரியார் சொல் கின்றார் – “இப்போது நமக்கு அதாவது இந்தியர்கள் என்பவர்களுக்குள் பலவித உடுப்பும் சாயலும் இருப்பதை பார்க்கின்றோம். பெண்களிலும் அப்படியே.சாதாரணமாக ஆண்களுக்கு இரண்டு பெரிய பெரிய வேஷ்டி அவசியமாகின்றது. இதைத் தவிர ஒன்று அல்லது இரண்டு சட்டையும் அவசியமாகிறது. இது தவிர ஒரு தூவலும் அவசியமாகின்றது. இது தவிர பலருக்கு தலை உருமால் அல்லது குல்லாயும் தேவையாகின்றது. அது போலவே பெண் களுக்கும் 16 முழப்புடவையும், ரவிக்கையும், பாடி என்னும் உள்சட்டையும், உள் ஆடை என்று ஒரு பாவாடையும் வேண்டியிருக்கிறது. இவ்வளவு துணிகளும் உயர்ந்த தினுசில் வாங்க வேண்டு மானால் அதிகப் பணச் செலவுமாகின்றது. சாதாரணமாக ஒரு ஜதை உயர்ந்த தினுசானால் 100, 200, 300, 400ரூ. கூட ஆகிவிடுகின்றது. இவ்வளவு செலவு செய்தும் வேற்றுமையையே காட்டுகின்றது. சாதாரணமாக யாராயிருந்தா லும் இடுப்புக்கு 4 முழத்தில் ஒரு வேஷ்டியை கைலி போல அதாவது இரு தலவும் மூட்டியதாகவும், ஒரு முக்கால் கை குடுத்துணி அதாவது ழயடகாயசஅ என்று சொல்லக்கூடிய ஒரு சட்டையும், சட்டைப்பையில் அடங்கக்கூடிய ஒரு சிறு துவாலும் இருக்கும்படியாக இந்திய உடைகளை ஏன் மாற்றக் கூடாது என்பதே நமது யோசனை” என்று இந்தியா முழுமைக்கும் சேர்த்து ஆடை சமத்துவத்தை கொண்டுவர நினைத்தார் பெரியார். பெண்களின் ஆடைகளைப் பற்றி சொல்லவந்த பெரியார் “ அவர்களது உடை, நகை, தலைமயிர், பெரிய சீலை ஆகியவைகளே பெண்களை பலவீனர் களாகவும், அவற்றின் பொருட்டு அடிமைகளாக ஆக்கி அவர்களை மெல்லியர், பலமற்றவர்கள் என்று சொல்லும்படியும் ஆக்கிவிட்டது. தலைமயிரை ஒரு அழகாகப் பாவிக்கும் உணர்ச்சி சரீரத்தில் ஊறிக் கிடப்பதால் இதைப் பற்றி நினைக்கும்போதும் சொல்லக் கேட்கும் போதும் மக்களைத் திடுக்கிடச் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அதன் உபத்திரவமும் கெடுதலும் தெரியவரும். இது போலவே நகை விஷயத்திலும் பல மாறுதல்கள் காணப்பட்டாலும் அவைகள் இந்த மாதிரி அதாவது உடை மாற்றமாகி விட்டால் தானாகவே மாறிவிடும்”. (குடிஅரசு – 09.11.1930) என்றார். அதாவது அவர்களின் உடையில் மாற்றம் கொண்டு வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக அவர்களின் நகை அணியும் பழக்கத்திலும், முடியை நீளமாக வளர்த்துக் கொள்ளும் பழக்கத்திலும் மாற்றத்தை கொண்டு வந்து விடலாம் என்று சொல்கின்றார் பெரியார்.
அன்று பெரியார் சொன்னது இன்று நடைமுறையாக இருக்கின்றது. பேண்ட், சர்ட் அணிந்து கொள்ளும் பெண்கள் இன்று பெரும்பாலும் தலையை கிராப் வெட்டிக் கொள்கின்றார்கள். அதேபோல நகைகளையும் பெருமளவு தவிர்த்து விடுகின்றார்கள். ஆனால் புடவை அணியும் பெண்களே அதிகப்படியான நகைக ளையும், பலவித அழகு சாதன பூச்சு களையும் பூசிக் கொள்கின்றார்கள். நாம் நம்முடைய குழந்தைகளுக்கு பண்பாடு, வெங்காயம் என்று புடவை கட்டவும், தாவணி அணியவும் கற்றுக்கொடுத்தோம் என்றால் அது மற்றவர்களைப் பார்த்து எனக்கும் நகை வேண்டும், மேச்சுக்கு மேச்சாக செருப்பு வேண்டும், வளையல் வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பிக்கும். அதனால் குழந்தைகளுக்கு கிராப்பு வெட்டிவிட்டு, பேண்ட், சர்ட், போட்டு பழக்குங்கள். இதனால் பெற்றோர்களின் செலவும் குறையும், சேமிப்பை அதிகப்படுத்தி குழந்தைகளுக்கு நல்ல முற்போக்கான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர்களின் அறிவியல் சிந்தனையையும் வளர்க்க முடியும்.
உதவிய நூல்கள்
1) தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்-டாக்டர் கே.கே.பிள்ளை
2) பண்பாட்டு அசைவுகள்-தொ.பரமசிவன்
3) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு- அருணன்
4) நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருகின்றது தொகுதி இரண்டு- பசு.கவுதமன்
5) புறநானூறு
6) கலித்தொகை
7) பத்துப்பாட்டு
நிமிர்வோம் ஜுலை 2018 மாத இதழ்