சுயமரியாதை இதழியல்: புதுவைச் சிவத்தின் கருத்துலகப் போர் ட மணிகோ. பன்னீர்செல்வம்

புதுவையில் திராவிட இயக்கத் தூண்களில் ஒருவராகவும் இதழிய லாளருமாக செயல்பட்ட புதுவை சிவம் அவர்களை முன் வைத்து சுயமரியாதை இயக்கத்iதை ஆய்வுக்கு உட்படுத்துகிறது இக்கட்டுரை.

திராவிட இயக்க இதழியல் என்பது முதன்மையாக இந்தியர் என்பதற்கு எதிர்த்தேசியமாக அமைந்த திராவிடம் என்கிற நிலப்பரப்பு, பண்பாட்டு வெளி, மொழி இனக் குறித்தொகுதி  என்பவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது எனலாம். ஆனால் சுயமரியாதை இதழியல் என்பது தனியொரு மனிதனின் சமூகத்தின் மீது கவிந்துள்ள மத அடையாளத்தை சாதிய இழிவை பால்நிலைப் பாகுபாட்டை நீக்குவதும் களைவதும் என்பதோடு தொடர்புடையதாகும். இவ்விடத்து சுயம் உருவாக்கம் குறித்த சில வரலாற்று விவரங்களையும் காண்போம். இந்தப் பொருண்மையை விளங்கிக்கொள்ள அது இன்றியமையாததாகும்.

ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய நவீன அறிவொளிக் காலம் பல்வேறு விடுதலையியல் சிந்தனைகளை ஏற் படுத்தியது. இந்த விடுதலையியல் சிந்தனைகளின் பெருவெள்ளத்தில் கடவுளர்களின் திருஉருக்கள் அடித்து செல்லப்பட்டாலும் மதத்தின் எச்ச சொச்சமான, மாயையான கருத்து ஒன்று (fetish) நீடித்து வரவே செய்தது. அது ஆன்மா என்னும் கருத்தேயாகும். உயிரியல் (Biology), உளவியல் (psychology), உடற்கூறியல் (anatomy) போன்ற அறிவுத்துறைகள் எதிலும் ‘ஆன்மா’ என்ற கருத்துக்கு எத்தகைய பொருண்மையான இடமுமில்லை என்பதை நாமனைவரும் அறிவோம்.

ஆனால் கலை இலக்கியங்கள், தத்துவம், சமயவியல் என்கிற அறிவுத்துறைகளின்வழி ‘ஆன்மா’ என்கிற கற்பிதத்துக்கு ஒரு தொடர்ச்சியும், நீட்சியும் கிடைத்துவருகிறது. பரமாத்மா (Almight) என்கிற அண்ட சராசரங்களை அளாவி இருக்கிற பிரம்மாண்டத்தின் சிறுதுளியே ‘ஆன்மா’ (soul) என்கிற பெயரில் ஒவ்வொரு மனித உடலுக் குள்ளும் நீடித்து வருவதாக சமயங்களும் சில சூழல்களில் தத்துவங்களும் ‘ஆன்மா’ கருத்தை காத்து அரண்செய்ய வந்தன. இதனை அறிவொளிக்கால விடுதலையியலாளர்கள் பல்வேறு அறிவுச் செயல்பாடுகளின் மூலம் எதிர்கொண்டு வந்தனர். அந்தச் செயல் பாடுகளின் கூட்டு மொத்தம் என்கிற வகையில் அந்தந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டங்கள் (Constitutions) தனியொருவர் உரிமை (individual rights) என்கிற தலைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு, உடை, உறையுள், மருத்துவம், கல்வி கற்றல், கருத்து வெளிப்பாட்டுரிமை போன்ற வற்றை உறுதி செய்து, அதன் உரிமைப் பட்டயமாக அந்த அரசமைப்பை முன்னிறுத்தின. இதன் விளைவாக குறிப்பிட்ட சமூகம் என்கிற அடையாளத் தொகுதி குறிப்பிட்ட தனிநபர் என்கிற அடையாளத்தை மூழ்கடித்துவிடாமல் அந்த அரசமைப்புகள் காவல் காத்தன.

இங்ஙனம் உறுதி செய்யப்பட்ட தனிநபர் உரிமை என்கிற புலத்திலிருந்தே சுயம் (self) என்கிற பொருண்மையான கற்பிதம் ஒன்று நவீன காலத்தில் உருக்கொள்கிறது. சுயம் (self) என்பதும் கற்பிதமே என்ற போதும், அந்தக் கற்பிதத்துக்குள் தொழிற்படுகிற கூறுகள் எவ்வளவு பொருண்மையானவை (materiel) என்பது உய்த்துணரத்தக்கது.

சான்றாக. ‘தனியொருவருக்கு’ உரிமை பூணப்பட்டுள்ள ‘உணவுப் பாதுகாப்பு’ என்கிற உரிமை, அவர் அதற்காக இயற்கையின் மீது இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டு வினைபுரிந்து தனக்கான உணவைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த  உணவின் மருத்துவ நலத் தகுதியை உரசிப்பார்த்து உறுதிசெய்து கொள்ளலாம். அதற்கு அடிப்படையாக தனியொருவர் விரும்பும் கல்வியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பன போன்ற வாழ்வியல் கூறுகள் அந்த சுயம் (self) என்கிற கற்பிதத்தை பொருண்மையான தாகவும் (material) பொருளுள்ளதாகவும் (meaningful) மாற்றுவதைக் காணலாம். கடந்த இரு நூற்றாண்டில் இப்படி தொடங்கிய ஐரோப்பியர்களின் சுயம் சார்ந்த பயணம்தான் அடுத்து வந்த புதிய நூற்றாண்டுகளில், நுகர்வோர் உரிமை (consumer right), சுற்றுச்சூழலுக்குக் கேடுபயக்காத உற்பத்தி முறை (ecofriendly production modes) போன்ற களங்களை நோக்கி விரிவடைந்துள்ளதை காண்கிறோம். எனவே இந்த சுயம் (self) என்கிற நவீன கற்பிதம்தாம் ஆன்மா (soul) என்கிற வைதீகக் கற்பிதத்தை அழித்துக் கரைக்கும் அமிலம் (acid) என்று பல மேலைநாட்டு விடுதலையியலாளர்கள் கருதினர்.

அந்த விடுதலையியலாளர்களின் சரியான தொடர்ச்சியாக தென்னகத்தில் சுயமரியாதை இயக்கம், தொழிற்பட்டிருப்பதை நாம் காணத் தவறுகிறோம். அரசமைப்பு சட்டங்களின் மூலம் தனியொருவர் (individual rights) உரிமை என்பதன் வழியாக உருவாக்கப்பட்ட மேலைத் தேய சுயத்தை (self) ஜனநாயகம், சோசலிசம் போன்ற அரசியல் கருத்தாக்கங்கள் ஈன் றெடுத்தன எனலாம். அத்தகைய அரசமைப்பைச் செய்யும் வாய்ப்போ, பயணமோ (தேர்தல் பாதை) கிட்டாத சுயமரியாதை இயக்கம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உறுதியானதொரு நவீன சுயத்தை உருவாக்கவும், கடினமாக ஒவ்வொருவரும் முயன்றுழைத்து உருவாக்கிய அந்த சுயத்தின் மீது பற்றுறுதி கொள்ளவும் சுயமரியாதை இயக்கம் ஒரு நிர்மாணப் பணியை (social construction) மேற்கொண்டு வந்தது. அந்த சுயமரியாதை நிர்மாணப்பணி (self respect construction works)யின் அடிப்படை அலகாக ஒரு நவீன சுயமும் அந்த சுயத்தின் இன்றியமையாத ஒரு கூறாக எழுத்தறிவும் (literacy) உணரப்பட்டன. ஆனால் கெட்ட வாய்ப்பாக வளாகம் சார் கல்விக்கான (academic education) கல்வி நிலையங்கள் போதுமான எண்ணிக்கை யிலும், நமக்கு சாதகமாகவும் அன்று இல்லாமல் போகவே, இதழியலும் வாசிப்பும் அந்த எழுத்தறிவின் (literacy) பதிலியாக அமைந்து தென்னகத்தின் ‘நவீன சுயம்’ (self) வீறு கொள்ளத் தொடங்கியது.

எழுத்தறிவால் செறிவூட்டப்பட்ட இந்த நவீன சுயத்தின் இன்னும் விரித்தெடுக்கப்பட்ட கற்பிதமாகவே மொழி, இனத் தேசம் அல்லது தேசிய இனம் (nationality) போன்ற புதிய வரலாற்றுப் பொருண்மைகள் (historical propertion) உருவாக்கிக் கொள்ளப்பட்டன. அதுவே திராவிட நாடு பிரிவினை கோரிக்கை வரை முயன்று பார்த்தது. அந்த அரசியலை முதன்மைப்படுத்தும் போக்கே ‘திராவிட இயக்கம்’ என்றும் சொல்லை தலைப்பாகக் கொள்ளத் தொடங்கியது. ஆனால் சமூக உரிமை என்கிற சுயம் உருவாக்கம் – மற்றும் சுயமரியாதை நிர்மாணப்பணி என்ற புள்ளியில் கூடுதல் கவனம் செலுத்தியவர்கள் சுயமரியாதை இயக்கம் என்பதையே தலைப்பாகக் கொள்ள விரும்பினர்.

ஐரோப்பிய விடுதலையியலாளர்களின் அறிவுத்துறைச் செயற்பாடும், தென்னகத்தின் சுயமரியாதை நிர்மாணப் பணியாளர்களான பெரியார், குத்தூசி குருசாமி, புரட்சிக் கவிஞர், புதுவை சிவம் போன்றோரின் இயக்கச் செயற் பாடுகளும் முறையான ஒப்பியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் தென்னகத்தில் மதம், கடவுள், ஆன்மா போன்ற கருத்துகள், பின்னுக்குத் தள்ளப்பட்டு நவீன சுயம் (self) சமூக ஜனநாயகம், மக்கள் நல அரசு (welfare state) சோசலிச உணர்ச்சி (socialism) போன்ற வரலாற்றுப் பொருண்மைகள் (historical properteen) உருவாக்கப்பட்ட பின்னணி துலக்கமாகி இருந்திருக்கும்.

குறிப்பாக மதத்தில் ‘ஆன்மா அற்ற உயிரென’ பிரகடனப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு சுயத்தை உருவாக்கியதில் சுயமரியாதை இதழியலின் பங்கு மகத்தானது. குறிப்பாக இதழ் வாசிப்பு வழியாக உருவான ஒரு சுயம் என்பது சமகால வரலாற்றுணர்வை பற்றிக்கொண்டிருப்பது எனப் பெண்கள் நன்கு உணரத் தொடங்கினர். இதன் விளைவாகவே, இயக்கச் செயற்பாடுகளிலும், பின்னாளில் உருவான திராவிடக் கட்சிகளின் ஆட்சிப் பொறுப்பிலும் பெண்கள் கணிசமாக வெளிப்படத் தொடங்கினர்.

குடிமகனும் குடிமைச் சமூகமும் அரசியல் மொழிபுகளும்:

திராவிட இயக்கத்தையும் – இதழியலையும் இன்றைக்குத் தமிழ்த் தேசியர்கள் குதறிக் கிழிப்பதை போல நாம் அணுக விரும்பவில்லை. ஆனால் அது இந்தியா எனும் கட்டமைப்புக்கு எதிர்வினையாக, எதிர்த் தேசியமாகத் திராவிடத்தை முன்னிறுத்துவதற்கு முந்துகிறது என்பதும் முன்பே சொன்னதுபோல், சுயநிர்ணயம் என்கிற ஆட்சியதிகாரம் பற்றிய கருத்துருவாக்கக் களத்திலேயே சுற்றிச்சுழன்று பணியாற்றுகின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால் தேச நிர்மாணப் பணிகள் (national construction works) என்கிற களம் பற்றிய ஆய்வுகள் நமக்குச் சொல்லும் பேருண்மை. என்னவெனில் மீச்சிறு அலகாகத் தனிமனிதனும் அதனையடுத்து பல்வேறு வகை குடிமைச் சமூகத் தொகுதிகளும் வலுப்படுத்தப் பட்டுக் கொண்டே வருவதன் இறுதியாகவே தேச நிர்மாணப் பணி நிறைவுற்று, ஆட்சி யதிகாரம் அதனை நெறிப்படுத்தும் ‘அரசமைப்பு’ (constitution) போன்ற மீப்பேரலகுகளுக்கு வந்து சோந்திருக்க வேண்டும். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மீச்சிறு அலகான தனிமனிதனில் தொடங்கி தொழிலாளர் நல அரசு (வர்க்க கரிசன அரசு) மக்கள் நல அரசு (பரந்துபட்ட மக்களுக்கான welfare state) என்பன போன்ற ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகள் மீப்பேரலகுகள் மூலம் நிறைவு செய்யப்பட்டன. அந்தப் புரிதலின் பின்புலத்தில் திராவிட இயக்கமும் – இதழியலும் (எந்த உள்நோக்கமும் சதித்திட்டமும் இல்லாமல்) தவறவிட்ட ஒரு கூறு சுயமரியாதைக் கருத்துருவாக்கங்கள் எனலாம்.

அந்த இயக்கத்தின், இதழியலின் தன்னேரில்லா முன்னோடிகளான பெரியார் ஈ.வே.ரா., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், குத்தூசி குருசாமி போன்றோர் ஒரு வகையான பங்களிப்பைச் செய்துவந்தார்கள். சுயமரியாதை இதழியலுக்கு இவர்களைக் கடந்தும் தமிழகத்தின் பலமுனைகளிலும் இருந்து பங்களிப்பை பலரும் செய்துவந்தனர். அதிலும் புதுவையை மையமாகக் கொண்டு வெளிவந்த புதுவை முரசு என்றும் இதழும் அதன் எழுத்துப் போராளியான புதுவைசிவம் அவர்களின் பங்களிப்பு சுயமரியாதை இதழியலை திட்டவட்டமாக உயர்த்திப் பிடிப்பதாகும். உடனிகழ்வாக வாசிப்பை அடித்தளமாகக் கொண்டதும், பல்வேறு வாழ்வியல் போக்குகள் பற்றிய கருத்துருவாக்கத்தில் பங்கேற்பதும், சூத்திரன், பஞ்சமன், பாவயோனி என்று யாரோ எப்போதோ வரையறுத்த வரைவுகளிலிருந்து விடுபட்டு, தம்மைத்தாமே மறு சுயஉறுதியாக்கம் (self solidation) செய்து கொள்வதும் என தாம் வாழ்ந்த குடிமைச் சமூகத்தில் (civil society) ஒரு காத்திரமான அசைவியக்கத்தை உண்டுபண்ணத் தொடங்கினார் சிவம்.

வங்கத்தின் பங்களிப்பும் திராவிடவியலின் திசையும் ஒன்றல்ல:

இந்தப் பணியின் முழுமையான வீச்சையும் விளைவையும் உணர சுயமரியாதை செயல் களத்தில் தென்படும் ஒரு மருட்சியை இப் பொழிவின் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி விடுவது நலம் பயக்கும் என்று நம்புகிறேன். அது சீர்த்திருத்தம் என்ற சொல்லால் அறியப்படும் சமூக செயல்பாடுகளைப் பற்றிய கருத்துருவமே யாகும். சீர்த்திருத்தம் என்று தமிழிலும், reformism என்று ஆங்கிலத்திலும் வழங்கிவரும் சொற்கள் சுட்டும் கருத்துருவமும் சுயமரியாதை யும் ஒரே நேர்ப் பொருளைக் கொண்டதல்ல. மதத்தோடும், பண்பாட்டு ஒழுகலாறுகளோடும் அடிப்படையான மாறாத பற்றுறுதியைக் கொண்டும், அந்த புலத்தில் இடைக்காலத்தில் ஏற்பட்டிருக்கிற விலகல்களைப் பிறழ்வுகளை நோசெய்துகொள்வதை reformism சீர்த்திருத்தம் என்று சமூகவியலாளர்கள் வரையறுக்கிறார்கள்.

இதற்கு சரியான சான்று வங்கத்து அறிவுத்துறையினரான ராஜாராம் மோகன்ராய், சுவாமி தயானந்த சரசுவதி, ஈசுவர சந்திர வித்யாசாகர் போன்றோர் மேற்கொண்ட, பால்யமணம் ஒழிப்பு, உடன்கட்டை ஏறுதல் தவிர்ப்பு, அனைவருக்கும் ஆலயப் பிரவேசம் போன்றவற்றைச் சுட்டலாம். சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுவதற்குச் சற்று முன்பே தொடங்கப்பட்டுவிட்ட குடிஅரசு இதழில் பாரதமாதா வணக்கம், இறை வணக்கம், காந்தியை மகாத்மாவாய் காணுதல் போன்ற கூறுகள் காணப்படுகின்றன. காங்கிரஸ், காந்தி என்ற இரண்டின் தாக்கத்தையும் முற்றிலுமாக இழக்காத ஒரு பெரியாரையே அப்போது நாம் காண்கிறோம். இந்தக் கட்டத்தில் தான் சீர்திருத்தம் என்ற சொல்லும் அது குறிக்கும் செயல் தொகுதியும் பெரியாரிடம் வழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. அந்தக் கட்டத்தில் கள்ளுக்கடை ஒழிப்பு, ஆலய நுழைவு, வெறும் தீண்டாமை ஒழிப்பு (சாதி ஒழிப்பு இல்லை) போன்ற செயல்பாடுகளோடு மாறாப்பற்றும், பிணைப்பும் கொண்டிருக்கின்றனர்.

சுயமரியாதை நிர்மாணச் செயற்களம்:

ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குள் எல்லாம் (1927-28) அடுத்தடுத்த செயல்பாட்டுக் கட்டத்தை நோக்கி முன்னேறத் தொடங்குகிறார். ஆனால் அந்தச் செயல்பாட்டுத் தொகுதியையும் ‘சீர்த்திருத்தம்’ என்ற தலைப்புச் சொல்லின் கீழேயே பயன்படுத்தி வந்திருக்கிறார். சிலர் அதனை சமூகச் சீர்த்திருத்தம் (social reform) என்னும் சொல்லிணையாலும் சுட்டுகின்றனர். உண்மையில் பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் மூலம் செய்தது புத்தம் புதிய சுயம் உருவாக்கமே ஆகும். அதை ஓரளவு சுயமரியாதை நிர்மாணம் என்ற சொல்லே ஈடுசெய்கிறது எனலாம். உண்மையில் சுயமரியாதை என்கிற சொல்லின் மூலம் பெரியார், இந்துமத நீக்கம், வர்ணசாதி நீக்கம் என்கிற முற்றிலும் இன்னொரு கட்டத்திற்கு நகர்த்தியதென்பது பெரிய வரலாற்று அசைவு எனலாம். வங்க அறிவுத் துறையினர் மேற் கொண்டதே reformism என்பதும், சுயமரியாதை அறிவுத் துறையினர் உருவாக்கியது மத நீக்கம் என்கிற liberation அதாவது விடுதலையியல் செயல்பாடு என்பது ஐரோப்பிய அறிவுத் துறையினரின் தற்கால ஆய்வு நூல்களில் துல்லியமாக வெளிப்படுவதைக் காணலாம்.

சுயம், குடிமை, அரசு, முப்புள்ளிக்கோலம்:

எனவே இந்தத் தொடக்கநிலைத் தெளிவோடு, புதுவை முரசின் கருத்துலகப் போராளியாகிய புதுவை சிவத்தின் இதழியல் செயல்பாடுகளை மதிப்பிடாமல் கிடைக்கிற ஆளுமை பெறுமானங்கள் வேறாக இருக்கும். இங்குள்ள சாதியக் கறைபடிந்த மானுடத்தையும் மனித நிலையிலிருந்து கீழிறக்கம் செய்யப் பட்டுள்ள மானுடத் தொகுதியை நவீனத்துவக் கண்ணோட்டத்தோடு ‘தாமே தமக்கு புத்தம் புதிய சுய மதிப்பைக் கற்பித்துக்கொள்கிற புதிய சுயம் உருவாக்க (self establishment) நடவடிக்கையே புதுவை சிவம் முன்வைக்க விரும்பிய அடையாள அரசியலாகும். பல்வேறு கொள்கை உறவுகொண்ட இதழ்களில் அவர் எழுதிய அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரை களின் வழி தெளிவாவது இதுதான். தன் மொழி இனம் காண நவீனத்துவக் கண்ணோட்டம் கொண்ட புதிய சுயத்தை அறிந்தேற்க வைப்பதுதான் அது எனலாம்.

தேசம், அரசு, ஆட்சிக் கட்டமைப்பு என்பன பற்றியெல்லாமும் அவருக்கு கவனமும், கரிசனமும் இருந்தபோதும் முதன்மையான ஆளுமைக்கட்டமைப்பு பல்வேறு சாதியக் குடிமைச் சமூகக் குழுக்களின் ஆளுமைக் கட்டமைப்பு இந்த இந்தியாவில் சுயமற்ற மக்கள் தொகுதியாகவும் குலம் சார்ந்த கைவினைத் தொழிலுக்குள் முடக்கப்பட்டதாகவும், அல்லது நவீன இயந்திர வகைப்பட்ட தொழில்களில் மலிவான உயர்திணைக் கருவிகளாகக் கொத்துத் கொத்தாகக் கூளம் கூளமாக மலிவான கூலிக்குப் (cheap labour) பயன்படுத்தப்பட்டதாகவும் உள்ள சூத்திர, பஞ்சம, பழங்குடிகளையும், பெண் பாலினத்தவரையும் மீட்டெடுப்பது அவரின் முதன்மை கரிசனமாக இருந்திருக்கிறது. இந்த ஒடுக்கப்பட்டோர் மீட்புவாத முயற்சிகளுக்கு வைதீக மீட்புவாதமும் அதைச் சார்ந்து இயங்கும் புதிய அரசும் (இந்திய) எதிராக இயங்குகிறது என்கிற பொருளில் அன்றைய அரசதிகாரத்தை எதிர் இலக்காகக் கொள்கிறார். அதை வீழ்த்திய இடத்தில் நம் இலக்குகளை சாதித்துக்கொள்ள நமக்கான அரசதிகாரம் வேண்டும் என்கிற பொருளில் தேவைக்கேற்ப ஆட்சி அதிகார விழைவுகளை வெளிப்படுத்துகிறார். மற்றபடி தாம் விழைகிற ஆட்சியதிகாரத்துக்கான தேர்தல் பந்தயங்களையோ, வாக்காளர் அணித் திரட்டல் களையோ, பிரச்சார பெரு முழக்கங்களையோ அவருடைய சுயமரியாதை இதழியல் முதன்மையாக கவனஞ்செலுத்தவில்லை.

சுயத்திலிருந்து தேசத்திற்குத் தாவும் வேட்கை:

ஒடுக்கப்பட்டோர் சமூக ஆளுமை உரு வாக்கத்துக்கான கருத்தியல்களே எண்ணிக்கை யிலும், அடர்த்தியிலும் மிகுந்துள்ளன. மதநீக்கம், சாதியத்தகர்வு, பால்நிலைச் சமத்துவம் என்கிற சுயமரியாதை நிர்மாண இலக்குகளை எட்டிப்பிடிக்க இருக்கிற வேறுவாய்ப்புகளற்ற ஒரேவழி ஆட்சியதிகாரம் என்கிற அதிகாரத்தை முற்றுமாக பார்க்கிற பார்வை அவரிடம் இல்லை. மாறாக தங்களின்  தேவைக்கேற்ப இயக்கங்கள் அதிகாரத்தை முற்றுகையிடும் பார்வையே அவரிடம் மேலோங்கி இருந்திருக் கிறது. பெரியார் – அண்ணா முரண்பாடும் அதை  முன்வைத்து விவாதிக்கப்பட்ட பல கருத்துக் களும் பரவலாக பெரியாரின் பெருந்தா மணத்தை ஒட்டியே  அனைத்தும் சுருக்கப்பட்ட நிலையில் முன்வைக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் காலத்தில் வழங்கப்பட்ட சமூக அரசியல் நீதிகள்கூட வடவர்களிடம் போய்ச் சோந்திருக்கிற புதிய அதிகாரத்தால் சுதந்திர இந்தியாவில் சுயமரியாதை செயல்பாடு களுக்கும், சமதர்மச் செயல்பாடுகளுக்கும் கிடைக்காது. எனவே தனிநாட்டுக் கோரிக்கை யும், அதற்கேற்ப, அரசியல் இயக்கமாக நாம் நம் இயக்கத்தை மறுவார்ப்படம் செய்தே தீர வேண்டும் அதன் அடிப்படையில் பெரும் பான்மை எண்ணிக்கையினரின் (சூத்திர பஞ்சம) மக்கள் பிரதிநிதித்துவ அரசாக இதை மாற்ற நாம் முன்னோடி அரசியல் சக்தியாக உழைக்க வேண்டும் என்கிற புரிதலுமே அவருடைய அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளில் பட்டுத் தெறிக்கிறது.

அதை எல்லாம் விடுத்து பெரியாரின் பொருந்தா மணத்தையே முதலும் முடிவுமான பேசு பொருளாக்கி அது நிகழாதிருந்திருந்தால் தலைவர்களுக்குள் பிணக்கு வந்திருக்காது. அப்படி பிணக்கு ஏற்படாதிருக்குமானால் இயக்கம் ஒற்றுமையாக இருந்திருக்கும். நம் கொள்கைகள் விரைவாக வெற்றியடைந் திருக்கும் என்பதுபோன்ற இயங்கா நிலைப் பார்வைகள் புதுவைச் சிவத்தின் இதழியல் செயல்பாடுகளை முற்றுகையிடவில்லை. அதற்கு அவர் பாரதிதாசன் என்கிற பேரொளியைத் தழுவி நின்றவர் என்பதை ஒரு முகாமையான காரணமாகச் சொல்லலாம். ஏனெனில் பாரதிதாசனும், பெரியாரின் பொருந்தா மணத்தைத் தொடக்கத்தில் கண்டித்தவர் என்ற போதும் அண்ணாவையும் அவர் தம்பிமார் களையும் போல அதையே முற்றுமுழுதாகப் பேசுவது என்று மூழ்கிவிடாமல் விரைந்து தெளிவுபெற்று அண்ணாவின் தரப்பில் கொள்ள வேண்டுவனவற்றைக் கொண்டு, தள்ள வேண்டுவனவற்றைத் தள்ளி மீளவும் தீவிரமான சமூக சுயமரியாதை நிர்மாணப் பணிகளுக்குள் புரட்சிக்கவிஞர் ஈடுபடலாயினர். இந்தத் தெளிவான வழித்தடம், புதுவை சிவத்தின் பயணத்திலும் பங்காற்றியுள்ளது தெரிகிறது.

புதுவை கற்பித்த புதுப்பாடம்:

அண்ணாவும் அவர் தம்பிமார்களும் முன்வைத்த புதிய அரசியல் எதிரிகள் அவர்களின் வலிமை, அதன் இரக்கமற்ற போக்கு என அனைத்தையும் திராவிடநாடு என்கிற அரசியல் புனைவின் வழியாக மட்டும் பார்க்காமல் புதுவை என்கிற மண்ணும், நீருமாக, தசையும், குருதியுமாக தான் பிறந்து வளர்ந்த பூமியின் அவலங்களிலிருந்து உள்வாங்கத் தொடங்கினார் சிவம். திராவிட இயக்க இதழியலாகட்டும் சுயமரியாதை இயக்க இதழியலாகட்டும் அதுவரை தமிழ் வாழிடத்தை பிளவுபடாத வரலாற்று நிலப்பகுதியாகக் கற்பித்து வாழ்ந்துவந்து கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம். இந்நிலைமையிலே புரட்சிக் கவிஞரும் அவருடைய கருத்துப் படைக்கலனாகிய புதுவை சிவமும் புதுவைபற்றி விவாதித்த பொருண்மைகள் வரலாறு, புவியியல், பண்பாடு, ஆட்சியதிகாரம் என்று அனைத்து நிலையிலும் திராவிட சுயமரியாதை இயக்கத்துக்கும் இதழியலுக்கும் ஒரு மாபெரும் கொடையென்றே கூறலாம். திராவிட சுய மரியாதை இயக்கங்களின் முழுமை கெடாமல் அதற்குள் புதுவையின் தனித்துவத்தை எல்லா நிலையிலும் அவர்கள் பொருத்திக் காட்டினர். அந்தத் தனித்துவத்தை விளக்கும் தெளிவு முழுமைக்கு இன்றும் சிறப்பாக ஒளியூட்டி வருகிறது எனலாம்.

கட்டுரையாளர் – உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் பாரதிதாசன் இயல் ஆய்வாளர்

நிமிர்வோம் செப் 2018 இதழ்

You may also like...