மின்வாரியத் துறையிலும் வடநாட்டுக்காரனா?
தமிழ்நாட்டில் உதவி மின் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 325 பேரில் 36 பேர் வடமாநிலங்களையும் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்ற செய்தி தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டைச் சார்ந்த 80,000 பேர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இதிலிருந்தே பொறியாளர்கள் பட்டம் பெற்ற இளைஞர்களிடம் வேலை இல்லாத் திண்டாட்டம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். வட மாநிலத்துக்காரர்கள் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புகளைப் பறிப்பதற்கான காரணம் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் தவறான கொள்கைதான்.
2013ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாக வேண்டுமெனில் தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ் மொழிக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த விதியை 2016ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி திருத்தி தமிழக அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம். தமிழக அலுவல் மொழியான தமிழை வேலைக்குச் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம் என்று திருத்தியது. இதன் காரணமாகவே தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் வடநாட்டார் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின் வாரியம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்தது. அதிலும் 12 பேர் வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் வடநாட்டுக்காரர்கள் முறைகேடாக குறுக்கு வழிகளில் நுழைந்து வருகிறார்கள். இப்போது தமிழக அரசுப் பணிகளிலும் வடநாட்டுக்காரர்கள் நுழையத் தொடங்கி விட்டனர்.
திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வடநாட்டுக்காரர்கள் திணிப்பை எதிர்த்துப் போராடி வருகிறது. பல்வேறு சமூக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இதை வன்மையாகக் கண்டித்து வருகின்றன.
பெரியார் முழக்கம் 06062019 இதழ்