சைவ-அசைவ உணவு பாகுபாடு
சில மாதங்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர், மனித வளத்துறைக்கு எழுதிய கடிதத்தை அந்த அமைச்சகம் அனைத்து அய்.அய்.டி.களுக்கும் நகல் எடுத்து அனுப்பி, அதன் பேரில் விளக்கம் கேட்டது. சைவம், அசைவம் சாப்பிடுகிற மாணவர்களை, ஒரே இடத்தில் உணவருந்த அய்.அய்.டி. அனுமதிப்பதாக அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட் டிருந்தது. சென்னை அய்.அய்.டி., உடனே இதற்கு பதில் எழுதியது. சைவ, அசைவ உணவுகள் ஒரே உணவு கூடத்தில் சாப்பிட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அய்.அய்.டி. தந்த பதில். சென்னை அய்.அய்.டி.யின் இணையதளம் உணவு விடுதிகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளது. இதன்படி 15 மாணவர் விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் இவற்றிற்கு 6 உணவுக் கூடங்களும் செயல்படுகின்றன. இதில் அய்ந்து உணவுக் கூடங்கள் (பெண்கள் உணவுக் கூடங்களும் சேர்த்து) தனியார் நடத்துபவை. ஒரு உணவுக் கூடத்தை அய்.அய்.டி. நிர்வாகமே நடத்துகிறது. இது தவிர, பல்வேறு உணவகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் உணவுக் கூடமும் (குடிடின ஊடிரசவ) உண்டு. அனைத்து உணவுக் கூடங்களிலும் அசைவ உணவுகள் முழுமை யாக தடைசெய்யப்பட்டுள்ளன. சைவ உணவு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சைவத்திலேயே சமண மதத்தினருக்கு மட்டும் தனி சமையல் கூடம். அசைவ உணவை விரும்பும் மாணவர்கள் வெளியிலிருந்து எடுத்து வந்து வளாகத்துக்குள் சாப்பிடலாம் என்ற அனுமதி மட்டும் இருக்கிறது. இதுவும் எந்த நேரத்திலும் பறிக்கப்பட்டுவிடலாம் என்று அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
நவீன தொழில்நுட்பக் கல்வி வளாகம் ஒன்று – அதுவும் வெகு மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறிக் கொண்டு வெகுமக்கள் உணவு முறைக்கு தடை போடுகிறது. இவர்கள் படித்த உடனேயே சைவ-அசைவ உணவு வேறுபாடுகள் ஏதுமற்ற – வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகக் காத்துக் கிடப்பவர்கள். அத்தகைய வளாகத்துக்குள்ளேயே ‘அசைவ’ உணவு வெறுப்புக்கும் தடைக்கும் உள்ளாக்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் உணவுக் கலாச்சாரமே இங்கு அவமதிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் கல்வி வளாகமா அல்லது சங்கர மடமா? என்று கேட்க வேண்டியிருக்கிறது.
மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு, ஒவ்வொரு துறையின் பெயர்ப் பலகையும் சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தி மொழிகளிலேயே மாற்றப்பட்டுள்ளன. இந்தி தெரிந்த மாணவர்களால்கூட இதைப் படிக்க இயலவில்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் அய்.அய்.டி. மாணவர் கூறுகின்றனர். நாடாளுமன்ற தோதலுக்கு முன்பு காங்கிரசின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கும் கருத்தரங்குகளை அய்.அய்.டி. நிர்வாகமே ஏற்பாடு செய்தது. குருமூர்த்தி, அரவிந்த் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழல்களை அய்.அய்.டி. நிர்வாகம் பேச வைத்து, மோடிக்கு மறைமுக ஆதரவைத் திரட்டியது என்ற செய்தியை மாணவர்கள் தொலைக் காட்சி விவாதங்களில் கூறினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் ‘ஷாகாக்களும்’ அய்.அய்.டி.யில் அனுமதிக்கப்படுவதோடு, ‘அரே ராமா அரே கிருஷ்ணா’ அமைப்பும் அதற்குரிய ‘பூணூல்-குடுமி’ அடையாளங்களோடு வலம் வருகின்றன.
அய்.அய்.டி. தொடங்கியது முதல் இயக்குனர்களாக பி.வி. இந்திரேசன், எல்.எஸ். சிறீநாத், என்.வி.சி. சாமி, ஆர்.நடராஜன், அனந்த் என்று தொடங்கி, பாஸ்கர் இராமமூர்த்தி என்று பார்ப்பனர்கள் மட்டுமே தொடருகின்றனர். இவர்களின் ‘சாம் ராஜ்யத்தில்’ பதவி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை ஏதும் பின்பற்றாமல், கொல்லைப்புற வழிகளில் ‘அட்ஹாக்’ நியமன முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஏடுகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதும் இல்லை. இந்த முறைகேடுகளை எதிர்த்து, ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நாடாளுமன்ற சட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட, இந்த நிறுவனங்கள் பெற்றுள்ள சுயாட்சி உரிமைகள் முறைகேடாகவே பயன்படுத்தப்படுகின்றன. சென்னை அய்.அய்.டி., அதிகாரக் குவியல்களை சட்டப்பூர்வமாக்கி, அதற்கேற்ற திருத்தங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அய்.அய்.டி. சட்டத்தின் 13(5)ஆவது பிரிவு ஒரு பேராசிரியரையோ ஊழியரையோ விளக்கம் ஏதும் கேட்காமலே பதவி நீக்கம் செய்ய முடியும். பிரிவு 12(1) – நியமனங்களுக்கான விளம்பரத்தை வெளியிடாமல், இயக்குனர் பரிந்துரையை ஏற்று நிர்வாகக் குழுவே நியமனம் செய்ய முடியும் என்ற உரிமையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி தற்போதுள்ள சட்டங்களையே மாற்றியமைக்கவும், உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற சட்ட நடைமுறை பின்பற்றப்படாமல், அனைத்தையும் புறந்தள்ளி, ‘மனுதர்ம’ ஆட்சியை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். – நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 21112019 இதழ்