கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி
மே 25, 2019 அன்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவும் எழுச்சியுடன் நடை பெற்றது. நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
உயர்நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்று நடந்த நாத்திகர் பேரணி மேட்டூர் கேம்ப் பகுதியில் தொடங்கி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேரணியை மாலை 4 மணியளவில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணி 2 மணி நேரம் நடந்தது. பேரணி வரும்போதே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பெண்களும் ஆண்களுமாக இளைஞர் கூட்டம். பேரணிக்காகவே தயாரிக்கப்பட்ட ‘டி சட்டைகளை’ அணிந்து முழக்கமிட்டு வந்த காட்சியை வீதியின் இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி நின்று பார்த்தனர். இளம் பெண்கள் கைகளில் தீச்சட்டிகளை ஏந்தி பகுத்தறிவு முழக்கமிட்டு வந்தனர். சிலம்பம், தீப்பந்தம் சுழற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தன. பெண்களும் சிலம்பு சுற்றினார்கள். பேரணியின் இறுதியில் புத்தர், பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராசர், கலைஞர் வேடமணிந்து தனித் தனி டிரக்குகளில் வந்தனர். மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை இந்தத் தலைவர்கள் பார்வையிடுவது போல் இருந்தது. பறை இசையும் முரசும் பேரணியில் முழங்கின. அலகு குத்தி கார் இழுத்து வந்தனர்.
கொளத்தூர் அருகே உள்ள அய்யம்புதூரில் முதன்முறையாக பெரியாரியல் பயிற்சி பெற்ற இளம் தோழர்கள் பெண்களும் ஆண்களும் பயிற்சி முடிந்த அடுத்த நாளே அலகுகுத்தி தீச்சட்டிகளை ஏந்தி பேரணியில் வந்தது குறிப்பிடத்தக்கது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பேரணியில் இறுதி வரை நடந்து வந்தனர்.
நான்கு தோழர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு பறவையைப் போல தொங்கிக் கொண்டு வந்தனர். கடவுள் சக்திக்கும் அலகு குத்துதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இதன் வழியாக பார்வையாளர்களுக்கு உணர்த்தினர்.
பேரணியின் இறுதியில் ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகே எழில்மிகு மேடையில் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. அ. அனிதா வரவேற்புரை யாற்றினார். மேட்டூர் ஆர்.எஸ். பகுதி கழகத் தலைவர் பொன். முரளிதரன் தலைமை தாங்கினார். மேடையில் பள்ளி மாணவர்களின் ‘ஜிம்னாசிய’ உடற்பயிற்சி களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூர்யகுமார், மாவட்ட செயலாளர் கி.கோவிந்தராசு, மா. மோகனா முன்னிலை வகித்தனர்.
அன்னை மணியமையார் குறித்து ஏராளமான வரலாற்றுச் செய்திகளுடன் இரா. மதிவதனி உரையாற்றினார். பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், ‘பகுத்தறிவுப் பாதை செல்லுங்கள்’ என்ற தலைப்பிலும், விடுதலை இராசேந்திரன், ‘நூற்றாண்டு காணும் அன்னை மணியம்மையார்’ என்ற தலைப்பிலும், ஆனூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ‘இன இழிவு நீக்கிய ஈரோட்டுப் பெரியார்’ என்ற தலைப்பிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘அடிமை விலங்கொடித்த புரட்சியாளர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
பேரணி விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்திய தலைமைக் குழு உறுப்பினர் மேட்டூர் சக்தி தொகுப்புரை வழங்கினார். பகுதி கழகச் செயலாளர் கு. விவேக் நன்றி கூறினார். விழா மேடையில் கழகத் தலைவர், பொதுச் செயலாளரிடம் தோழர்கள் கட்டமைப்பு நிதி வழங்கினர். மேடைக்கு எதிரே பெரியார்-அம்பேத்கர்-காமராசர்-புத்தர்-அண்ணா-கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளுடன் அவர்களின் படங்கள் ‘எல்.ஈ.டி.’ திரையில் திரையிடப்பட்டன. தோழர்கள் அனைவருக்கும் இரவு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. மேட்டூர் ஆர்.எஸ். பகுதி கழகத் தோழர்கள் பேரணி விழாக்களை சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 06062019 இதழ்