வாசகர்களிடமிருந்து…
முனைவர் இராமசாமி எழுதிய “இசை நாடகத்துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்” கட்டுரை பல வரலாற்றுத்தகவல்களை விவரிக்கிறது. பார்ப்பனரல்லாத கலைஞர்களின் சுயமரியாதைக்கு பெரியார் இயக்கம் எவ்வளவு கவலைப்பட்டிருக்கிறது என்பதை உணர வைத்தது. 1930இல் ‘குடிஅரசு’ ஏட்டில் பார்ப்பனரல்லாத ‘சங்கீத வித்வான்’களின் பெயர்ப் பட்டியலையே பெரியார் வெளியிட்டிருக்கிறார். “சங்கீத மாநாட்டை சுயமரியாதை இயக்கம் நடத்துவதற்குக் காரணம் கலையின் மேன்மையை உணர்த்துவதற்காக அல்லவென்றும் பார்ப்பனரல்லாத கலைஞர்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் பெரியார் தெளிவுபடுத்துகிறார்.
சுயமரியாதை இயக்கம் சார்பில் நடந்த முதல் நாடகமே ‘தீண்டாமை’ ஒழிப்பை முன் வைத்து தான் என்பது மற்றொரு முக்கியமான செய்தி. செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாடு இரண்டு நாளில் முடிவடைந்து விட்டது, அது பலருக்கும் ஏமாற்றமாகி விட்ட தால் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை ஈரோட்டில் ஒரு வார காலம் நடத்தத் திட்டமிட் டுள்ளதாக ‘குடிஅரசு’ வெளியிட்ட செய்தி வியப்பூட்டுகிறது. மாநாடுகளை மக்களிடம் சமுதாயப் புரட்சிக் கருத்துகளைப் பரப்பிட பெரியார் எப்படிப் பயன் படுத்தியிருக்கிறார் என்பதை நினைக்கும்போது உண்மையில் மெய் சிலிர்க்கிறது. – வைத்தீஸ்வரி, கோவை
சூழல் ஆய்வாளர் நக்கீரன் பேட்டியில், நாகை மாவட்டம் மாதிரிமங்கலம் என்ற பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த கிராமத்தில் பெரியார் தொண்டர் என்.டி. சாமி நடத்திய ஜாதி ஒழிப்புப் புரட்சிகளை எடுத்துக் காட்டியிருந்தார். ஊருக்கு வெளியே இருந்த சேரிகளை ஊருக்கு நடுவே குடியமர்த்தியதோடு, சொந்தமாக தேனீர்க் கடை தொடங்கி, தலித் மக்களை ‘பெஞ்சு’களில் அமர வைத்து பொதுக் குவளையில் தேனீர் வழங்கியிருக்கிறார். அக்காலத்தில் இவை மகத்தான புரட்சி. இதன் காரணமாக ஜாதி உணர்வாளர்கள் அவரது கடைகளையே புறக்கணித்திருப்பார்கள் என்பது உறுதி. பொருள் இழப்பையும் ஏற்று, இந்த மாற்றத்தை செய்து முடித்திருக்கிறார். சாவுக்கு தலித் மக்கள் பறை அடிக்கும் அவலம் முதன்முதலாக இந்த கிராமத்தில் தான் நிறுத்தப்பட்டது என்பது மிகச் சிறந்த வரலாற்றுக் குறிப்பு. உள்ளூர்களில் எத்தனையோ பெரியார் தொண்டர்கள் பார்ப்பன ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் பதிவுகள் இல்லாமலே போய் விட்டதே என்பது தான் வேதனை அளிக்கிறது.
– பிரசாந்த், திருப்பூர்
வாசகர்களிடமிருந்து…
சங்க காலத்தில் ஜாதி இல்லை என்று புலவர் செந்தலை கவுதமன் கட்டுரையையும் சங்க காலத்திலேயே வர்ணாஸ்ரமம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது என்று கவிஞர் தணிகைச் செல்வன் கட்டுரையையும் ‘நிமிர்வோம்’ வெளியிட்டது மிகவும் சிறப்பு. இத்தகைய அறிவுபூர்வ விவாதங்கள் பார்ப்பன எதிர்ப்பு சிந்தனையை மேலும் கூர்மைப்படுத்துவதற்கே உதவும்.
– சபரி, பொள்ளாச்சி
இந்தியா என்பது பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப் பட்டது என்பதை மிக சிறப்பாக ‘இராவணன்’ எழுதிய கட்டுரை விளக்கியது. இளைய தலைமுறையினருக்கு இந்த வரலாறுகள் அவசியம் விளக்கப்பட வேண்டும்; நிமிர்வோம் இதழுக்குப் பாராட்டு.
– ஆனந்த், சேலம்
பெரியார் இயக்க மேடைகளின் தனித்துவம் குறித்து பேராசிரியர்
ஆ. சிவசுப்பிரமணியம் பேட்டியை வெளியிட்டதற்கு மகிழ்ச்சி; பாராட்டு. கடவுளையே விமர்சிக்க லாம் என்ற சூழலை உருவாக்கியதன் மூலம் எதையும் விமர்சிக்கலாம் என்று கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை திராவிட இயக்க மேடைகள் விரிவுபடுத்தின. பத்து, பன்னிரண்டு வயது பையன்கள் எல்லாம் தீவிரமான பத்திரிகைகளைப் படிக்கும் சூழல். இந்தப் பின்னணியில்தான் உருவானது என்ற பேராசிரியரின் கருத்து மிகச் சிறப்பு.
– விஜய், நாமக்கல்
நிமிர்வோம் ஆகஸ்ட் 2019 மாத இதழ்