தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நடுவண் ஆட்சி

மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க 15ஆவது நிதிக் குழு பின்பற்றும் அளவீடுகள், காரணிகள் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதை புள்ளி விவரங்களுடன்  அலசுகிறது கட்டுரை.

நடுவண் அரசு வசூலிக்கும் வரி வருவாயில் ஒரு பகுதியை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 280 (1)ன் படி ‘நிதிக் குழு’ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது. தற்போது 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் (2015-20) செயல்பட்டுக் கொண்டிருக்கிறன. கடந்த ஆண்டு நவம்பரில் பதினைந்தாவது நிதிக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் பரிந்துரைகள் வருகின்ற 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் அமலில் இருக்கும். இந்த 15ஆவது நிதிக் குழுவின் தலைவராக ஒன்றிய வருவாய்த் துறை செயலாளராக இருந்த என்.கே.சிங் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி 2017ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இந்தக் குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளர் சக்திக்காந்த தாசு, நடுவண் அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அசோக் லகிரி, நடுவண் அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கின் உறுப்பினர் ரமேசு சந்த் மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் அனூப் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

நடுவண் அரசு பகுப்புத் தொகுப்பு (னiஎளையடெந யீடிடிட) வரி வருவாயை மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க ஒரு சூத்திரத்தை அளிக்கும். அந்த சூத்திரம் பல காரணிகளைக் கொண்டு உருவாக்கப்படும். உதாரணமாக 13ஆவது நிதிக் குழுவை எடுத்துக் கொண்டால் அவை பின் வரும் காரணிகளை, வெவ்வேறு அளவைகளில் (றநiபாவயபந)  கணக்கில் கொண்டன. எல்லாக் காரணிகளும் ஒரே அளவிற்கு முக்கியத்துவம் பெற்றவை அல்ல என்பதால் தான் ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவீடு அளிக்கப்படு கின்றது. அதன்படி ஒரு மாநிலத்தின் பரப்பள விற்கு 10 புள்ளிகளும், நிதிக் கட்டுப்பாட்டிற்கு (களைஉயட னளைஉiயீடiநே) 17.5 புள்ளிகளும், இந்திய சராசரி வருமானத்திலிருந்து ஒரு மாநிலம் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதற்கு 47.5 புள்ளிகளும், மாநிலத்தின் மக்கள் தொகைக்கு 25 புள்ளிகளும் வழங்கப்பட்டன. ஆக 100 புள்ளிகளும் இவ்வாறாக 13ஆவது நிதிக் குழுவில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் 14ஆவது நிதிக்குழுவில் பரப்பளவை மட்டுமே நிதி ஒதுக்கலுக்கு அளவீடாகக் கடைபிடிக்கத் தொடங்கினர். அதை 15 புள்ளிகளாக்கினர். நிதிக் கட்டுப்பாட்டை கணக்கில் கொள்ளவேயில்லை. ஒரு புதிய மாநிலத்தின் காட்டின் பரப்பளவுக்கு 7.5 புள்ளிகள் அளவீடாக வழங்கப்பட்டது. வருமானம் பின்தங்கி விட்டதற்கான அளவீடு 50 புள்ளிகளாக உயர்த்தப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் பின்பற்றப்பட்ட நிதி ஒதுக்கீடு 2011இல் 10 புள்ளிகளாக மாற்றப் பட்டது. 1971 மக்கள் தொகைக்கு முந்தைய நிதிக் குழுவில் வழங்கப்பட்ட 25 புள்ளி அளவீடு 17.5 புள்ளியாகக் குறைக்கப்பட்டது. இந்த மாற்றங்களால் தமிழகத்திற்கு அதன் பங்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி என்ற அளவிற்கு நிதி குறைந்துபோனது. 2015 முதல் 2020 வரையில் இதன் மூலம் தமிழகம் இழப்பது ரூ.30,000 கோடி.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் வரி வருவாயைப் பகிர்ந்தளிக்க உருவாக்கப்பட்ட இந்த நிதிக் குழுவின் 15ஆவது குழு அதன் பணிகளைத் துவக்கியுள்ளது. இதன் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. வட மாநிலங்களை வாழவைத்து தென் மாநிலங்களை,  குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையிலான செயல் பாட்டை கையிலெடுத்துள்ளது அம்பலமாகி யுள்ளது. 15ஆவது நிதிக் குழுவின் ஒரு அறிவிப்பு மிகவும் அச்சமூட்டும் ஒன்றாகும். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இக்குழு மாநில அரசுகளுக்கான நிதியைப் பகிர்ந்தளிக்கும் என்பது அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பு சமூக முன்னேற்றக் கட்டமைப்பில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டிற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். அதே வேளையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாமல் பொறுப்பற்று செயல்பட்டிருக்கின்ற வட மாநிலங்களுக்கு கூடுதல் வருவாயை மடை மாற்றும் நடவடிக்கையாகும். 15ஆவது நிதிக் குழுவின் இந்த அறிவிப்பு இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் அடிப்படையில் தான் முந்தைய காலங்களில் இந்தக் குழு மாநில அரசுகளுக்கான நிதியைப் பகிர்ந்தளித்து வந்தது. ஆனால் 14ஆவது நிதிக் குழு 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 புள்ளி அளவீட்டுடன் மாநில அரசுகளுக்கான வரியைப் பகிர்ந்தளித்தது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 10 புள்ளி அடிப்படையில் பகிர்ந்தளித்த போதே தமிழ்நாட்டுக்கு 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.6,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் வட மாநிலங் களோ இதற்கு மாறாகக் கூடுதல் வருவாய் பெற்றன. 13ஆவது நிதிக் குழுவின் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த நிதியை விட 14ஆவது நிதிக் குழுவின் மூலம் 19.4 விழுக்காடு குறை வாகவே நிதி கிடைத்துள்ளது. இது எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியாகும். 1971ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை வெறும் 56.6 கோடியாகத் தான் இருந்திருக்கிறது.  1971ஆம் ஆண்டில் 4.11 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள் தொகை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011ஆம் ஆண்டில் 7.21 கோடியாக மட்டுமே அதிகரித்தது. தமிழ்நாட்டின் மக்கள் தொகை கடந்த நாற்பது ஆண்டுகளில் 75.1 விழுக்காடு மட்டுமே அதிகரித்தது. கேரளாவிலும் இந்த நாற்பது ஆண்டுகளில் 56.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை அதிகரித்தது. கேரளாவில் 1971ஆம் ஆண்டு 2.13 கோடியாக மக்கள் தொகை 2011ஆம் ஆண்டில் 3.34 கோடியாக அதிகரித்தது. ஆனால் மற்ற இந்திய மாநிலங்களில் மக்கள் தொகை பெருமளவு உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக காஷ்மீரில் 171.82 விழுக்காடு அதிகரித்துள்ளது. கோவாவில் 83.13 விழுக்காடும், மத்தியப் பிரதேசத்தில் 141.85 விழுக்காடும், மகாராஷ்டிராவில் 122.91 விழுக்காடும், ஜார்க்கண்டில் 131.71 விழுக்காடும், பஞ்சாப்பில் 104.44 விழுக்காடும், மணிப்பூரில் 153.54 விழுக்காடும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் இந்த நாற்பது ஆண்டுகளில் 100 விழுக்காட்டிற்கும் அதிகமாக மக்கள் தொகை வளர்ச்சியைக் கண்டுள்ளன. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நடுவண் அரசின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன.

குறிப்பாக மக்கள் தொகையைக் கட்டுப் படுத்த பெண் கல்வியை அதிகரிப்பதையே தமிழ்நாடும், கேரளாவும் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டுள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் கல்வி கற்ற பெண்களின் எண்ணிக்கை அகில இந்திய சராசரியை விட மிக அதிகமாகும். 2015-16ஆம் நிதியாண்டில் வெளியான தேசிய குடும்பநல சுகாதார ஆய்வறிக்கையின் படி 15 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட எழுத்தறிவு பெற்ற இந்தியப் பெண்களின் விகிதம் 68.4 விழுக்காடாகும். 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் 97.07 விழுக்காட்டினரும், கேரளாவில் 99.91 விழுக்காட்டினரும் எழுத்தறிவுப் பெற்றுள்ளனர். ஆனால் வட இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசத்தில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் இன்னமும் 22.39 விழுக்காட் டினரும், ஜம்மு காஷ்மீரில் 23.75 விழுக்காட் டினரும், உத்தரப் பிரதேசத்தில் 24.22 விழுக்காட் டினரும், ஜார்க்கண்டில் 28.64 விழுக்காட் டினரும், ராஜஸ்தானில் 28.7 விழுக்காட்டினரும், பீகாரில் 36.3 விழுக்காட்டினரும் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர்.

சர்வேதேச அளவில் எங்கெல்லாம் பெண்களின் படிப்பறிவு அதிகமாக இருக் கிறதோ அங்கெல்லாம் பெண்கள் கருவுறுதல் விகிதாச்சாரமும் குறைவாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமான முறையில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பெண்களின் படிப்பறிவு மிக அதிகமாக உள்ளது. இதனால் கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழகம் மற்றும் கேரளாவின் மக்கள் தொகை உயர்வு வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வட இந்திய மாநிலங்கள் பெண் கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காததால் அந்த மாநிலங் களின் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. பெண் கல்வியை அதிகரிக்க தமிழ்நாடு கடந்த முப்பது வருடங்களில் பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளது.  குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம் பள்ளி செல்லும் குழந்தைகள் இடை நிற்றலைக் வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

அதேபோல பெண் கல்வியை அதிகரிப்பதில் இருக்கும் மற்றொரு முக்கியக் காரணி, பெண்களின் மாதவிடாய் கால சுகாதார வசதிகளாகும். 2015-16 தேசிய குடும்பநல சுகாதார ஆய்வு, இந்தியாவில் 15-24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு  சராசரியாக 50 விழுக்காட்டிற்கு மேல் மாதவிடாய் கால சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்று கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பல உலக நாடுகளுக்கு இணையான மாதவிடாய் கால சுகாதார வசதிகளை 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வயதுக்குட்பட்ட பெண்களில் தமிழ் நாட்டில் 91.4 விழுக்காட்டினரும், கேரளாவில் 90 விழுக்காட்டினரும் மாதவிடாய் கால சுகாதார வசதிகளைப் பெற்றுள்ளனர். மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீசுகர், உத்தரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடு கூட மாதவிடாய் கால சுகாதார வசதிகள் கூட கிடைக்கவில்லை என்ற அவலநிலை தான் நிலவுகிறது. மோடி ஆண்ட குஜராத்தில் 60.3 விழுக்காட்டினருக்கும், ராஜஸ்தானில் 55.2 விழுக்காட்டினருக்கும், மகாராஷ்டிராவில் 66.1 விழுக்காட்டினருக்கும் மட்டுமே மேற்கண்ட வயதுப் பெண்களுக்கான மாதவிடாய் கால சுகாதார வசதிகள் கிடைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கான கழிப்பிட வசதிகள் தரமானதாக இருப்பதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பள்ளிகளில் தரமான கழிப்பிட வசதிகள் இல்லாததும் பல்வேறு வட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் இடை நிற்றலுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

இவ்வாறாக வட மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சமூக மேம்பாட்டு வளர்ச்சி என்பது லிபியா, மொராக்கோ, சூடான், சோமாலியா மற்றும் துனுசியா போன்ற சகாரா பாலைவன நாடுகளில் நிலவும் சூழ்நிலைகளைப் போல மிகவும் மோசமான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளன. ஆனால் தென் மாநிலங்களான கேரளாவும், தமிழ்நாடும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பில் (ஓ.இ.சி.டி.) உள்ள நாடுகளுக்கு இணையான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கொரியா சுவீடன் உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என 35 நாடுகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யில் 1968ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருபெரும் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றன. சமூக மேம்பாடு மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு போன்றவற்றில் இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களை ஒட்டுமொத்த இந்திய ஆட்சி அதிகாரத்தையும் மாறி மாறி கையில் வைத்திருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளால் கூட அளிக்க இயவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. வட மாநிலங்களைப் பொறுத்தவரை யில் பல்வேறு மாநிலங்களில் இந்த இரண்டு தேசிய கட்சிகளும் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகின்றன. ஆனால் ஒரு மாநிலத்தில் கூட தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் காணப்படும் சமூக மேம்பாடு வளர்ச்சியை இவர்களால் அளிக்க இயலவில்லை.

வட மாநிலங்கள் காணாத வளர்ச்சியை தமிழ்நாடு கண்டிருப்பதற்காக தமிழ்நாட்டை தண்டிப்பதைப் போல வரி வருவாய் பங்கீட்டைக் குறைத்து வருகிறது நடுவண் அரசு. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழ்நாட்டிற்கு கிடைத்த தண்டனையாகத் தான் இருக்கிறது இந்த வருவாய் இழப்பு. 2011 மக்கள் தொகை அடிப்படையில் வரி வருவாயை நிதிக் குழு நிர்ணயித்து வழங்குவதால், உரிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேம்படுத்த இயலாத வட மாநிலங்களுக்கு வருவாய் உயர்ந்துள்ளது. சிறப்பாகச் செயல்பட்ட தமிழ்நாட்டிற்குக் குறைந்துள்ளது. குறிப்பாகக் கோவா மாநிலம் 13ஆவது நிதிக் குழு நிர்ணயித்த வரி வருவாயை விட 2016-17ஆம் நிதியாண்டில் 42.11 விழுக்காடு கூடுதலாகப் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம் 6.01 விழுக்காடும், மகாராஷ்டிரா 6.19 விழுக்காடும், ஜார்க்கண்ட் 12.03 விழுக்காடும், சத்தீசுகர் 24.7 விழுக்காடும் கூடுதலாகப் பெற்றுள்ளன. தமிழ்நாடு 19.04 விழுக்காடு குறைவாகப் பெற்றுள்ளது. 10 புள்ளி அடிப்படையில் ஒதுக்கப்பட்ட போதே 19.04 விழுக்காடு (ரூ.6,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது என்றால், 15ஆவது நிதிக் குழு 27.5 புள்ளி எடையுடன் 2011 மக்கள் தொகையைக் கணக்கில் கொள்வதாக (1971 மக்கள் தொகையை முற்றிலும் நிராகரித்து) அறிவித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு மேலும் பலமடங்கு வருவாய் இழப்பு ஏற்படும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. 15ஆவது நிதிக் குழுவின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டுக்கு தோராயமாக 13ஆவது நிதிக் குழுவின் ஒதுக்கீட்டிலிருந்து சுமார் 70 விழுக்காடு வரை வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு இந்திய ஒன்றியம் இழைக்கும் மிகப்பெரிய அநீதியாகும்.

அண்மையில் தனக்குத் தானே பொது வாக்கெடுப்பு நடத்தித் தனி நாடக அறிவித்துக் கொண்ட கேட்டலோனியா, தனி நாடு முடிவிற்கு சென்றதற்கு அவர்கள் முன்வைத்த முக்கியக் காரணங்களில் ஒன்று வரி மேலாண்மையாகும். இப்போது இந்திய ஒன்றியத்திலும், தமிழ்நாடு இதுபோன்ற ஒரு மோசமான புறக்கணிப்பை  எதிர்கொண் டுள்ளது. ஜிஎஸ்டி, கல்வி உரிமைச் சட்டங்கள் என மாநில உரிமைகளைக் குறைத்து, ஒன்றிய அரசு தன் அதிகாரத்தை அதிகரித்துக் கொண்டும், மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைத்துக்கொண்டும் இருக்கிறது. மாநில சுயாட்சிக்கான குரல்கள் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகின்ற இம்முடிவுகள் தமிழ்நாடு இந்திய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதற்கான அர்த்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவைக்கு வித்திடுகிறது.

கட்டுரையாளர் : பத்திரிகையாளர்

 

நிமிர்வோம் பிப் 2018 இதழ்

You may also like...