அரசியல் சமூகத்திலிருந்து மதத்தை விலக்கி வைப்பதே மதச் சார்பின்மை சங்பரிவார் புரட்டுகளுக்கு மறுப்பு
இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளர் ஜவகர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர் ரொமிலா தாப்பர். சங்பரிவார் முன் வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு சரியான மறுப்புகளை முன் வைத்து ‘பிரன்ட்லைன்’ (செப்.18) ஆங்கில இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள்:
வரலாற்று விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ‘ஆரியர்கள்’ எனும் தலைப்பு தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆரியக் கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தையோ, இந்திய மண்ணில்தான் ஆரியர்கள் உதித்தார்களா? போன்ற கேள்விகளையோ யார் எழுப்பினாலும் உடனடியாகச் சமூக வலை தளங்களில் அவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான வரலாற்று விவாதங்களுக்கு இடமில்லாமல் போகிறது.
கலாச்சாரத் தேசியம் என்பதற்கு அர்த்தம், தேசிய மயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதுதானே? அதாவது, ஒரே ஒரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது எனச் சொல்வது தானே? என்று கேட்கிறார்கள்.
சமகாலப் பாரம்பரியம் எதுவும் அசலானது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றிய பாரம்பரியங்களில்கூட ஏதோ ஒரு கட்டத்தில் இடையூறு நிகழ்ந்துள்ளது.
ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் முதன் முறையாக இந்துக் கலாச்சாரத்தின் வேர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப் போது உதித்தது தான் மத தேசிய வாதம். அதிலிருந்து எழுந்ததுதான் ஆரியர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் எனும் கருத்தாக்கம். அதற்கு முன்புவரை ஒற்றைக் கலாச்சாரத்தைத் தேடும் முயற்சி நடைபெறவில்லை.
மத தேசியவாதம், கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை மறுத்தது. ஒரே ஒரு கலாச்சாரத்தைத் தேர்ந்தெடுத்து அதுவே தேசியக் கலாச்சாரம் என்று மகுடம் சூட்டியது.
ஒரு மதம், ஒரு கலாச்சாரம், ஒரு மொழி என ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே முன்னிறுத்துவதுதான் சமய தேசியவாதத்தின் முக்கிய அம்சமாகும். அரசியல் ஆதரவைத் திரட்டவே இத்தகைய முயற்சிகள் பெரும்பாலும் நடைபெறுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணம் இந்துத்துவம். பல ஆய்வாளர்கள் ஏற்கெனவே சொன்னது போல, இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றல்ல. இந்து என்பது மதம். ஆனால், இந்துத்துவம் என்பது அரசியல் சித்தாந்தம். இந்து மதத்தின் சில அம்சங்களை மட்டுமே தன்னகப்படுத்திக்கொண்ட நவீன சித்தாந்தம்தான் இந்துத்துவம். 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய இக்கருத்தியலின் குறிக்கோள் இந்து அரசாட்சியை நிறுவுவது. அதற்காக இந்துக்களைத் திரட்டுவது.
ஒரு மதத்திலிருந்து அரசியல் சித்தாந்தத்தைக் கட்டமைக்கும் போது, அம்மதத்தின் சாரத்தையே மாற்றி அமைப்பதும் உண்டு. இப்படித்தான் இந்துத்துவம் தேசத்தின் எல்லை, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைப் புனித நூல், ஒரே மூதாதையரின் பரம்பரை போன்ற சட்டகங்களை நிர்ணயித்தது. இவை அல்லாதவை அனைத்தும் அந்நியம் என்றது. சமூக மற்றும் அரசியல் அணி திரட்ட இது எளிய முறையாகும். இத்தகைய இந்துத்துவத்துக்கு நான் வைத்த பெயர் ‘ஆட்சிக் குழு இந்து மதம்’. (Syndicate Hinduism)
ஆதிக்கக் கலாச்சாரங்களை ஆதரிப்பவர்களுக்கு இந்தப் போக்கினால் சிக்கல் இல்லை. ஆனால், காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? பிற கலாச்சாரங்களின் தனித்துவத்தை அங்கீகரித்துத் தன்னுடன் அரவணைத்துச் செல்வது தானே தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்? அதிலும் தேசிய வாதம் நிறுவப்பட்ட காலகட்டத்தில் நியாயமான அங்கீகாரம் மறுக்கப்பட்ட பழங்குடியினர், தலித்துகள், நடுத்தர மக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர்கள் போன்றவர் களுக்கு இப்போது நியாயம் சேர்க்கப்பட வேண்டும். சமயச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவில், பன்முகத் தன்மையை இணைத்து வரலாற்றைப் பகிர்ந்தளிப்பதே சரியான தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்.
மத தேசியவாதத்துக்கும் மதச்சார்பற்ற தேசிய வாதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் மதச்சார்பின்மையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மதத்தினரும் ஒரே சமூகத்தில் கூடி வாழ்கின்றனர் என்பதால், அது மதச்சார்பற்ற சமூகம் ஆகிவிடாது. அனைத்து மதத்தினருக்கும் சமமான அந்த°து இங்கு உள்ளதா? மறுபுறம் மதச் சார்பின்மை என்றால் என்ன எனும் கேள்வி உள்ளது.
கத்தோலிக்க தேவாலயத்தின் இறையாட்சியைத் தகர்த்து, மக்களாட்சியைக் கோரியதுதான் ஐரோப்பாவில் மதச்சார்பின்மை. ஆனால், இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை தேவாலயத்தின் பிடியில் அரசு ஆட்டிவைக்கப்படவில்லை. இருந்த போதும் சமயச் சடங்குகள் வழியாகவும் சாதியப் படிநிலைகள் மூலமாகவும் மதம் கோலோச்சியது.
என்னைக் கேட்டால், அரசியல் மற்றும் சமூகத்திலிருந்து மதத்தைத் தள்ளிவைப்பதுதான் சரியான மதச்சார்பின்மையாகும்.என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு பெரும்பான்மைச் சமூகமோ, அடையாளமோ நிரந்தரமாக மேலாதிக்கம் செலுத்துவது நியாயமான ஜனநாயகம் அல்ல. அதேபோல, பெரும்பான்மை எனும் கருத்தியலை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. அது நெகிழ்வுத் தன்மை கொண்டது. அதிலும் மதசார்பற்ற சமூகத்தில் மேலாதிக்க மத அடையாளங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அமைதியைப் போதித்த காந்தியடிகள் எதற்காக போருக்கும் வன்முறைக்கும் ஆதரவளித்த பகவத் கீதையைத் தூக்கிப்பிடித்தார்? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
காந்தியின் எழுத்துக்களை மதிப்பிடும் அளவுக்கு அவரை ஆழமாக வாசித்ததில்லை. அஹிம்சையும் இம்சையும் வெவ்வேறு கோணங்களில் செயல்படு கின்றன என்பதே என்னுடைய பார்வை. உதாரணமாக, அசோகர் அஹிம்சையை முன்மொழிந்தாலும் அது கட்டுப்படுத்தப்பட்ட அஹிம்சை என்றே சொல்ல வேண்டும். தன் மகன்களும் பேரப் பிள்ளைகளும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். வன்முறையில் இறங்க வேண்டி வந்தால், கருணையோடு தண்டனை விதிப்பார்கள் என்றார் அசோகர். கீதையும் இதைத்தான் போதிக்கிறதா? நிச்சயமாக இல்லை. இதில் எனக்கு ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், அசோகரின் வழிகாட்டலால் காந்தி ஏன் ஈர்க்கப்படவில்லை?
ஒன்று புரிகிறது… கீதையை காந்தி பின்பற்ற முக்கியக் காரணம் வர்ணாசிரம தர்மம். ஏனெனில், அது சமூகக் கட்டமைப்பை அழுத்தமாகப் பேசியது. வர்ணா°ரம சட்ட திட்டங்களை மக்கள் மீறும்போது அவர்களை முறைப்படுத்தி வழிநடத்துவேன் என உறுதியளித்தது.
வர்ணாசிரம பாரம்பரியத்தைத் தக்கவைத்துக் கொண்டே சிக்கலுக்கு விடை தேடும் முயற்சியில், ஹரிஜன் என்னும் சொல்லை காந்தி பிரயோகித்தார். சாதிய அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்பட்டதை அவர் எதிர்த்தார். ஆனால், அதற்கு மாற்று என்ன என்பதே இன்றைக்குத் தொக்கி நிற்கும் கேள்வி?
காந்தியினுடைய நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவதற்குப் பதிலாக, காந்தியின் அணுகுமுறை சாதியப் படிநிலையைப் புரட்டிப்போட்டதா? அன்றைய சூழலுக்குச் சவால் விட்டதா என்ற கேள்விகளை எழுப்புவதுதான் நியாயம்.
பெரியார் முழக்கம் 04112015 இதழ்