அதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி: கேரள அரசு எதிர்ப்பு
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் உள்பட
5 விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ‘தாரை’ வார்த்துவிட்டது மோடி ஆட்சி. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு வழங்குவதை எதிர்த்து மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
“இந்த விமான நிலையம் கட்டுவதற்காக 635 ஏக்கர் நிலத்தை கேரள அரசு இலவசமாக வழங்கியிருக்கிறது. 2005ஆம் ஆண்டும் விமான நிலையத்தை விரிவாக்க மேலும் 23.57 ஏக்கர் நிலத்தை அளித்தோம்.
விமான நிலையத்தை அரசு தனியாருக்குத் தர முடிவெடுத்தால் மாநில அரசைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். மாநில அரசு இலவசமாக வழங்கிய நிலத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று மாநில அரசு ‘இந்திய விமான நிலையத்துக்கான குழுமத்துடன்’ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் துறையில் எவ்வித முன் அனுபவமும் இல்லாத அதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை கையளிப்பதை ஏற்க முடியாது. அப்படி விமான நிலையத்தை கை கழுவ நடுவண் ஆட்சி முடிவெடுத்துவிட்டால் தனியாருக்குக் கொடுக்காமல் கேரள மாநில தொழில்துறை வாரியத்திடம் ஒப்படையுங்கள். எங்கள் மாநில வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என்று கேரள முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
மோடியின் செல்லப் பிள்ளை அதானியை கொழுக்க வைத்துப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் ‘சுதேசிப் பற்றாளர்’ மோடி, கேரள அரசின் இந்த நியாயமான உரிமைக் குரலுக்கு என்ன பதில் கூறப் போகிறார்?
பெரியார் முழக்கம் 07032019 இதழ்