இலஞ்சம்-வணிகம்-அரசியல் செல்வாக்கு-ஊழல் ஆன்மீகத்தின் முகத்திரையைக் கிழித்த அத்திவரதர் தரிசனம்
அத்திவரதருக்கு திரண்ட பக்தர்கள் கூட்டம், தமிழ்நாட்டில் ஆன்மீக வளர்ச்சியைக் காட்டுவதாக பார்ப்பனர்கள், பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள். கூட்டம் கூடியது உண்மைதான். ஆனால், ஆன்மீகம் தன்னுடன் ஊழல்- வணிகம்- மோசடிகளையும் இணைத்துக் கொண்டு விட்டது என்பதும், கடவுள் மீது உண்மை யான பக்தியோ அதன் சக்தி தன்னைத் தண்டித்து விடும் என்ற அச்சமோ இல்லை என்பதையும் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது. அத்திவரதர் தரிசனம் வழியாக நடந்த மோசடி – ஊழல் – அரசியல் செல்வாக்கு – வணிகம் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது ‘ஜூவி’ கட்டுரை. கட்டுரையை படித்தாலே ஆன்மீகத்தின் முகத்திரை கிழிந்து விடும்.
“பெருமாளே… உனக்கு முன்னாடியே இவ்வளவு அநியாயமா?” அத்திவரதரை தரிசித்து விட்டு வந்த பெரும்பாலான பக்தர்களின் மனக் குமுறல், இதுவாகத்தான் இருந்தது. குறைந்தது ஐந்து மணி நேரமாவது நின்று, அடிபட்டு, மிதிபட்டு அத்திவரதரை நெருங்கும் பக்தர்கள், பெருமாளை தரிசிப்பதற்குள் நொந்து நூலாகி விட்டனர். அப்பாவி பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, பல்வேறு தரப்புகளிலும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்திருக் கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதர், 2019, ஜூன் 28-ம் தேதி அதிகாலை 2:30 மணிக்கு வெளியே கொண்டுவரப்பட்டார். ஜூலை 1ஆம் தேதியிலிருந்து வசந்த மண்டபத்தில் மக்களுக்கு தரிசனம் அளித்துவந்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வைபவம், இந்தமுறை மிகப்பெரிய அளவில் மக்கள் வரவேற்பைப் பெற்று, ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதற்குள்ளாக ஏகப்பட்ட குளறுபடிகள், காஞ்சிபுரம் நகரத்தையே மூழ்கடித்துவிட்டன. வி.வி.ஐ.பி வரிசையில் ரௌடி வரிச்சியூர் செல்வம் சுவாமியை தரிசித்ததில் தொடங்கி, காவல் ஆய்வாளர் ரமேஷை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யா கடுமையாகத் திட்டும் வீடியோ வரை பரபரப்பைப் பற்றவைத்தன. இப்படியான சூழலில்தான், அத்தி வரதர் வைபவத்தில் புழங்கும் தொகை எவ்வளவு, பக்தர்களின் பணத்தை எப்படியெல்லாம் கொள்ளை யடித்தார்கள் என்பதை அறிய, களம் இறங்கினோம்.
காஞ்சிபுரம் நகரவாசி ஒருவர் கூறுகையில், “வைபவத்தின் முதல் நாளான ஜூலை 1-ம் தேதி மட்டும் ஒரு லட்சம் பேர் தரிசித்த நிலையில், அடுத்தடுத்த நாள்களில் சராசரியாக 15,000 பேர் மட்டுமே தரிசித்தனர். இரண்டாவது வாரத்திலிருந்து தான் கூட்டம் அதிகரித்தது. லட்சக்கணக்கான மக்கள் குவிந்தார்கள். ஆனால், அதற்கேற்ற கழிவறை வசதியோ, குடிநீர் வசதியோகூட ஏற்படுத்தப்பட வில்லை. மக்களை மந்தையாக ஓர் இடத்தில் ஒன்றுசேர்த்து, ‘வலு இருப்பவர்கள் கோயிலுக்குச் செல்லுங்கள்’ என்பதுபோல் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டது. இந்த வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய 29 கோடி ரூபாயில் மாவட்ட நிர்வாகம் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை.
காஞ்சிபுரம் தற்காலிகப் பேருந்து நிலையங்களி லிருந்து, வரதராஜப்பெருமாள் கோயில் வரை ஆட்டோவில் செல்ல, 400 முதல் 800 ரூபாய் வரை வசூலித்தார்கள். பைக் டாக்ஸியில் பயணிக்க, 100 ரூபாய் ஆனது. திரும்பி வரவும் இதே அளவு பணத்தைப் பறித்தார்கள். மாவட்ட நிர்வாகம் அறிவித்த மினி பஸ் சேவையை கண்ணில்கூடப் பார்க்க முடிவில்லை. காஞ்சிபுரம் விடுதிகள் அனைத்தையும் கணக்கிட்டால், மொத்தம் 3,000 அறைகள் இருக்கின்றன. அறை வாடகை 10,000 ரூபாய்க்கு குறைவாக எங்குமே கிடைக்கவில்லை.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று முன்னணி ஜவுளி நிறுவனங்கள்தான் வி.ஐ.பி பாஸ்களை ஆயிரக் கணக்கில் விற்றுத் தீர்த்தன. `10,000 ரூபாய்க்கு புடவை வாங்கினால், பாஸ் இலவசம்’ என்ற மறைமுகச் சலுகையால், இந்த 47 நாளில் மட்டுமே 200 கோடிக்கும் குறையாமல் மூன்று நிறுவனங்களும் லாபம் பார்த்துவிட்டன. தனியார் நிறுவனங்களின் வசம் பாஸ் சென்றது எப்படி? இதுகுறித்து பலர் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நாளைக்கு நான்கு லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வந்தனர். வி.ஐ.பி பாஸ் மூலம் மட்டுமே சுமார் 50,000 பேர் தரிசிக்கிறார்கள். இந்த பாஸ்கள், பெரும்பாலும் கள்ளச்சந்தையில் 8,000 ரூபாய்க்குக் குறையாமல் விற்கப்பட்டவை. கணக்குப் போட்டால், தொகை தலைசுற்ற வைக்கிறது.
பொது தரிசன வழியைவிட்டால், ‘50 ரூபாய் சிறப்புக் கட்டண டிக்கெட்’ என்று முதலில் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பிறகு விரைவு தரிசன டிக்கெட்டாக மாற்றி, முதலில் 500 பேருக்கும், இறுதியாக 2,000 பேர் வரையிலும் வழங்கினர். நான்கு லட்சம் பேர் கூடும் வைபவத்துக்கு, வெறும் 2,000 பேருக்கு மட்டும் விரைவு தரிசன டிக்கெட் வரைமுறை ஏன் நிர்ணயிக்கப்பட்டது? ஆன்லைன் மூலமாகப் பதியப்படும் இந்த டிக்கெட்டுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. பொதுதரிசனத்தை விட்டால், கள்ளச்சந்தையில்தான் பாஸ் வாங்க வேண்டும் என்கிற நிலைமையை, மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே உருவாக்கியது. இதுதான் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு அஸ்திவாரம்.
வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., உபயதாரர் என மூன்று வகையான பாஸ்கள் விநியோகிக்கப்பட்டன. இவை ஒரு நாளைக்கு எவ்வளவு, யாருக்கு விநியோகிக்கப் பட்டன என்கிற கணக்கே இல்லை. ஒரு வி.ஐ.பி பாஸ் 10,000 ரூபாய் என்றாலும், அதை வாங்க வெளிமாநில பக்தர்கள் தயாராக இருந்தார்கள். இவர்களை வளைப்பதற்கு என்றே மாவட்ட அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பட்டர்கள் அனைவரும் புரோக்கர்களாக உலவினர். ஒரு நாளைக்கு பாஸ் விநியோகத்தில் மட்டுமே சுமார் 25 கோடி ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித் துள்ளனர் என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர். இதுதவிர, அய்ந்தாயிரம் வி.ஐ.பி பாஸ்கள், சென்னை யில் இருந்த இரண்டு முக்கியப் புள்ளிகள் மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெருக்கமானவர் களிடம் சென்றுவிட்டனவாம். இவை வெளிமாநில பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 47 நாள்களையும் கணக்கிட்டால், 1,175 கோடி ரூபாய் பாஸ் விற்றதிலேயே வருமானம் ஈட்டியுள்ளனர் என்கிறார்கள். முருகனின் பெயர் கொண்ட சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை அதிகாரி வாடகைக்கு எடுத்துள்ள வீட்டை சோதனையிட்டாலே, கோடிக்கணக்கில் லஞ்சப் பணத்தை அள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்ட தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே பணி, வி.ஐ.பி-களை கவனிப்பதுதான். ஜவுளிக்கடை அதிபர் தொடங்கி கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ-க்கள் வரை மாவட்ட நிர்வாகம் மூலம் தரிசனம் செய்தார்கள். இவர்களை, தாசில்தார்கள் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.
இவர்கள்தான் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், கோயிலுக்கு உள்ளே சில பட்டர்கள், இந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆட்டம் இன்னும் அதிகம். அத்திவரதருக்கு முன்னே அமர வைப்பதற்கு 50,000 ரூபாய், நிற்பதற்கு 30,000 ரூபாய், அத்திவரதர் கழுத்தில் உள்ள மாலைக்கு 20,000 ரூபாய், போட்டோ எடுத்துக்கொள்ள 10,000 ரூபாய் என, எல்லாவற்றிலும் வசூல் வேட்டையாடியதாக குற்றச்சாட்டு உள்ளது. பக்தர்கள் செல்லும் வரிசையில், போதிய அளவில் உண்டியல்கள் வைக்கப்படவில்லை. இதனால், காணிக்கையை பட்டர்கள் வைத்திருக்கும் தட்டில் மட்டுமே செலுத்தும்படி பார்த்துக் கொண்டார்கள். காணிக்கையாக 100 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரையில் தாராளமாகச் செலுத்தப்பட்டது. பல பக்தர்கள், நகைகளை வழங்கினர். அவையெல்லாம் பெருமாளுக்குச் சென்றனவா அல்லது பட்டர்களும் அதிகாரிகளும் பங்கு பிரித்துக்கொண்டார்களா?” என்று பொங்கினார் அந்த நகரவாசி.
கோயில் உபயதாரரான சந்தான கிருஷ்ணன் கூறுகையில், “என் தந்தை சண்முகப்பிள்ளை அறக்கட்டளை பெயரில், பிரமோற்சவத்தில் 6ஆம் நாள் உற்சவமான தங்க சப்பரம் வேணுகோபாலன் திருக்கோலம், மார்கழி பௌர்ணமி திருமஞ்சனம், சங்கராந்தி திருமஞ்சனம், கார்த்திகை அஸ்தம் நித்தியபடி, பங்குனி அஸ்தம் நித்தியபடி, ரதசப்தம் ஆஸ்தானம் ஆகிய உற்சவங்களுக்கு, கடந்த 30 ஆண்டு களாக பெருமாள் கைங்கரியம் செய்துவருகிறோம். அத்திவரதரை சேவிக்க, சிறப்பு தரிசனம் நுழைவுச் சீட்டு கேட்டு தேவஸ்தானத்தில் விண்ணப்பித்ததற்கு, மாவட்ட ஆட்சியரை அணுகும்படி கூறிவிட்டனர். அங்கு உள்ள அதிகாரிகளிடம் நடையாக நடந்தும் பலன் இல்லை. இதனால், ஜூலை 16ஆம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு மெயில் செய்தேன். அதற்கும் பதில் இல்லை. எனக்கு உபயதாரர் பாஸ்கூட அளிக்க வில்லை. ‘பெருமாள் கைங்கரியம் செய்து என்ன புண்ணியம்? ஒரு பாஸ்கூட வாங்க முடிய வில்லையே’ என்று சொந்தபந்தங்களின் ஏளனப் பேச்சுக்கு ஆளானதுதான் மிச்சம். எல்லாம் அந்தப் பெரு மாளுக்கே வெளிச்சம்!” என்றார் வேதனையுடன்.
காவல் ஆய்வாளரை தரக்குறைவாக விமர்சித்த குற்றச்சாட்டில், மாவட்ட ஆட்சியர்மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. ஆட்சியர் பொன்னய்யா மீது, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பலர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இராமேஸ்வரம் டவுன் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு, சி.எஸ்.ஆர் கொடுக்கப்பட்டுள்ளது. ட
பெரியார் முழக்கம் 22082019 இதழ்