அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்? கொளத்தூர் மணி
அரசியல் சட்ட எரிப்பு நாளில் காணொளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை.
தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கு சமூக மேம்பாட்டிற்கு காரணமாக இருந்த தந்தை பெரியார் எடுத்த போராட்டங்களில் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏறத்தாழ நாம் அறிய உலகில் எந்த நாட்டிலும் , அந்த நாட்டின் போராட்டங்களில் அரசியல் சட்டம் எரித்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அப்படி ஒரு போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அதற்கு என்ன காரணம் என்பதையும் அதைநோக்கி பெரியார் நகர்வதற்கான சூழலையும் சற்று நாம் பார்த்து விடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இந்தியாவில் பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த பொழுது ஈரோடு அளவில் இருந்த பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வந்து அதன் தலைவராக பணியாற்றிய ஆறாண்டு காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் போராடு பவர்களைப் பற்றி ஒரு கருத்து உருவாகிறது.
இந்திய விடுதலை போராட்டம் என்பதே பார்ப்பனர்கள் தாங்கள் இழந்துவிட்ட மேலாதிக்கத்தை, மேன்மையை மீண்டும் நிறுவிக் கொள்வதற்கான முயற்சி என்று தான் பெரியார் புரிந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு விடுதலை வருவதென்பது, இப்போது ஆங்கிலேய ஆட்சியில் கொஞ்சமேனும் சம உரிமை அனுபவித்துக் கொண்டிருக்கிற சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் எதிராக இருக்கும் என்பதாக பெரியார் கருதிக் கொண்டிருந்தார். விடுதலை வந்தபோதும், வெள்ளைக்காரன் கையிலிருந்து பார்ப்பன கொள்ளைக்காரன் கையில் மாற்றப்பட் டிருக்கிறது என்பதாகத் தான் கூறினார். அவர் எதிர் பார்த்ததைப் போன்று சில வருடங்களில் நடந்தது. அவருடைய முதன்மை இலக்கான ஜாதி ஒழிப்பில் இட ஒதுக்கீடு என்பதற்கும் அதற்கு முன் வகுப்புவாரி உரிமை என்று சொல்லப்பட்டதற்கும் மிகுந்த பொருத்தமுண்டு. சமூகத்தில் கல்வியிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் நீண்ட நெடுங்காலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்கும் அதன்வழியாக அரசு வேலைகளில் நுழைவதற்கும் அதனடிப்படையில் அதிகாரத்தில் நம் சமுதாயத்திற்கும் பங்கு உண்டு என்பதற்கு ஒரு வாய்ப்பாக கருதினார். அது நீதிக்கட்சி ஆட்சியில் 1921இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1922இல் உறுதி செய்யப்பட்டிருந்தாலும்கூட , 1929 இலிருந்து முழுமையாக நடைமுறைக்கு வந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாகாணப் பகுதிகளில் இருந்ததைப் போலவே 100 பணிகளும் பிரித்துக் கொடுக்கப்பட் டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்ததைப் போலவே சென்னை மாகாணத்திலும் இயங்கி வந்த மத்திய அரசு நிறுவனங்களிலும் வகுப்புவாரி உரிமை சிறப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தது. 1935 ஆம் ஆண்டு சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரி உரிமைச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு இயற்றி அதனடிப்படையில் சென்னை மாகாணத்தில் இயங்கி வருகிற மத்திய அரசு நிறுவனங்களில், அஞ்சல் துறையில், தொடர்வண்டித் துறையில், தமிழ்நாட்டில் இருந்ததைப் போலவே வகுப்புவாரி உரிமை முறையில் பணிகள் நியமிக்கப்பட்டன. 1936இலிருந்து நடைமுறையும் படுத்தப்பட்டது. பெரியார் அஞ்சியதைப் போல, 1947 ஆகஸ்டு 15 இந்தியாவிற்கு விடுதலை வந்ததாகச் சொன்னார்கள். 1947 செப்டம்பர் 30 ஆம் நாள் ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி, 1936ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்ததை சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட ஒன்றரை மாத காலத்தில் அனைத்தையும் இரத்து செய்தார்கள். அதுவே பெரியாருக்கு முதல் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால் அதே அரசியல் சட்டத்தை காரணம் காட்டி தமிழ்நாட்டில் இருந்துவந்த வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றமும் டெல்லி உச்சநீதிமன்றமும் தீர்ப்புகளை வழங்கின.
இதைப் பார்த்தவுடன் மீண்டும் ஓர் அதிர்ச்சிக்குள்ளான பெரியார், வடவர் ஆதிக்கத்தை எதிர்த்தும், மத்திய ஆட்சியிலுள்ள பார்ப்பன பனியாக்களின் அதிகாரத்திற்கு எதிராகவும் தன் போராட்டத்தை முன்னெடுக்க எண்ணிய அவர் முதலில், வடவர் கடைகளுக்கு எதிராக மறியல் என்று சென்னை ஆரியபவனுக்கு முன்னாலும், மிசன் சன்த் செல்லாராம் துணிக்கடைக்கு முன்னாலும் போராட்டத்தைப் பெரியார் தொடங்கினார். இப்படிப்பட்ட நிகழ்வு நடந்து கொண்டிருப்பதை ஒட்டியே தான், டிசம்பர் மாதமும் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார். வகுப்புரிமை மாநாட்டை நடத்தி அதனடிப்படையில் பெரும் போராட்டம் நடைபெற்று அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அதே நேரத்தில் இந்தி திணிப்பையும் மத்திய அரசு தொடங்கியிருந்தது. எனவே பெரியார் 1952 ஆகஸ்ட் மாதம், தொடர்ந்து 1953,1954 ஆகிய ஆண்டுகளிலும் இந்தி பெயர்ப் பலகை அழிப்பு போராட்டங்களை எடுத்து வந்தார். மற்றொரு பக்கம் வகுப்புவாரி உரிமை மீட்கப்பட் டிருந்தாலும் கூட, இவர்கள் தங்களுடைய ஆரிய பண்பாடுகளைத் திணிப்பதற்கு அப்போது ஆட்சியில் இருந்த இராஜாஜி செய்த முயற்சி தான் குலக்கல்வித் திட்டம். புதிய கல்வி கொள்கை என்று கொண்டு வந்தாலும், அதற்கு பெரியார் கொடுத்த பெயர் தான் குலக்கல்வித் திட்டம். ஒவ்வொரு பள்ளி மாணவனும் நண்பகலுக்கு முன் வரை கல்வியும் நண்பகலுக்கு மேல் தங்களுடைய குலத்தின் தொழிலையும் செய்ய வேண்டும் என்று கொண்டு வந்த சட்டம்.
மீண்டும் பழைய வர்ணாசிரம கொள்கை கொண்டு வரப்படுகிறது என்ற கோபம் பெரியாருக்கு வந்தது அதனடிப்படையில் இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கும், வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான அறிகுறியாய் இப்போது ஜனநாயக வழியில் வர்ணாசிரமத்தை நிலைநாட்டத் துடிக்கிற இராஜாஜிக்கும், அந்த அரசிற்கும் எதிராக ஓர் எச்சரிக்கை என்ற பெயரால் அவர், அடையாளமாக வர்ணாசிரமத்தை காப்பாற்றுகிற இந்து மதத்திற்கும், வடவர் ஆதிக்கத்திற்கும் எதிராக விநாயகர் சிலை உடைப்பு போராட்டத்தையும், புத்தர் பிறந்தநாள் விழாவில் அறிவித்து அந்த போராட்டமும் ஒரு பக்கம் நடந்தது.
மற்றொரு பக்கம் இராமர் பட எரிப்புப் போராட்டம், தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம். 1952 ஆம் ஆண்டு அறிவித்தார், “இப்படியே தொடர்ந்து இந்தியை திணிக்கும் முயற்சியும், வர்ணாசிரம சமுதாயத்தை படைக்கும் முயற்சியும் தொடருமேயானால் அரசியல் சட்டத்தை எரிக்க நான் தயங்கமாட்டேன்” என்று ஓர் தலையங்கத்தில் பெரியார் எழுதினார்.
அதற்கு ஓராண்டு கழித்து 1953 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஓர் விவாதத்தில் “அரசியல் சட்டத்தை எழுதியது நானாக இருக்கலாம். ஆனால் அதை எரிக்கப்போகும் முதல் ஆளாகவும் நானாக இருப்பேன்” என்று அறிவித்தார். அரசியல் சட்டத்தை எரிப்பது எதனடிப்படையில்? ஜாதியை பாதுகாக்கும் அரசியல் பிரிவுகளை எரிக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். அவை எந்தெந்த பிரிவுகள் என்று பார்க்கிற போது குறிப்பாக “பழக்க வழக்கங்கள்” என்ற பிரிவு அரசியல் சட்டத்தில் வலிமையாக இடம் பெற்றிருப்பது பெரியாருக்கு சட்ட எதிர்ப்பைத் தூண்டியது.
பெரியார் இதை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்து வந்து கொண்டிருந்தார். 1929 ஆம் ஆண்டு சென்னை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற ஆதி திராவிடர்கள் மாநாட்டு சொற்பொழிவில் கூறுகிறார். “இதுவரை பார்ப்பனர்கள் நம்மை ஒடுக்குவதற்கு கடவுளைக் காட்டினார்கள், மதத்தைக் காட்டினார்கள், வேதத்தைக் காட்டினார்கள், சாஸ்திரத்தைக் காட்டினார்கள் இப்போது பழக்க வழக்கம் என்ற ஒன்றை புதிதாக கொண்டு வந்து வைக்கிறார்கள் நாம் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அந்த மாநாட்டு உரையில் கூறுகிறார். அடுத்து 1931ஆம் ஆண்டு கராச்சியில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடுகிறது. அந்த மாநாட்டிற்கு முன் மோதிலால் நேரு தலைமையில், நேரு குழுவை அமைத்திருந்தார்கள். விடுதலை பெற்ற இந்தியாவில் ஜீவாதார உரிமை, பிரஜா உரிமை எப்படி இருக்கும், சுதந்திர இந்தியாவில் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் எப்படி இருக்கும் அதாவது சட்டம் எப்படி இருக்கும் என்பதை அறிக்கையாக அந்தக் குழு கராச்சி மாநாட்டில் முன் வைத்தது. இந்த கராச்சி மாநாட்டில் முன் வைக்கப்பட்ட ‘பிரஜா உரிமை திட்டம்’ என்பது மதச் சார்பின்மைக்கு பதிலாக மத நடுநிலைமை என்று இருந்தது. ஒவ்வொரு தனி மனிதனின் நம்பிக்கைகளும், மொழியும் பாதுகாக்கப்படும் என்று குறிக்கப்பட் டிருந்தது. பெரியார், ‘பழக்க வழக்கம்’ சட்டப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுவதை ஜாதி தீண்டாமையை வைத்திருப்பதற்கான முயற்சியாகத் தான் பார்த்தார். மாநாடு முடிந்த உடனேயே
‘குடி அரசு’ ஏட்டில் ‘கராச்சி மாநாடு’ என்ற தலைப்பில் மூன்று வாரம் தலையங்கம் எழுதினார்.
இவர்கள் கொண்டு வந்திருக்கின்ற இந்த பிரஜா உரிமை (அடிப்படை உரிமை) திட்டம் என்பது, பார்ப்பனர்களின் பண்பாடான ஜாதிய வர்ணா சிரமத்தை நிலை நாட்டிக் கொள்வதற்கு, மத நடுநிலைமை என்ற பெயரால் இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் புரிந்து கொண்டிருந்தார். அதற்கு எதிராக 1931 ஆம் ஆண்டே ஆகஸ்டு மாதத்தில் விருதுநகர் மாநாட்டைக் கூட்டி அதில் இதற்கு எதிரான தீர்மானங்களை பெரியார் நிறைவேற்றினார். ஆக பெரியாரைப் பொருத்தவரை பழக்க வழக்கம் என்ற சொல் மிகவும் ஆபத்தான சொல் அந்த சொல்லைப் பயன்படுத்தித் தான் ஜாதியை நிலைநாட்டப் பார்க்கிறார்கள். ஜாதிக்கு பாதுகாப்பு வழங்கப்படு கிறது என்பது தான் அவருடைய கருத்தாக இருந்தது. இன்றைக்கு கூட, தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும், அதற்கான பயிற்சி என அனைத்தும் பெற்ற முடிந்த நிலையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்கிறது, ‘பழக்க வழக்கத்தை மாற்றியமைக்க முடியாது எனவே இந்த சட்டம் செல்லாது’ என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பினை சமீபத்தில் வழங்கியது.
பழக்க வழக்கம் என்பதற்கு ஆங்கிலேய ஆட்சியில் ‘பிரிவி கவுன்சிலில்’ கூட, எழுதப்பட்ட சட்டங்களை விட நடைமுறையில் இருக்கும் பழக்க வழக்கங்கள் தான் வலுவானவை என்பதாக ஒரு தீர்ப்பை பெற்று வைத்திருந்தனர். அரசியல் சட்டத்தின் 13 ஆவது பிரிவு சட்டம் குறித்த விளக்கம் தருகிறபோது, ‘நாடாளு மன்றம், சட்டமன்றம். இயற்றிய சட்டங்கள், அரசினுடைய ஆணைகள், அரசினுடைய சுற்றறிக்கைகள், அரசினுடைய குறிப்பாணைகள், மட்டுமில்லாமல் பழக்க வழக்கங்களுக்கும் சட்ட வலிமை உண்டு’ என்று அந்த சட்டம் விளக்கம் கூறுகிறது. அதே போல 372 என்கிற பிரிவு ‘ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறவை குறிப்பாக உரிய அதிகாரம் பெற்ற அமைப்பால் மாற்றியமைக்கப்பட்டால் ஒழிய அனைத்தும் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவே கருதப்படும் என்று கூறுகிறது. ஆக பழக்க வழக்கம் என்பது இந்த ஜாதிய பழக்க வழக்கங்கள் உட்பட சட்டப்படி ஏற்றுக் கொள்ளப் படும் என்பதாக பெரியார் கருதினார். எனவே அதை மாற்றியமைக்க ஒரே வழியாக அரசியல் சட்டத்தில் 368 என்ற பிரிவு இருந்தது. அந்த பிரிவு ‘சட்டமன்ற, நாடாளுமன்ற அவையில் கூடியிருக்கிற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு வாக்களித்தால் மட்டுமே திருத்த முடியும்’ என்று கூறுகிறது. தென்னிந்தியர்கள் அனைவரும் சேர்ந்தாலும் 120 உறுப்பினர்கள்தான் இருக்கிறோம். ஆனால், 5இல் ஒன்று அல்லது நான்கில் ஒன்றாக இருக்கும் நாம் எப்படி மூன்றில் இரண்டு பங்கு பெற்று எப்படி நமக்கான விதிகளை கொண்டு வர முடியும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. மேலும், மத பாதுகாப்பிற்கு உண்டான 25 போன்ற பிரிவுகளும் ஜாதியைக் காப்பாற்றுகின்றன என்று கருதினார். எனவே அதை எரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தொடர்ந்து இருந்திருக்கிறது.
1952இல் அவர் சட்டத்தை எரிப்பதாக அறிவித் திருந்தாலும், அதற்குப் பின்னால் பல நிகழ்வுகள் தொடர்ந்து இந்த ஆட்சியின் மீது அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை இழக்கச் செய்திருக் கிறது. குறிப்பாக விடுதலை பெற்ற நாட்டில், அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து விட்ட பின்னால் தனக்கு சமமாக உட்கார்ந்து பேசினார் என்பதற்காகவே இமானுவேல்சேகரன் அவர்கள் 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொலை செய்யப்படுகிறார். அது மீண்டும் பெரியாரின் மனதை அதிரச் செய்தது. இது குறித்து 2.11.1957ஆம் ஆண்டு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் ஒரு பேட்டியில், ‘இதற்கு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே வீதியில் இறங்கி போராடுவேன்’ என்று கூறினார். அந்த அளவிற்கு பெரியார் மனதில் ஒரு தாக்கத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தியிருக்கிறது. இவையனைத்தும் சேர்த்துத் தான் பெரியார் ஒரு மாநாட்டை கூட்டுகிறார். பெரியாரியத் தொண்டர்கள் அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்கிறார்கள். பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கும் நோக்கத்தோடும், பெரியாருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடும் நோக்கத்தோடும் தஞ்சையில் ஒரு மாநாட்டைக் கூட்டுகிறார்கள். 1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தஞ்சையில் அந்த சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. எடைக்கு எடை வெள்ளி வழங்கப்படுகிறது. இம்மாநாடு தான் தமிழ்நாட்டில் அதிகளவில் மக்கள் கூடிய நிகழ்வு என்று பதிவாகியுள்ளது. 3 இலட்சம் மக்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடுகிறார்கள்.
பெரியார் முழக்கம் 05122019 இதழ்