அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!
முன்னேறிய ஜாதிப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது நடுவண் ஆட்சி; ஆனால் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களாக பார்ப்பனர் உயர்ஜாதியினர் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் இருப்பதை அண்மை யில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இவை:
இந்தியன் ‘இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட்’ (அய்.அய்.எம்.) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் 784 பேராசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இதில் ‘தலித்’ பிரிவைச் சார்ந்தவர்கள்
8 பேர் மட்டுமே. பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர் – 2 பேர் மட்டுமே. பிற்படுத்தப்பட் டோர் 784 பதவிகளில் 27 பேர் மட்டுமே. மொத்த பேராசிரியர் பதவிகளில் தலித், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம்
6 சதவீதம் தான். 95 சதவீதம் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
அய்.அய்.டி.யில் என்ன நிலை?
இது இன்னும் மோசம். நடுவண் ஆட்சி 8856 பேராசிரியர் பதவிகளை நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இதில் திறந்த போட்டியில் 4876 பேர் இடம் பெற்றுள்ளனர்.
8856 பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 329 பேர். தலித் 149 பேர்; பழங்குடியினர் 21 பேர்.
மொத்தமுள்ள 23 அய்.அய்.டி.களில் பட்டியல் இனப் பிரிவினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட் டோர் அனைவரும் சேர்ந்து பெற்றிருப்பது 9 சதவீத இடங்கள் மட்டுமே!
சில அய்.அய்.டி. – அய்.அய்.எம். நிறுவனங் களில் ஒருவர்கூட பட்டியல் இனப் பிரிவைச் சார்ந்தவரோ, பிற்படுத்தப்பட்டவரோ இல்லாமல் இருக்கும் அவலம் நீடிக்கிறது.
மும்பை, கான்பூர், காரக்பூர் உள்ளிட்ட 15 அய்.அய்.டி.களில் ஒரு பழங்குடிப் பிரிவினர் கூட பேராசிரியராக இல்லை. கோவா, தார்வார்டு அய்.அய்.டி.களில் ஒரு பிற்படுத்தப் பட்டவர்கூட இல்லை.
அண்மையில் சுயாட்சி பெற்ற அய்.அய்.எம். நிறுவனங்களில் 16இல் ஒரு பழங்குடியினர்கூட இல்லை. 16 நிறுவனங் களில் ஒரு தலித் கூட இல்லை. 7 அய்.அய்.எம். நிறுவனங்களில் ஒரு பிற்படுத்தவர்கூட இல்லை.
18 அய்.அய்.எம். நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பெற்றிருக்கும் பதவிகள் 1.5 சதவீதம் மட்டுமே.
மத்திய மனித வளத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் இது பற்றிக் கூறுகையில், “பணிக்கு விண்ணப்பிக்கும் தொடக்க நிலையில் மட்டுமே, இடஒதுக்கீட்டுப் பிரிவினரைச் சேர்த்தால்தான் உண்டு. உரிய விண்ணப்பதாரர்கள் கிடைக்கா விட்டால் பிறகு இடஒதுக்கீட்டுப் பிரிவை முழுமை யாக்கும் முயற்சிகளில் ஈடுபட மாட்டோம். வேறு சமூகத்தவரைக் கொண்டு நிரப்பி விடுவோம்” என்று ஆணவத்துடன் பதிலளித் துள்ளார்.
“உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்று வதற்காக நிர்ணயிக்கப்பட்ட தகுதிக்கு உரிய விண்ணப்பதாரர்கள் இடஒதுக்கீட்டுப் பிரிவு களில் இல்லை. எனவேதான் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை” என்று அய்.அய்.டி. தரப்பில் உள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தியாவுக்குள் செயல்படும் அய்.அய்.டி. களில் பணியாற்றும் தகுதி இங்கே உள்ள பெரும்பான்மை மக்களுக்கு இல்லை என்று இவர்கள் வாதிடுவதன் வழியாக பெரும் பான்மை சமூகத்தை அவமதிக்கிறார்கள்.
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பெரும் பகுதியை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் ‘தகுதி திறமை’யால் நாட்டுக்கு செய்த பங்களிப்பு என்ன?
அயல்நாட்டுக்கு சேவகம் செய்ய ஓடுவது தான்!
இடஒதுக்கீட்டுப் பிரிவில் தகுதியான வர்கள் கிடைக்காத நிலையில் உயர்ஜாதிப் பிரிவிலிருந்து இடஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்று அய்.அய்.டி., அய்.அய்.எம். நிறுவனங் களுக்காக பார்ப்பன அதிகார வர்க்கம் தனியாக விதியை வகுத்து வைத்திருக்கிறது. அதுதான் இவை எல்லாவற்றுக்கும் காரணம்.
இது தவிர பல்கலைக்கழக நிதிக் குழு பேராசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீட்டை மொத்தப் பணியிடங் களின் அடிப்படையில் பின்பற்றாமல் துறை வாரியாக நியமிக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனால் இடஒதுக்கீடு மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி உலகத்தில் தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் நேரடியாகவே பேராசிரியர்களாக நியமிக்க லாம் என்ற உத்தரவையும் பல்கலைக்கழக நிதிக்குழு பிறப்பித்திருக்கிறது.
இது வரை இப்படி உலக பல்கலைக்கழகங் களில் படித்த ஆய்வாளர்கள் இந்தியாவில் பணிக்கு சேர மேற்பட்டப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தகுதித் தேர்வான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனைகள் இருந்தன. இப்போது அவை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. எழுத்துப்பூர்வ தேர்வு ஏதும் எழுதத் தேவையில்லை என்று அறிவித்து விட்டார்கள்.
மோடி ஆட்சி உயர்கல்வி நிறுவனங்களில் சமூக நீதியைக் குழித் தோண்டி புதைக்கும் நடவடிக்கைகளை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக மேற்கொண்டு வருகிறது.
7 தமிழர் விடுதலை: மார்ச் 9 மனித சங்கிலி போராட்டத்தில் கழகத் தோழர்களே,
குடும்பம் குடும்பமாக பங்கேற்பீர்!
7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி, மார்ச் 9 ஆம் தேதி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுவையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடக்க இருக்கிறது. தமிழக அமைச்சரவை முடிவுக்குப் பிறகு ஒப்புதல் தர வேண்டிய தமிழக ஆளுனர் நெறிமுறைகளுக்கு மாறாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நசுக்கி வருவதைக் கண்டித்து நடக்கும் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பெருந்திரளாக குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெரியார் முழக்கம் 28022019 இதழ்