சங்கராபுரம் ஆணவப் படுகொலை கண்டனக் கூட்டத்தில் ஜாதி மறுப்புத் திருமணம்
பெரியார் அம்பேத்கர் நினைவு நாட்களை முன்னிட்டு “தமிழக அரசே ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்று” என்கிற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் பாக்கம் (சங்கராபுரம்) கிராமத் தில் 19.12.2018
(தி.பி. 2049 புதன்) அன்று மாலை 5 மணி அளவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
“அன்னை மணியம்மை” இசைக் குழுவினரின் பறை இசை மற்றும் பகுத்தறிவு சாதி ஒழிப்பு பாடல்களுடன் கூட்டம் தொடங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் நாகராசன், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை பகுத்தறிவுப் பாடல்களை பாடினர்.
கூட்டத்திற்கு இரா.துளசிராசா தலைமை வகித்தார். பெரியார் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தனிமொழி, சோபனா, முத்துலட்சுமி, செந்தாமரை, சத்யா மற்றும் இராமச்சந்திரன், நீதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரத்தினசாமி, துரைசாமி, அய்யனார், இராமர்,பெரியார் பாரதிதாசன் ஆகியோர் ஆணவக் கொலைகளின் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் சாதி மறுப்பு திருமணமும் நடைபெற்றது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் நூரோலையைச் சேர்ந்த ரஷ்யா ஆகிய இணையர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். இணையர்கள் “புரட்சி பெரியார் முழக்கம்” வார ஏட்டின் வளர்ச்சி நிதியாக
ரூ. 2000 வழங்கினர். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். இராசீவ்காந்தி நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 07022019 இதழ்