நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றி விட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

“தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையுதோ இல்லையோ நிகழ்ச்சியின் பெயரைக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி “மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக் கின்றனர். இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், “கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’ என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர கலகம் செய்தனர். “எக்ஸாம் ஸ்ட்ரசுக்கா நடத்துறியா? எலெக்சன் ஓட்டுக்கா நடத்துறியா?’’ என்ற முழக்கங்களை எழுப்பினர். முற்போக்கு மாணவர்களுக்கு ஆதரவாக, கூடியிருந்த மாணவர்கள் எழுப்பிய கரவொலியும் விசில் சத்தமும் காதை பிளந்தது. மோடியின் நேரலை நிகழ்வும் அதோடு நிறுத்தப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு கலைந்து சென்றனர்.

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...