குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

ஏற்கனவே 21.01.2019 அன்று, கொளத்தூர் மணி மற்றும் கோவை இராமகிருட்டிணன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது ஆகவே யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பல ஆவணங்களையும், உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் காரணம் காட்டி வாதிட்டார். மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்கள் சார்பாக வழக்கறிஞர் திரு வீரசேகரன் ஆஜராகி இரண்டு புதிய ஆவணங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். அதில் ஒரு ஆவணம் வரும் 31.01.2019 அன்று கோவையில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் மூவரும் அதாவது திரு கி.வீரமணி, திரு கொளத்தூர் மணி மற்றும் திரு இராமகிருட்டிணன் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள், அதற்கான அழைப்பிதழ் என்றும் மற்றொன்று மேற்படி அழைப்பிதழ் விடுதலை பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி உள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் மேற்படி மூவரும் ஒன்றாக பங்கேற்கும் இரண்டாவது நிகழ்ச்சி இது என்றும், வழக்கு விசாரணையில் சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதி அவர்கள் மேற்படி விளக்கத்தினை காரணம் காட்டி ஏன் உங்களுக்குள் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்று வழக்கறிஞர் துரைசாமியை பார்த்து கேட்டார். அதற்கு வழக்கறிஞர் துரைசாமி இந்த வழக்கை நாங்கள் தாக்கல் செய்யவில்லை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பாக திரு.கி.வீரமணி அவர்கள் தான் தாக்கல் செய்தார் என்றும் அவர்கள் தான் வழக்கை வாபஸ் பெறவேண்டும் என்றும், அப்படி பெற்றுக் கொண்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும், நாங்கள் கூட வழக்கிற்கு ஆன நீதிமன்ற செலவை(cost) கேட்க மாட்டோம் என்று தெரிவித்தார். நீதிபதி அவர்கள் திரு. வீரமணி தரப்பு வழக்கறிஞரிடம் இதற்கு பதில் கேட்டபோது, வழக்கை வாபஸ் பெறுவது என்பது உடனடியாக தீர்மானிக்கக்கூடிய விஷயமல்ல சற்று கால அவகாசம் தேவைப்படும் (it will take time) என்று திரு.கி.வீரமணி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு மாண்புமிகு நீதிபதி M.சுந்தர் அவர்கள் பெருந்தன்மையுடன் “you all stands in the same platform, so you can decide your issues in your good offices” உங்கள் கையில் முடிவு உள்ளது, நல்ல முடிவுடன் வாருங்கள் என்று கூறி தனிப்பட்ட உத்திரவு எதுவும் பிறப்பிக்காமல் நான்கு வார கால அவகாசம் அளித்துள்ளார்.

You may also like...