பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (4) கருஞ்சட்டைப் படைக்கு விதித்தத் தடை
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து.
1945ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி திருச்சி புத்தூர் மைதானத்தில் 17ஆவது தென்னிந்திய நல உரிமைச் சங்க (நீதிக் கட்சி) மாநாடு பெரியார் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் இது நீதிக்கட்சியின் 17ஆவது மாநாடாக நடைபெற்றது. நீதிக் கட்சியின் ‘தராசுக் கொடியே’ மாநாட்டிலும் ஏற்றப்பட்டது. ‘தராசுக் கொடி’ சமநீதி தத்துவத்தைக் கொண் டிருந்தாலும் புரட்சிக்கான அடையாளமாக இல்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டு, அதற்குப் பிறகு கொடி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, திராவிடர் கழகக் கொடி உருவாக்கப்பட்டது. அடுத்த நாள் செப். 20ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் 4ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. அண்ணா மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவர். அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சிறப்புரை யாற்றினார். எம்.ஆர். ராதாவின் நாடகம் நடந்தது. மாநாட்டையொட்டி திருச்சியில் நடந்த ஊர்வலத்தை திட்டமிட்ட பாதையில் செல்ல காவல்துறை அனுமதி மறுத்து, வேறு வழியில் போகுமாறு கூறியது. தோழர்கள் கொதித்தெழுந்தனர். பெரியார், தோழர்களிடம், ‘அரசு சொல்லும் வழியிலேயே போவோம்’ என்று சமாதானப்படுத்தினார்.
இதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு புதுவையில் 1947 ஜூலையில் புரட்சிக் கவிஞர் பாரதாசன் ஏற்பாடு செய்த திராவிடர் கழக தொடக்க விழாவிலும் பெரியார் உரை நிகழ்த்தியவுடன் காங்கிரசார் வன்முறையில் இறங்கி கழகக் கொடி மரங்களை வெட்டி வீழ்த்தி கலவரம் செய்தனர். பெரியாரை – ஒரு ரிக்ஷாவில் ஏற்றிப் பாதுகாப்பாக கழகத் தோழர் ராமலிங்கம் என்பவர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். கூட்டத்தினரிடம் சிக்கிக் கொண்ட கலைஞர் கருணாநிதி, காஞ்சி கல்யாணசுந்தரம் தாக்கப்பட்டனர்.
டிசம்பர் 23, 2018 திருச்சிப் பேரணிக்காக சில பாடல்கள் முகநூல்களில் பதிவிடப்பட்டது போல் 1945இல் நடந்த திருச்சி மாநாட்டுக்காக பென்னாகரம் நடேசேன் என்ற கழகத் தோழர் ஒரு பாடலை இயற்றிக் கொண்டு வந்திருந்தார். ‘குடிஅரசு’ ஏட்டில் மக்கள் மெட்டமைத்துப் பாடக் கூடிய பல பிரச்சாரப் பாடல்களை எழுதியவர் பென்னாகரம் நடேசன். “இன்னும் என்ன செய்யப் போறீங்க? சட்டசபையை எந்த முறையில் நடத்தப் போறீங்க? சொல்லுங்க நீங்க?” என்பதே இப்பாடல். அந்தப் பாடலின் சந்தம் பெரியாரை மிகவும் கவர்ந்து விட்டது. பெரியாரே மெட்டமைத்துப் பாடிப் பார்த்தார். பாடல் நன்றாக வந்தவுடன் மகிழ்ச்சி அடைந்து, அந்தப் பாடலை 10,000 பிரதிகள் அச்சிட்டு திருச்சி மாநாட்டில் பரப்பினார். அதே திருச்சி மாநாடு திராவிடர் கழகத்துக்கு பெரியார் தான் இனி நிரந்தரத் தலைவர் என்று முடிவு செய்தது. அதைத் தீர்மானமாகவும் நிறைவேற்றியது. அதே திருச்சி மாநாட்டில் தான் திராவிடர் விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத் தேவை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
பெரியார் திருச்சியி லிருந்து ஈரோடு திரும்பியதும் இது குறித்து தீவிரமாக சிந்தித்து, ‘கருப்புச் சட்டைப் படை அமைப்பு’ என்பதாக ஒரு அறிவிப்பை 1945 செப்டம்பர் 29ஆம் நாள் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டார். ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் தற்காலிக அமைப்பாளர்கள் என்றும் அறிவித்தார். கருஞ்சட்டைப் படையின் முதல் தொண்டராக கலைஞர் கருணாநிதி தன்னை ஈரோட்டில் பதிவு செய்து கொண்டார்.
நாடெங்கும் கருஞ்சட்டை அணிவோர் எண்ணிக்கை அதிகரித்தது. மதுரையில் கருஞ் சட்டைப் படையின் முதலாவது மாநில மாநாடு 1946 மே மாதம் 11, 12 நாட்களில் மதுரையில் கூடியது. மாநாட்டின் தலைவர் பெரியார்; திறப்பாளர் அண்ணா; எம்.ஆர். ராதாவின் ‘போர்வாள்’ நாடகமும் அண்ணாவின் ‘அவன் பித்தனா’ நாடகமும் ஏற்பாடாகியிருந்தது.
மதுரை வைகை ஆற்று மணற்பரப்பில் வேயப்பட் டிருந்த மாநாட்டுப் பந்தலுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். கழகத் தோழர்கள் இல்லங்கள், கழக அலுவலகங்கள் சோதனைக்கு உள்ளாயின. காலிகள் வன்முறை தாக்குதலில் இறங்கினர். தமிழகம் முழுதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு கழகக் கொடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. மதுரை வைத்தியநாத அய்யர் என்ற தேசியப் பார்ப்பனர், இந்த வன்முறையைத் திட்டமிட்டு நடத்தினார்.
அப்போது ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) முதல்வர். காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பார்ப்பன ஏடுகள் கருஞ் சட்டைப் படைக்கும் பெரியார் இயக்கத்துக்கும் எதிராக எழுதி அரசை தூண்டி விட்டன. திராவிடர் கழகத்தின்மீது அரசு அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. கிரிமினல் சட்டத் திருத்தம் 15ஆவது விதியின் கீழ் கருப்புச் சட்டைப் படைக்கு 1948 மார்ச் 26ஆம் தேதி கருஞ் சட்டைப் படையை ஓமந்தூரார் ஆட்சியில் உள்துறை அமைச்ச ராக இருந்த சுப்பராயன் தடை செய்தார். “என்னை அழிக்க நினைத்தால் அது என் அழிவல்ல பிராமண அழிவேயாகும்” என்று பெரியார் அறிக்கை விடுத்தார் (27.3.1948 ‘குடிஅரசு’).
பெரியார் அறிக்கை
கருஞ்சட்டைப் படைக்கு தடை விதித்தவுடன் பெரியார் ஒரு அறிக்கை விடுத்தார். 11.3.1948 ‘விடுதலை’யில் வெளி வந்த அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:
கறுப்புச் சட்டையை நம் இயக்கச் சின்னமாக்கி, சிலருக்கு அதை சில சமயங்களுக்கு அவசிய உடையாக்கிவிட்டு, திராவிடர்கள் யாவரும் பிறவி இழிவுக்காக அவமானப்படும், துக்கப் படும் அறிகுறியாக திராவிடர் கழகத் தோழர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் அனைவரும் கறுஞ்சட்டை அணிந்து கொள்ள வேண்டு மென்று வேண்டுகோள் செய்தோம்.
சட்டத்தில், சாஸ்திரத்தில், சம்பிரதாயப் பழக்க வழக்கத்தில், கோயில் முறையில், சாதி முறையில் நமக்கு இருந்துவரும் இழிவை எடுத்துக்காட்டினோம். அதன் அறிகுறிதான் கறுப்பென்றோம். அந்த இழிவு அழிக்க முயற்சி எடுத்துக்கொள்ளத் தீர்மானித்து விட்டோம் என்பதைக் காட்ட கறுஞ்சட்டை அணியுங்கள் என்றோம். யாராவது, ஏனப்பா கறுஞ்சட்டை அணிந்து கொள்கிறீர்கள்? என்று கேட்டால், நான் என்னமோ சட்டப்படி, சாஸ்திரப்படி சூத்திரனாம்; பார்ப்பானின் தாசி மகனாம்; அப்படி இருக்க எனக்கு இஷ்டமில்லை. அது எனக்கு அவமானமாக, துக்ககரமானதாக இருக்கிறது. அந்த இழிவை உணர்ந்திருக்கிறேன். அதைப் போக்கிக் கொள்ள முயற்சிப்பேன் என்பதன் அறிகுறியாக இதை அணிந்து கொள் கிறேன்; உனக்கும் அவமானமாயிருந்தால் அணிந்து கொள்; அப்படி உனக்கு மானமில்லை யானால் கறுப்புச் சட்டை அணிந்து கொள்ள வேண்டாம் என்று பதில் கூறும்படியும் தெரிவித்தோம்.
யாராவது, என்னடா, இழவுக்குப் போகின்றவன் மாதிரி கறுப்புடை அணிந்திருக்கிறாயே; அல்லது நீ என்ன திருட்டுப் பயலா? என்று கேலி செய்தால், இது ஒன்றும் அப்படி அல்லப்பா; இழிவு போக்கும் முயற்சியின் அறிகுறிதானப்பா இந்தக் கறுப்புச் சட்டை; கறுப்புடை அணிந்து கொள்வதற்காக என்னைச் சாவுக்குப் போகிறவன் என்றோ, திருடப் போகிறவன் என்றோ கூறினால், கறுப்புடை அணிந்து கோர்ட்டுக்குச் செல்லும் வக்கீல் எல்லாம் என்ன இழவுக்கா போகிறார்கள்? அல்லது, திருடத்தான் போகிறார்களா? கோர்ட்டில் கறுப்புடை அணிந்து நீதி வழங்கும் நீதிபதிகள், வெயிலுக்குக் கறுப்புக் குடை பிடித்துச் செல்வோர் பள்ளி ஆசிரியர் இவர்கள் எல்லாம் என்ன, இழவுக்குப் போகிறார்களா? கறுப்புடையணிந்து பட்டம் பெறும் பட்டதாரிகள் எல்லாம் என்ன, இழவுக்குப் போகிறார்களா? கறுப்புடையணிந்து பட்டம் பெறும் பட்டதாரிகள் எல்லாம் திருட்டுத்தனத் திற்காகவா பட்டம் பெறுகிறார்கள்? என்றெல் லாம் கேளுங்கள் என்று கூறினோம். அதைக் கேட்ட மக்கள் பெருவாரியாக கறுஞ்சட்டை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் உற்சாகத்தோடு அணிந்து கொண்டனர். கறுப்புச் சட்டை அணிந்து செல்வதை ஒரு பெருமையாகக் கூடப் பலர் கருத ஆரம்பித்து விட்டனர்.
இதைக் கண்ட இழிவில்லாதவர்களும், மற்றவர்களை இழிவுபடுத்தி வாழுபவர்களுமான சுயநலக் கூட்டம் ஆத்திரப்பட்டு, இதை ஒழிக்க வேண்டுமென்று முயற்சித்தது. அதற்குக் கையாளாக இருக்கும் காங்கிரஸ் சர்க்கார் கறுப்புச் சட்டைப் படை ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்து தடை உத்தரவு போட்டு விட்டது.
உண்மையாகவே இது ஓர் படை அமைப் பாகுமானால் இதில் வயது முதிர்ந்த கிழவிகளும், சின்னஞ்சிறு குழந்தைகளும் சேர்ந்திருக்க முடியுமா? இன்று கறுப்புடை அணிந்திருக்கும் இத்தனை பேர்களுக்கும் இந்தப் படையில் இடமிருக்குமா? இவ்விழிவு நீங்க வேண்டு மென்று எத்தனை பேர் முன் வந்துள்ளார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும்; அதன் மூலமாக இயக்கத்தின் உண்மைத் தன்மை மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் மேலும் மேலும் கறுஞ்சட்டை அணிந்து கொள்வதை வற்புறுத்தி வந்திருக்கிறோம். கறுப்புத் துணி தாராளமாய்க் கிடைத்திருந்தால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கறுப் புடை அணிந்திருப்பார்கள். இந்தக் கறுஞ் சட்டைக்கு எந்த ஒரே ஒரு மாதிரியையும் குறிப்பிடவில்லை. யார் வேண்டுமானாலும் எந்த மாதிரிச் சட்டையை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்றும், பெண்கள் ஒரு இரவிக்கையாவது அணியட்டும் என்றும் கூறினோம்.
கறுஞ்சட்டை அணிபவர்களை யாருக் காவது தொல்லை கொடுக்கும்படியோ யாரையாவது துன்புறுத்தும்படியோ நாங்கள் கூறியது இல்லை. அவர்களை ஏதாவது ஒரு ஆயுதத்தையோ, தடியையோ, வேறு அறிகுறியையோ வைத்துக் கொள்ளும்படியும் நாங்கள் கூறியதில்லை. அவர்களைத் தெருவில் நிறுத்தி கவாத்துப் பழகும்படியும் நாங்கள் கூறவில்லை. அதற்கான பயிற்சியாளர்களோ, பயிற்சிக் கூடமோ நாங்கள் வைத்திருக்கவில்லை. எங்காவது மகாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்த அழைக்கப்பட்ட தலைவருக்கு ஊர்வலம் நடைபெறுமானால், அங்கு கறுப்புடை அணிந்துள்ள தோழர்கள், சிறுவர்கள், தாய்மார்கள் யாவரும் ஒருவர்பின் ஒருவராக வரிசையாக நின்று ஊர்வலம் செல்வார்கள். ஒரு சில இடங்களில் உற்சாகத்திற்காக, வந்துள்ள தலைவர்களைத் தம்முடன் நிறுத்திப் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். தங்கள் ஊர்வலத்தைக் கறுஞ்சட்டைத் தொண்டர் ஊர்வலம் என்று பல மாதிரியாய்ப் பெயரிட்டு அழைப்பார்கள். இவ்வளவு தானேயொழிய இவர்கள் ஒருபோதும் பலாத்காரத்தில் இறங்கியதாகவோ, அல்லது எப்போதேனும் இவர்களுக்குப் பலாத்கார உணர்ச்சி ஊட்டப்பட்டதாகவோ யாராலும் கூற முடியாது.
சர்க்கார் கனவு கண்டிருக்கலாம், ஒரு தடையுத்தரவு பிறப்பித்து விட்டால் இவர்கள் ஆத்திரப்பட்டு ஏதாவது செய்வார்கள்; அதையே சாக்காக வைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தையே அடியோடு கலைத்து விடலாம் என்று. நாங்களென்ன மடையர்களா? நம் ஆட்களை நம்மவனையே கொண்டு அடிக்கச் செய்ய? தடையுத்தரவு பிறப்பிக்கு முன் உனக்கு அறிவிருந்தால் சிந்திக்க வேண்டாமா? இந்த இயக்கம் எத்தனை காலமாக இருந்து வருகிறது? இதுவரை எந்தெந்த இடத்திலாவது, சர்க்காருக்கு ஏதாவது தொந்தரவு கொடுத் திருக்கிறதா என்று?
நமக்கு வேண்டுமானால் சர்க்கார் எவ்வளவோ தொல்லை கொடுத்து இருக்கிறது. மதுரையில் நடந்த கறுஞ்சட்டை மாநாட்டின் போது சில காலிகளால் எங்கள் பெரிய பந்தலுக்கு பட்டப்பகல் 12.30 மணிக்குத் தீ வைக்கப்பட்டபோது ஜில்லா சூப்பிரண்டென்டு முதல் அதிகாரிகள், மாஜிஸ்ட்ரேட் அனை வருந்தான் பார்த்துக் கொண் டிருந்தார்கள், ஒழுங்காகத் தீ மூட்டப்படுகிறதா என்று. கொஞ்சம் தடுத்திருந்தால்கூட அன்று ஒரு 50 ஆயிரம் ரூபாய் பொருள் சேதம் ஏற்பட்டிருக்காது. ஏனென்று ஆட்சியாளர்கள் கேட்டதுண்டா? ஏதோ விசாரணை ஒன்று தலைவர்கள் நடத்தினார்கள். அதன் முடிவு என்ன என்று கேட்டால், அது இரகசியம், சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்கள். சமீபத்தில் சங்கீத மங்கலத்தில் எங்கள் கழகத் தோழர்கள் காங்கிரஸ் காலிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். போலீஸார்கூட தமது எப்.ஐ.ஆர். புத்தகத்தில் குற்றவாளிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர் என்றாலும், அவர்கள் மீது எதுவும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படவில்லை. சேலத்தில் சில காலிகளால் சோடா புட்டி வீசப்பட்டு எங்கள் தோழர் ஒருவருக்குக் கண்ணில் காயம்பட்டு 20 நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தார்; முடிவில் கண்ணை இழந்தார். அதற்காக நியூசன்ஸ் சார்ஜ் செய்து 2 ரூபாய் அபராதம் விதித்தார்கள். அண்ணாமலை காலேஜில் திராவிடர் கழக மாணவர்களை நடுச்சாமத்தில் போலீஸை வைத்துக் கொண்டு அடித்துப் புடைத்து, கடைசியாக அடித்தவர்கள் மீதுள்ள பிராதை வாபஸ் வாங்கிக் கொண்டு உதைப்பட்டவர்கள் மீது கேசு நடக்கிறது. வேறு எந்த மலைசாதி அரசாங்கமாவது இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்துமா? இவ்வளவையும் நாங்கள் பொறுத்துக் கொண்டுதானே வந்திருக்கிறோம்!
எங்கள் கழகத் தோழர்கள் சிலர் ஆத்திரப்படும்போதுகூட, ஆத்திரப் படாதீர்கள்; ஆத்திரப்பட்டால் இரண்டு கட்சியிலும் அடிபடுபவர் நம்மவராகத தான் இருக்க நேரிடும்; ஆகவே, சமாதானமாக நடந்து காங்கிரஸ் திராவிடத் தோழர்களின் அன்புக்குப் பாத்திரமாகுங்கள் என்று தானே அவர்களுக்குச் சமாதானம் கூறி வந்திருக்கிறோம்! இதை யாராவது இல்லையென்று கூற முடியுமா? இந்த உண்மையெல்லாம் சர்க்காருக்குத் தெரியாமலா இருக்கிறது? அல்லது, எங்கள் நடத்தையாவது இதற்கு மாறுபட்டிருந்தது என்று யாராவது கூற முடியுமா? தெரிந்திருந்தும் ஏன் இந்த வீண் வேலை? கனம் சுப்பராயன் அவர்கள், ‘பலாத்காரத்தைக் கையாளாத யாரையும் நாங்கள் வீணாகத் தொல்லை கொடுக்கப் போவதில்லை’ என்று வானொலிப் பேச்சில் கூறினார் என்று கேட்டு அவருடைய நல்லெண்ணத்தில் நம்பிக்கைக் கொண்டு, அதற்காக அவரைப் பாராட்டி மெமோரியல் ஹாலில் பேசி விட்டு வீட்டிற்குப் போகிறேன்; அங்கு தந்தி வந்து சேருகிறது. திருவண்ணா மலையிலிருந்து கறுஞ்சட்டை போட்டுக் கொண்டு இருந்ததற்காகவும் கழகத்தில் அலுவலக கருப்புக் கொடியை இறக்காததற்காக வும், கழகத்துக்கு வந்து, ஆறு தோழர்கள் கைதி யாக்கப்பட்டு லாரியில் ஏற்றிச் செல்லப் பட்டார்கள் என்று. கைது ஏன்? சர்க்காருக்கு, மந்திரிக்கு, போலீசுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்றா அவர்கள் கருப்புக் கொடி பறக்க விட்டிருந்தார்கள்? எதற்காக அவர்களைக் கைதியாக்கி இருக்க வேண்டும்? எந்த அடக்கு முறைக்கும் சமாதானத்தோடு உட்பட்டு விடுவதுதானே எங்கள் வழக்கம்! இராஜகோபாலாச் சாரியார் ஆட்சியில்கூட நாங்கள் எதிர்வழக்குக்கூட ஆடியதில்லையே! அடக்கியே ஆள்வதென்று நீங்கள் தீர்மானித்திருந்தால் அதற்கு ஒரு முறை வேண்டிய தில்லையா? இன்று நிர்வாகக் கமிட்டி கூட்டப் போவதறிந்து எத்தனை தோழர்கள் எனக்கு எழுதி இருந்தார்கள் தெரியுமா? ‘எதுவும் பயங்கொள்ளித்தனமாகத் தீர்மானித்து விடாதீர்கள்; உங்களுக்குப் பயமாயிருந்தால் சற்று விலகியிருந்தாவது, எங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள எங்களை அனுமதித்து விடுங்கள்’ என்று. இவற்றைக் கமிட்டி அங்கத்தினர்களுக்குக்கூட நான் படித்துக் காட்டவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? எப்படியும் சமாதானமாக, அமைதியாக நடந்து கொள்ள வேண்டுமென்று பார்த்தால் ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்போல் இருக்கிறதே! இதுதானா காந்தி பேரைச் சொல்லிக் கொண்டு பதவிக்கு வந்த யோக்கியர்கள் நடத்தை? ஒரு கட்சியால் தங்கள் பதவிக்கு ஆபத்து நேரும் என்று கருதினால், அதை இப்படித்தானா காட்டிக் கொள்ள வேண்டும்? அதுவும், காந்தியாரைக் கொன்று கரைத்துவிட்ட ஒரு மாதத்திலேயா? இந்தப் பதவி என்ன சதமா? பதவி போன பிறகு மக்கள் முன் தலைகாட்ட வேண்டாமா? – என்று பெரியார் அறிக்கை விடுத்தார்.
அத்துடன் கழகத்தோழர்கள் மட்டுமல்லாது திராவிடர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் நாங்கள் இழி மக்கள் அல்லர் என்பதைக் காட்டும் வகையில் அனைவரையும் கருஞ்சட்டை அணியச் சொல்லுங்கள் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
பெரியார் முழக்கம் 17012019 இதழ்