7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் கழகத் தலைவர்- தோழர்கள் நேரில் மனு
14-1-2019 இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்து பேரறிவாளன் முதலான எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரியும் ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தியும் விண்ணப்பத்தைக் கையளித்தனர்.
முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.
முதல்வரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:
திரு. இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் தமிழக அரசும் கவலையோடும் அக்கறையோடும் இருப்பது தாங்கள் அறிந்ததே. அவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துவிட்ட நிலையில் தங்கள் விடுதலை வேண்டி மத்திய மாநில அரசுகளையும், இந்திய உச்சநீதி மன்றத்தையும் முறைப்படி அணுகினார்கள். அந்தச் செயல்வழியில் இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9,2018 அன்று அமைச்சரவையில் முடிவு எடுத்து, ஆளுநரின் ஏற்புக்காக அனுப்பி வைத்தது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அந்த ஏழு சிறையாளர் களும் அவர்தம் குடும்பத்தினரும் மட்டுமல்லாமல், மாந்தவுரிமைகள்பால் அக்கறை கொண்ட அனைவரும் ஆவலோடு காத்துள்ளார்கள். பார்க்கப் போனால், தமிழக மக்கள் இது குறித்துக் கொண்டுள்ள கவலையின் அடையாளமாகவே இலட்சக்கணக்கானவர்கள் அஞ்சலட்டைகள் ஊடாக ஆளுநருக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு கடந்த பிப்ரவரி 19, 2014 அன்றே இவர்களை விடுதலை செய்யும் முடிவை அமைச்சரவைத் தீர்மானமாக எடுத்ததும் தாங்கள் அறிந்ததே. அதிலிருந்தே இப்போது ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றது. எழுவரின் உறவுகள் ஏங்கிய நெஞ்சத்தோடு சிறைக் கதவுகள் திறக்கும் நாளுக்காக காத்திருக்கின்றனர். பிரிவு 161இன் படி மாநில அரசு தண்டனைக் குறைப்புத் தொடர்பில் எடுக்கும் முடிவை ஆளுநரால் மறுக்க முடியாதென்பது பல்வேறு வழக்களில் இந்திய உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிசெய்த நிலைப்பாடாகும். இந்த எழுவரில் ஒருவரான நளினி தொடர்பான வழக்கும் இதில் ஒன்றாகும். இப்போது மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த நான்கு மாதங்களாக தமிழக அரசின் பரிந்துரை தீர்மானத்தை ஏற்காமலும் மறுக்காமலும் காலந்தாழ்த்தி வரும் நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு நினைவூட்டலை தமிழக அரசு அனுப்பியிருப்பதாக அறிகிறேன். தமிழக அரசு சார்பில் தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆளுநரை வலியுறுத்தி பின்வரும் நடவடிக்கைகளை செய்வது எழுவரின் விரைவான விடுதலைக்கு உதவும் என்று கருதுகிறேன்.
- வெளிப்படையாக ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக மக்கள் கவலை கொண் டிருப்பதை அறியச் செய்யலாம்.
- அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைத்துக் கட்சிகளின் சார்பாகவும் ஒரு தீர்மானம் இயற்றி இவர்களின் விடுதலைத் தீர்மானத்தை உடனே ஏற்குமாறு ஆளுநரை வலியுறுத்தலாம்.
- எழுவர் விடுதலைத் தீர்மானத்தை ஆளுநர் ஏற்க வேண்டி சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கலாம்.
தமிழர் எழுவர் விடுதலை என்பது மாந்த உரிமை, மாநில உரிமை ஆகிய இரண்டும் இணைந்த பிரச்சனையாக உள்ளது. அவர்கள் விடுதலையின் வாயிலில் நீண்ட காலமாக காத்துக் கிடக்கின்றனர். சிறைக் கதவுகளைத் திறப்பதற்கான திறவுகோலை வரலாறு தங்களிடம் விட்டுவைத்துள்ளது. எழுவரின் விடுதலைக்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு என்னென்ன வழிகளில் முயற்சி எடுக்கலாம் என்பதைத் தாங்களும் தமிழக அரசும் கருதிப் பார்த்து காலத் தாழ்வின்றி ஆவனச் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று முதல்வரிடம் நேரில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
ஏதிலியர் பிரச்சினை
இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கும் உண்டு. இவ்வடிப் படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகத் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களிடம் வலியுறுத்துகிறோம்.
1) இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக் காலக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
2) தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமை களும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.
3) திபெத்துப் போன்ற பிறநாட்டு ஏதிலியரோடு ஒப்பிட்டால் தமிழீழ ஏதிலியர்க்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிடு மாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
4) சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு அம்முகாம்களைக் கலைத்துவிட வேண்டும்.
5) ஏதிலியர் முகாம்களை சிறை முகாம்கள் போல் கருதி நடத்துவதைக் கைவிட வேண்டும்; அவற்றில் காவல் துறை உளவுப் பிரிவின் ஆதிக்கமும் தலையீடும் இல்லாமற் செய்யவேண்டும்; ஏதிலியர்க்கு எதிராக மாந்த உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசின் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். முகாம்களுக்கு வெளியேயும் ஏதிலியர் வாழ்வில் காவல் துறைத் தலையீடும் கெடுபிடியும் இல்லாமற்செய்ய வேண்டும்.
6) தமிழீழ ஏதிலியரின் கல்வியுரிமையும் வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்; ஏதிலிக் குழந்தைகள் அனைவர்க்கும் கட்டாய இலவயக் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஏதிலி மாணவர்கள் இந்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி பெற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும். தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்கு இப்போதுள்ள வழித் தடைகள் அனைத்தையும் களைந்திட வகை செய்ய வேண்டும்.
7) சட்டம் பயின்று தகுதி பெற்ற தமிழீழ ஏதிலியர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்ற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும்.
8) ஏதிலியரின் கண்ணியமிக்க மாந்த வாழ்வுக்கு ஏற்ற வகையில் ஏதிலியர் முகாம்களில் வீட்டு வசதியும் பிற குடிமை வசதிகளும் செய்து தர வேண்டும், ஏதிலியர்க்கான அரசின் உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.
9) இலங்கை திரும்ப விரும்பும் ஏதிலியரிடம் இந்நாட்டில் மிகைத் தங்கலுக்காகத் தண்டம் விதிப்பதைக் கைவிட வேண்டும். உடனடியாகத் தண்டத் தொகையைப் பெரிதும் குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் அயலாராகவும் குற்ற மரபினராகவும் நடத்தப் படுவது வருந்தத்தக்க உண்மையாக இருக்கிறது. இந்த அவல நிலையை மாற்ற மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி ஈழ ஏதிலிகளின் உரிமைகளை உறுதி செய்யுமாறு தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரியார் முழக்கம் 24012019 இதழ்