ஆய்வரங்கமாக நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் எட்டாவது வாசகர் வட்டம் டிச. 16, 2018 அன்று சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் ஆய்வரங்கம்போல் நடந்தது.

தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகர் தொடக்க உரையாற்றினார். (மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடையும் வழங்கி வருகிறார்)  வளர்மதி எழுதிய ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் குறித்து இமானுவேல் துரை  விரிவாக உரை நிகழ்த்தினார். குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராம சுப்ரமணியம், சிவகாமி சிதம்பரனார் உரையிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ நூல் குறித்து எட்வின் பிரபாகரன் நூலின் மய்யமான கருத்துகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த மனுஷ்யபுத்திரன் உரையை மய்யமாக வைத்து பெரியாரின் ‘கிராம சீர்திருத்தம்’ நூலோடு ஒப்பிட்டு மதன்குமார் திறனாய்வு செய்தார். யுவராஜ் – க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி வரலாறு நூலைத் திறனாய்வு செய்து, நீதிக்கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதன் அரசியல் பயணங்கள் வழியாக பார்ப்பன ரல்லாத மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார்.

கார்த்தி இராசேந்திரன் ‘பீமா கோரிகான்’ வரலாற்றின் பின்புலத்தை விரிவாக வரலாற்றுப் பக்கங்களிலிருந்து எடுத்துக்காட்டிப் பேசினார். சிவாஜி மன்னரில் தொடங்கி அவரது பரம்பரை ஆட்சி இறுதியில் பார்ப்பனிய ஆட்சியாக முடிவுற்ற வரலாற்றையும் பேஷ்வா பார்ப்பனர்கள் நடத்திய பார்ப்பனிய கொடூர ஆட்சியையும் விரிவாகப் பேசியதோடு ‘ஜெய்பீம்’ முழக்கம், ‘அம்பேத்கர் வாழ்க’ என்ற நோக்கத்தில் உருவானது அல்ல என்பதையும், அம்பேத்கரே ‘பீம்கோரிகான்’ நினைவிடத்தில் ஜெய்பீம் முழங்கியதையும் எடுத்துக் காட்டினார். ர. பிரகாசு, தனியார் துறையில் ஒடுக்கப்பட்ட மக்கள் புறக்கணிப்பை ஏராளமான தரவுகளோடு விளக்கினார்.

நிறைவாக விடுதலை இராசேந்திரன், தோழர்களின் கருத்துகளை முன் வைத்துப் பேசினார். தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். திருவான்மியூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு நா. விவேக் தலைமை தாங்கினார். மா. தேன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்த தமிழ்தாசன், லெனின் ராசா முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பங்கேற்ற இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், “மிகச் சிறந்த ஆய்வரங்கமாக நடந்தது. பல்கலைக்கழக ஆய்வரங்கில்கூட இத்தகைய ஆழமான கருத்துகளைக் கேட்க முடியாது” என்று வியந்து பாராட்டினர்.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 03012019 இதழ்

You may also like...