கவுசல்யா மறுமணம் ஆணவப் படுகொலைக்கு எதிராக இணைந்த கைகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள குமரலிங்கம் எனும் கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் பொள்ளாச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 2015இல் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜாதி வெறியுடன் கவுசல்யா வின் பெற்றோர் இத்திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 2016 மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கு திட்டமிட்ட கவுசல்யாவின் பெற் றோர்கள் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கவுசல்யா மறுமணம் புரிய துணிவுடன் முடிவெடுத்தார்.
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி மறுமணம் நடந்தது. பறை இசை முழங்க நடந்த அந்தத் திருமணத்தில் சங்கரின் தந்தை வேலுச்சாமியும் சங்கரின் சகோதரர் களும் கலந்து கொண்டு இணையரை வாழ்த்தினர். இனி, “ஜாதி ஒழிப்புக் களத்தில் துணைவருடன் இணைந்து செயல்படுவேன். ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்றப் போராடுவேன்” என்று உறுதியுடன் கவுசல்யா கூறினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலை வகித்தனர். கருப்புச் சட்டை அணிந்த இணையர் பறை இசை முழக்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பெரியார் முழக்கம் 20122018 இதழ்