160க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன கருஞ்சட்டைப் பேரணிக்கு திருச்சி நோக்கி திரளுகிறார்கள்
திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டிசம்பர் 23 அன்று நடைபெறவுள்ள பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 17.12.2018 அன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த பேரணி மற்றும் மாநாட்டில் இது வரையில் 160க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்திருக்கின்றன. தமிழ்நாடு முழுதும் உள்ள பெரியார் கொள்கைகளை ஏற்கும் அனைத்து அமைப்புகளும், படைப்பாளி களும், செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் கருப்புச் சட்டை அணிந்து இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள்.
19.12.2018 அன்று அனைத்து அமைப்பு களின் பெயர்களையும் உள்ளடக்கிய முழுமையான பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களும், பெண்களும், மாணவர் களும், இளைஞர்களும் பெருமளவில் திரண்டு பேரணி மற்றும் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி யின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் வாலாசா வல்லவன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, தமிழ் வழி கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்ப தமிழர், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் லெனாகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பேரணிக்குத் தமிழ்நாடு முழுதுமிருந்தும் தனிப் பேருந்துகளில் தோழர்கள் உணர் வாளர்கள் திரண்டு வருகிறார்கள். பேரணி மாநாட்டை விளக்கும் சுவரெழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன. பெரியார் குறித்து பாடல்களை கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் இயற்றி அதற்கு இசையமைக்கப் பட்டு வருகின்றன. நடிகர் சிம்பு, பெரியார் குறித்து ‘குத்துப் பாட்டு’ ஒன்றை ஆல்பமாக நடனக் காட்சியுடன் ‘வலை ஒளி’யில் வெளி யிட்டுள்ளதை பல இலட்சம் இளைஞர்கள் பார்த்துள்ளனர். கவிஞர் மதன் கார்க்கி இப்பாடலை இயற்றியுள்ளார்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டந்தோறும் கலந்துரை யாடல் நடத்தப்பட்டு திருச்சிப் பேரணிக்கு திரளுவதற்கான ஏற்பாடுகள் – பேரணி – விளம்பரங்களுக்கான திட்டமிடுதல்கள் நடந்து வருகின்றன. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையத்தில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி பிற்பகல் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
திருமுருகன் காந்தி, அரங்க. குணசேகரன், பொழிலன் உள்ளிட்ட அமைப்பாளர் களோடு கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், வாலாஜா வல்லவன், குடந்தை அரசன், செந்தில், டைசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, விரிவான ஆலோசனை நடத்தினர். மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மாநாடு பேரணி நிகழ்வுகளை வீடியோவில் பதிவு செய்யும் பொறுப்புகளை திரைப்படத் துறையைச் சார்ந்த கலைஞர்கள் ஏற்றுள்ளனர்.
பொருள் வசதி ஏதுமில்லாத இலட்சிய நோக்கு கொண்ட இயக்கங்கள் நடத்தும் பேரணி – மாநாடு என்பதால் மக்களிடமிருந்து நன்கொடை திரட்டும் முயற்சிகளில் தோழர்கள் இறங்கியுள்ளனர். முகநூல்களில் பேரணி – மாநாட்டு செய்திகள் பெருமளவில் வலம் வருகின்றன. மாநாட்டுக்கான அழைப்பை பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் குரல் ஒலி வழியாக பதிவு செய்துள்ளனர். மாநாட்டுக்கு அழைக்கும் பாடலோடு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களை மாநாட்டுக்கு அழைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பொது வெளியில் ‘பேசும் பொருளாக’ கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு மாறியிருக் கிறது. இயக்கங்களுக்கு வெளியே உள்ள உணர்வாளர்களும் காவி பயங்கரவாதத்தைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற உணர்வுடன் திருச்சிக்கு திரள திட்டமிட்டு வரும் செய்திகள் தமிழகம் முழுதுமிருந்தும் கிடைத்து வருகின்றன.
தமிழர்களின் முதன்மை அடையாளம் பெரியார். காவியை பெரியார் தந்த கருப்புச் சட்டையால் முறியடிப்போம்! என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டில் தமிழின விடுதலைக்கும் ஜாதி ஒழிப்புக்கும் களத்தில் நிற்கும் அமைப்புகள் இயக்கங்கள் ‘பெரியார் உணர்வாளர்கள்’ என்ற ஒரே குடையின் கீழ் திருச்சியில் திரளப் போகிறார்கள்.
தமிழக வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு ஓங்கி நிற்கிறது.
பெரியார் முழக்கம் 20122018 இதழ்