கேரளா மதச் சடங்குகளை எதிர்த்தே வளர்ந்தது மதச் சடங்குகளுக்கு எதிரான சமூக சீர்திருத்தங்கள் தேவை பினராயி விஜயன் (கேரள முதல்வர்)

16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரையிலிருந்து –

சமூக சீர்திருத்த மரபு தான் நமது மகத்தான மரபு… நாம் அத்தகைய சமூக சீர்திருத்த மரபைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். இங்கு மேலோங்கி நிற்கும் சமூகசீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் ஸ்ரீநாராயண குரு, சட்டம்பி சுவாமிகள் போன்றவர்களால் தலைமை தாங்கி வழி நடத்தப் பட்டவை. அதனால்தான் “ஒரு பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்று விவேகானந்தரால் விமர்சிக்கப் பட்ட கேரளம் மாநிலம், இன்று மத பேதமற்ற, ஜாதி பேதமற்ற சமூகமாகமுன்னேறி நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இங்கே நமது நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், நமது மாநிலத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டா லும், எந்த காலகட்டங்களில் எல்லாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அந்த கால கட்டங்களில் எல்லாம் அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கி இருக்கிறார்கள். அந்த பிரிவினரில் பிற்போக்கு சக்திகள் மட்டும் பங்கெடுக்க வில்லை. சமூக சீர்திருத்தங்கள் மூலம், உரிமைகள் அடைய வேண்டிய, நன்மைகளைப் பெற வேண்டிய, பலனடைய வேண்டிய பிரிவினர் யாரோ அவர்களையே, சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு எதிராக அணி வகுக்கும்படி செய்வது காலம் காலமாக பிற்போக்கு சக்திகளால் மேற்கொள்ளப் படுகிறது. தற்போதும் அதுதான் நடக்கிறது.நமது நாடு பார்த்த மிகக் கொடூரமான சடங்கு, சதி என்ற ஒன்றாகும்.

கணவர் இறந்துவிட்டால், மனைவியை கணவரின் அந்த சிதையில் தள்ளிவிடும் வழக்கம்…. ஒரு மூட நம்பிக்கை. அந்த சதி என்ற வழக்கத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. அது சமூக சீர்திருத்த இயக்கங் களின் பலனால் மட்டுமே நடந்தது. நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், அன்றைய கணக்குப்படி 1813 முதல் 1829 வரையிலான காலகட்டத்தில் 8135 பெண்கள் சிதையில் குதித்து உயிரிழந்தார்கள். அந்த வழக்கம் இன்றும் தொடர்ந்திருந்தால், எத்தனை ஆயிரம், எத்தனை லட்சமாகியிருக்கும் என்று கணக்கிட்டு பார்த்துக் கொள்ளலாம்…  என்ன ஆகியிருக்கும் நமது நாட்டின் நிலைமை? ஆனால்இந்த சடங்கின், மூடநம்பிக்கை யின் பெயரில், இந்த வழக்கத்திற்கெதிராக சட்டம் இயற்றப்பட்ட பிறகும், பெண்கள் இதுபோன்று சிதையில் குதிக்க முயன்றார்கள்…. சிலர் குதிக்கவும் செய்தார்கள். அதற்கெதிராக பெரிய எதிர்ப்புகளும் கிளம்பின. இ.எம்.எஸ், வி.டி, எம்.ஆர்.ஜி, பிரேம்ஜி போன்றவர்கள் எல்லாம் அன்றைய பிராமண சமுதாயத்திலிருந்த தவறான வழக்கங்களுக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டகளைத் தொடங்கினர்.

அதன் பகுதியாக விதவை மறுமணம் சாத்தியமாகும் நிலை வந்தது. அதுபோல, அன்றைய சமூகத்தில் இருந்த வித்தியாசமான சூழலின் அடிப்படை யில் இளம்பெண்களை, அதாவது பருவமடைவதற்கு முன்பாகவே, சிறுமிகளை படுகிழவர்களுக்கு மணம் முடித்துவந்தார்கள். அந்த சிறுமிகள் பருவமடைவதற்கு முன்பே அந்த கிழவனின் கதை முடிந்துவிடும். பின்பு அந்தச் சிறுமி தலை மொட்டையடிக்கப்பட்டு இருட்டறையில் அடைந்து கிடக்க வேண்டும். அதற்கெதிராக முன்பு குறிப்பிடப்பட்டவர்கள் எல்லாம் போராட்டம் நடத்தத் துணிந்த போது அவர்களை ஜாதி விலக்கம் செய்ய முடிவெடுத்தார்கள். பயமுறுத்தினார்கள். பிற்போக்காளர்களின் கடுமையான எதிர்ப்பும் இருந்தது. நமது நாட்டில் சில இடங்களில் மனிதப்பலி கொடுக்கும் முறை இருந்தது. பின்னர், அது மிருகப்பலியாக மாற்றப் பட்டது. மிருக பலியும் செய்யக்கூடாது என்ற நிலை வந்த போது தான் மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்த்து கலக்கி இரத்தம் போன்ற திரவத்தை உருவாக்கி அடையாள ரீதியாக பலியிடும் முறை வந்தது. இதெல்லாம் சடங்குகளில் ஏற்பட்ட மாற்றங்களாகும். நமது நாட்டில், நமது மாநிலத்தில் என்னவெல்லாம் வகையிலான மாற்றங்கள்? வழக்கங்கள் என்பது மரபுவழியாக கடைப்பிடிக்கப்படுபவை ஆகும். அது கால கட்டங்கள் தோறும் மாற்றமடையும். ஒரு காலத்தில் இருப்பது பின்வரும் காலங்களில் இருக்கவேண்டும் என்பதில்லை.

முன்பெல்லாம் கோவிலில் நுழைவது என்றால், கோவில் குளத்தில் நன்றாகக் குளித்து, அந்த ஈரத்துணியுடன் தான் செல்லவேண்டும். இப்போது, எல்லோரும் அப்படியா கோவிலுக்குள் நுழை கிறார்கள்.  உடலை தங்கள் வசதிக்கேற்ப சுத்தம் செய்து கொள்ளுகிறார்கள். ஆனால், கோவிலில் அப்படியே தானே நுழைகிறார்கள்?முன்பு பெண்களின் விஷயத்தில் என்னவெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது? மாதவிடாய் வந்து விட்டால். அந்தப் பெண்களுக்கு வீட்டில் கூட இருக்கமுடியாது. வசிக்குமிடத்திலிருந்து வெளியே செல்ல முடியாது. வீட்டிலிருந்து தனியே வேறொரு இடத்தில் அதற்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தங்கிக்கொள்ள வேண்டும்…. ஆனால் இப்போது? எல்லாம் மாற்றங்கள் அல்லவா..? நமது கண் முன்னே ஏற்பட்ட மாற்றங்கள் அல்லவா? முன்காலத்தில் பிரசவம் நடந்தால் ‘வாலாய்மை” (பிரசவ நேரத்தில் அசுத்தம் என்ற பெயரில் கடைப்பிடிக்கப் பட்ட தீட்டு). மரணம் நடந்தால்… குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் “புலை” (இறப்பினால் ஏற்படும் தீட்டு).. எத்தனை நாட்கள் அதற்கு…?ஆனால் இப்போதோ மரணம் நடந்து சவ அடக்கம் முடிந்தவுடன், ஒருவர் கூறுவார், “எல்லா காரியங்களும் இத்துடன் முடிந்துவிட்டது. கலைந்து செல்பவர்கள் கலைந்து செல்லலாம்” என்று…. எல்லோரும் கலைந்து செல்கிறார்கள். இதுதானே சடங்குகளின் நிலைமை? மாற்றங்கள் நிகழும் போக்கை நாம் பார்க்க வேண்டும் அல்லவா? இத்தகைய மாற்றங்கள், முன்பு சொன்ன சமூக சீர்திருத்த நாயகர்களின் தலையீட்டினால் ஏற்பட்டது தானே?

இங்கே முன்பு மார்பு மறைக்க உரிமை இல்லை அல்லவா? அவ்வாறு மார்பு மறைக்க உரிமையில்லாத காலகட்டத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட வில்லையா? அவ்வாறு மார்பு மறைத்து, கோவிலில் நுழையும் உரிமை கிடைத்த பிறகும் கூட அந்த உரிமையை சீர்குலைப்பதற்கான போராட்டங்கள் நடக்கவில்லையா இங்கே..? பெண்களே கூட அதற்கெதிராக களமிறங்கினார்கள்… அதோடு மார்பு மறைத்தவர்களின் மாராப்பை, மார்பு மறைக்காத பெண்களே கிழித்தெறியத் துணிந்தார்கள். இதெல்லாம் நமது மாநிலத்தின் வரலாறல்லவா? ஆனால், நாம் அங்கேயே நின்று கொண்டிருக்கிறோமா? ‘எங்களுக்கு மார்பை மறைக்க வேண்டாம்’ என்று கூறியபெண்களுடனா இந்த நாடு நின்றது…? காலம் அவர்களுடனா நின்றது…? காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப சடங்குகளும் வழக்கங்களும் மாறுவதில்லையா?

முன்பு, இங்கே பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டது பெரிய மாற்றமாக இருக்க வில்லையா? நமது சமூகத்தின் முன்னேறிய பகுதியினர் அதனை ஏற்றுக்கொண்டார்களா? பிற்போக்கு சக்திகள் அதற்கெதிராக நிற்கவில்லையா? சுருக்கமாகச் சொன்னால், என்னென்ன சமூக சீர்திருத்த இயக்கங்கள் நடந்துள்ளனவோ அந்த கட்டங்களில் எல்லாம்அதற்கெதிராக கடுமையான எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.முன்பிருந்த நிலை என்னவாக இருந்தது?

“பிராமணர்”களிடமிருந்து 64 அடி தூரத்தில் பறையர் நிற்க வேண்டும். 54 அடி தூரத்தில் புலையர் நிற்க வேண்டும். 36 அடி தூரத்தில் ஈழவர் நிற்க வேண்டும். ஈழவர்களிடத்திலும் தீண்டாமை வழக்கமிருந்தது. ஈழவர்களிடமிருந்து 30 அடி தூரத்தில் புலையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிற்க வேண்டும். என்னவெல்லாம் தவறான பழக்கவழக்கங்கள் நமது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தன? அப்போதும் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பலனாகத்தானே, இவையெல்லாம் மாறின? அதற்கு உறுதியான தொடர்ச்சிகளும் ஏற்பட்டன. நமது மாநிலத்தில்மேலோங்கி வந்த பல்வேறு இயக்கங்கள் விவசாயிகளின் இயக்கம், தொழிலாளர்களின் இயக்கம், இடதுசாரி இயக்கம் போன்றவற்றின் தலையீடுகள், இந்த சமூக சீர்திருத்தக்கருத்துக்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு முன்னேறிச் சென்றன.

அதுதானே இந்த மாநிலத்தை மாற்றின? இந்த மாநிலத்தின் இதுபோன்ற மாற்றங்களை உள்வாங்க முடியாத ஒரு நிலை இப்பொழுதும் உள்ளன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

(தொடரும்)

நன்றி : தீக்கதிர்

பெரியார் முழக்கம் 15112018 இதழ்

You may also like...