கமலஹாசனின் ‘மய்யம்’
மக்களுக்கு நீதி கேட்கும் மய்யத்தோடு மதுரையில் களமிறங்கி யிருக்கிறார் நடிகர் கமலஹாசன். கட்சித் தொடங்கும் உரிமை அவருக்கு உண்டு. எதிர்காலத்தில் அவரின் செயல்திட்டங்களே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும். அவரது ‘நிலைப்பாடுகள்’ மற்றும் கொள்கை திசை வழி இனிமேல்தான் தெரியும்.
ஆனாலும், “நான் இடது சாரியுமல்ல; வலதுசாரியுமல்ல; இரண்டுக்கும் ‘மய்யமானவன்’ என்று அவர் தன்னை அடையாளப் படுத்தியிருக்கிறார்.
தத்துவங்களில் ‘மய்யம்’ என்பது வேறு; நிகழ்வுகளில் ‘மய்ய’ நிலைப்பாடு எடுப்பது என்பது வேறு. இரண்டுக்குமிடையிலான குழப்பத்தில் கமலஹாசன் மூழ்கியிருப்பதாகவே தெரிகிறது. காஞ்சி சங்கராச்சாரி, தமிழ்த் தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை காட்டவில்லை என்ற கேள்விக்கு சங்கராச்சாரி அப்படி செய்திருக்கக் கூடாது என்றோ, எழுந்து நிற்காதது அவரது உரிமை என்றோ கூறவில்லை. கமலகாசனின் ‘மய்ய’மான கருத்து, ‘கண்ட கண்ட இடங்களில் தமிழ்த் தாய் வாழ்த்துகளைப் பாடக் கூடாது’ என்பதாகவே இருந்தது.
ஆண்டாள் தேவதாசி மரபில் வந்திருக்கலாம் என்று பேசிய கவிஞர் வைரமுத்துக்கு ஜீயர்கள், வைணவப் பார்ப்பனர்களிடமிருந்தும், மதவாத அமைப்புகளிடமிருந்தும் கண்டனம், மிரட்டல்கள் வந்தபோது, ‘கமலஹாசனின்’ மய்யம் வைரமுத்துக்கு எதிராகவே இருந்தது. ‘அவர் ஆண்டாளைப் பற்றி பேசி இருக்கத் தேவையில்லை’ என்றார். விமர்சனம் கருத்துரிமை அனைவருக்குமே உண்டு என்று அவர் மய்யமாக நிற்காமல், ஆண்டாளுக்காகவும், அய்யங்கார்களுக்காகவும் அவர் மய்யம் சாய்ந்தது.
மதுரை தொடக்க விழாவை முடித்துவிட்டு அடுத்த நாள் சென்னைக்குப் புறப்பட இருந்த கமலஹாசன், செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதைக் குறிப்பிட்டார். முதல் நாள் கட்சியை அறிவித்து, அடுத்த நாளே அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் அழைப்புக்காகக் காத்திருந்தவருக்கு கிடைத்தது ஏமாற்றம். ஒருவேளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், பிரதமரை நேரில் சந்திக்கும் முடிவை அனைத்துக் கட்சிகளும் எடுத்திருப்பதை கட்டாயம் வரவேற்றிருப்பார். ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காத நிலையில், ‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தினால் பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை’ என்ற ‘மய்யமான’ கருத்தை வெளியிட்டார்.
காந்தி, பெரியார், அம்பேத்கர், காமராசர் ஆகியோரே தனக்குப் பிடித்த தலைவர்கள் என்று கூறி வந்த கமலஹாசன், மதுரைக் கூட்டத்தில் இது குறித்து ரசிகரிடமிருந்து வந்த கேள்விக்கு, பெரியார் பெயரை மட்டுமே திட்டமிட்டு உச்சரிக்காமல், நேரு, பிரனாய் விஜயன், ஒபாமாவும் தனக்குப் பிடித்த தலைவர்கள் தான் என்று கூறி தனது ‘மய்ய’த்தை பெரியாரைத் தவிர்க்க வேண்டும் என்ற ‘சூட்சமத்தோடு’ இணைத்துக் கொண்டார்.
“அப்துல்கலாம் நினைவிடத்திலிருந்து கட்சிப் பயணத்தைத் தொடங்கும் நீங்கள் ஏன், கலாம் மறைவுக்கு வரவில்லை என்ற கேள்விக்கு, எந்த மரண நிகழ்ச்சிகளிலும் தான் பங்கேற்பதில்லை என்ற ஒரு கொள்கை முடிவை பதிலாகக் கூறினார். சிவாஜி கணேசன் மறைவில், அவரது சடலத்துடனேயே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதைப் படங்களுடன் முகநூலில் வெளியிடப்பட்டபோது கமலஹாசன் ‘மய்யம்’ – இங்கே ‘கமுக்கான மவுனத்துடன்’ இணைந்து கொண்டது. இப்போது மய்யம் – ஸ்ரீதேவி உடலுக்கு மலர்வளையம் வைக்க பம்பாய்க்கு பறந்திருக்கிறது.
தமிழக ஆட்சிகளை விமர்சிக்கும் நீங்கள், ஏன் மத்திய ஆட்சி பற்றி எதுவுமே பேசவில்லை என்று கேட்டால், “மத்திய ஆட்சி, என்ற ஒன்று டெல்லியில் மட்டுமே இருக்கக் கூடாது. நாடு முழுதும் மத்திய ஆட்சிகள் நாடாளுமன்றங்களை விரிவுபடுத்த வேண்டும்” என்று மய்யமான யோசனையைக்கூட அவர் முன் மொழியக் கூடும்.
“உங்களை பகுத்தறிவுவாதி என்று கூறி வந்தீர்கள். அந்தக் கொள்கையை இனியும் பின்பற்றுவீர்களா?” என்று கேட்டால், “பகுத்தறிவு – பகுத்தறிவாளர்களிடம் மட்டும்தான் இருக்கிறதா? சோதிடம், சகுனம் பார்ப்பதிலும் இருக்கிறது. காவடி தூக்குவது, மொட்டை அடிப்பதிலும் பகுத்தறிவு இருக்கிறது. ஏன் பகுத்தறிவு வாதங்களை கடுமையாக எதிர்ப்போரிடம்கூட பகுத்தறிவு இருக்கிறது; நாங்கள் இரண்டுக்குமிடையே மய்யத்தில் இருக்கிறோம் என்று விளக்கம் கூறினாலும் வியப்பதற்கு இல்லை.
தலித் மக்கள் மீது தாக்குதல் நடக்கிறதே என்று கேட்டால், அதற்கு – அரிவாள், பட்டாக்கத்திகளைத் தடை செய்ய வேண்டும் என்ற மய்ய சிந்தனைக்கு வரலாம்.
கமலஹாசனின் மய்யம் இனி எத்தனை எத்தனை வடிவங்களை எடுக்கப் போகிறதோ தெரியவில்லை.
ஆக, கமலஹாசனின் ‘மய்யம்’, மய்யங்களுக்குள்ளேயே மய்யத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.
மக்களையாவது விளிம்புக்குத் தள்ளி விடாமல் இருக்குமா, இந்த மய்யம்?
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 01032018 இதழ்