‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திகள் 1931 – விருதுநகர் சுயமரியாதை மாநாடும் தீர்மானங்களும்
ஈரோட்டில் 1931ஆம் ஆண்டு விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு ஜூன் 8, 9 தேதிகளில் நடந்தது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியன் மாநாட்டுக்கு முழு பொறுப்பு ஏற்று நடத்தினார். மாநாட்டுக்கு பொருளாதார மேதையும் சுயமரியாதைக்காரருமான ஆர்.கே. சண்முகம் தலைமை தாங்கினார்.
இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாடும், மூன்றாவது சுயமரியாதை , வாலிபர் மாநாடும் இதே மாநாட்டில் நடந்தன. மாநாடு குறித்து ‘குடிஅரசு’ விரிவாக செய்திகளை பதிவு செய்திருக்கிறது.
ஊர்வலத்தில் 15,000 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் 5000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெண்கள் மாநாட்டில் 3000 பெண்களும், வாலிபர் மாநாட்டில் 2000 வாலிபர்களும் பங்கேற்றனர். இரண்டு யானைகள் ஊர்வலத்தில் வந்தன. 6 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தலைவர்கள் ஊர்வலமாக வந்தனர். பெரிய மைதானத்தில் 5 ஏக்கர் சுற்றளவில் அடைப்பு தட்டிகள் போட்டு மாநாட்டு பந்தல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடைகளும் கட்டப்பட்டிருந்தன. மாநாட்டு பந்தலில் 200 கம்பங்களில் சுயமரியாதை கொள்கைகள், புராண மரியாதைக் காரர்களின் புரட்டு வாக்கியங்கள், தேசியப் புரட்டு வாக்கியங்கள் பெரிய எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன.
மாநாட்டின் நடு மண்டபத்தில் பனகல் அரசர் படம் ஒரு பக்கமும், ஈ.வெ.ராமசாமி படம் இன்னொரு பக்கத்திலும் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தன. சுகாதார கண்காட்சி, மருத்துவம் விகிச்சை முறைகளை விளக்கும் கண்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 150 அடி நீளத்தில் தனி சமையல் கொட்டகை அமைக்கப்பட்டு, 40 அடுப்புகளில் உணவு தயாரிக்கப்பட்டன. 100 ஆதி திராவிட வாலிபர்கள் இராணுவ உடையுடன் காப்பாளர்களாக செயல்பட்டனர்.
மாநாட்டில் பங்கேற்ற பிரமுர்களின் நீண்ட பட்டியலில் பட்டுக் கோட்டை அழகிரி, எஸ். இராமநாதன்,
ப. ஜீவானந்தம் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. மாநாட்டுத் தலைவர் ஆர்.கே. சண்முகம், மாநாட்டுக்கு முதல் நாளே வந்தார். ஊர்வலமாக அவர் அழைத்து வரப்பட்டார். விருதுநகர் நகரசபை அவருக்கு வரவேற்புத் தந்தது.
சுயமரியாதை மாநாட்டில் ‘எல்லா மதங்களும் ஒழிய வேண்டும்; மதங்கள் ஒழியாத வரை சகோதரத்துவம் வளராது’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘மத நடுநிலை’ என்ற பெயரில் மத சீர்திருத்த சட்டங்களைக் கொண்டு வருவதை தடைப்படுத்துவதைக் கண்டித்தும், வர்ணாஸ்ரமக் கொள்கை ஒழிய வேண்டும் என்றும், தீண்டாமை சமூகத்தைப் பிடித்த நோய்; அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இந்தியைத் திணிப்பது வர்ணாஸ்ரமத்தைத் திணிப்பதாகும் என்றும் கதர் தேசியப் பொருளாதாரத் திட்டம், பொருளாதார வளர்ச்சிக்கு தடை என்றும் பெண்களுக்கு சொத்து உரிமை, திருமண உரிமை, விவாகரத்து உரிமை வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவகோட்டையில் ஆதி திராவிடர்கள் மீது நடத்தப்பட்ட ஜாதிவெறி தாக்குதல் குறித்து விசாரணை ஆணையம் நியமிக்கப்பட வேண்டும். மதப் பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை தரக் கூடாது; தேவைப்பட்டவர்கள் தனியாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
பெண்கள் மாநாட்டுக்கு இந்திராணி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்திவிடாமல் 30 வயது வரை படிக்க வைக்க வேண்டும். ‘பால்ய விவாகத்தை’ தடை செய்யும் ‘சாரதா’ சட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும். பெண்களை ஆசிரியர், மருத்துவத்தொழிலுக்கு மட்டும் எடுக்காமல், காவல் துறை, இராணுவத்திலும் வேலைக்கு எடுக்கவேண்டும். ஆண்களைப்போல் சொத்துரிமை வேண்டும். சேர்ந்து வாழ முடியாத கணவர்களிடமிருந்து விவாகரத்து உரிமை வேண்டும். தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் அதற்கான விண்ணப்பங்களில் ஜாதி கேட்பதை நிறுத்த வேண்டும். (அப்போது ஜாதி கேட்கப் பட்டது, ஜாதியப் பாகுபாடு கண்ணோட்டத்தில் – ஆர்.) ஜாதி மற்றும் வர்ணாஸ்ரம அடிப்படையில் நடத்தப்படும் மாணவர் விடுதிகளுக்கு அரசு உதவித் தொகையை நிறுத்த வேண்டும். இரயில் நிலையங்களில் தங்கும் அறைகள் பெண்களுக்காக தனியாக ஒதுக்கவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை ஆதரித்து நீலாவதி, சிவகாமி, குஞ்சிதம், மரகதவல்லி, நாகம்மாள், ரங்கம்மாள், ஈ.வெ. ராமசாமி பேசினர்.
வாலிபர் மாநாட்டுக்கு வரவேற்புக் குழு தலைவர்
எஸ். ஜெயராம், பி.ஏ., அரசியல் விடுதலையைவிட சமூக விடுதலையே அவசியம் என்று அவர் கூறினார்.
வாலிபர் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர் டி.வி. சோமசுந்தரம், பி.ஏ., பி.எல்., சமதர்மத்தை வலியுறுத்தி அவர் பேசினார்.
பெரியார் முழக்கம் 28092017 இதழ்